முன்னாள் பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டையா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

0

முன்னாள் பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டையா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டையாவின் மர்மம் நிறைந்த கொலையை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவன மையம் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த பொதுநல வழக்கின் மனுவில், சமீபத்தில் வெளியான அதிர்ச்சியூட்டம் சில தகவலகள் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் கொல்லப்பட்ட பாஜக அமைச்சரின் கொலையில் தொடக்கம் தொட்டே பல மர்மங்கள் இருந்து வந்தது. சிபிஐ விசாரித்த இந்த கொலை வழக்கில் 12 நபர்கள் குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றும் இந்த வழக்கின் விசாரணை சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான அசாம் கான் ஹரேன் பாண்டையா கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். பாஜக முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டையாவை கொலை செய்யும் கூலிப்படை ஒப்பந்தத்தை குஜராத் IPS அதிகாரி DGவன்சாரா தங்களுக்கு அளித்தார் என்ற சொஹ்ராபுதீன் ஷேக் தன்னிடம் கூறியதாகவும் இதன் அடிப்படையில் துளசிராம் பிரஜபாதி, நயீம் மற்றும் ஷாஹித் ஆகியோர் ஹரேன் பாண்டையாவை கொலை செய்ததாகவும் கடந்த 2018 நவம்பர் 3 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் அசாம் கான் தெரிவித்துள்ளார். இத்துடன் இந்த தகவல்களை 2010 ஆம் ஆண்டே சிபிஐயிடம் தான் தெரிவித்ததாகவும் ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாத சிபிஐ இது தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இதனை வெளியில் கூற வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த தகவல்களை கருத்தில் கொண்டும், 2013 இல் ஹரேன் பாண்டையா கொலை வழக்கில் சொஹ்ராபுதீன் ஈடுபட்டுள்ளார் என்று DGவன்சாராவே சிபிஐ இடம் தெரிவித்ததாக அளித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியையும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

இத்துடன் ராணா அய்யூப் எழுதிய குஜராத் பைல்ஸ் என்ற புத்தகத்தில் வரும் தகவல் ஒன்றையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில், காவல்துறை அதிகாரி YA ஷேக், ஹரேன் பாண்டையாவின் மரணம் ஒரு அரசியல் சதித்திட்டம் என்று கூறியதும், ஹரேன் பாண்டையாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்த கொலைக்கு முன்னதாகவே காவல்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்தனர் என்றும் அவர்களுடன் இந்த கொலையை நேரில் கண்டதாக கூறப்பட்ட சாட்சியங்களும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகளின் அடையாள ஓவியம் ஹரேன் பாண்டையாவை கொலை செய்ததாக கூறப்பட்ட அஸ்கர் அலிக்கு சற்றும் தொடர்பில்லாமல் இருந்ததும் அது அடையாளத்தை ஒத்து இருந்ததையும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இவ்வவ்ழக்கில் மீண்டுமொரு புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் இவ்வழக்கில் முன்னதாக விசாரணை நடத்திய அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் தற்போதைய மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.