மும்பையில் 3 இந்துத்வ தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதல் முயற்ச்சி முறியடிப்பு

0

மும்பையில் 3 இந்துத்வ தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதல் முயற்ச்சி முறியடிப்பு

சுதந்திர தினம் மற்றும் பக்ரீத் வர இருக்கும் நிலையில் மும்பையில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 3 இந்து தீவிரவாத அமைப்பினரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இந்த கைது மூலம் பல இடங்களில் நடக்க இருந்த தீவிரவாத தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குவியல் குவியலாக வெடிகுண்டுகளும், ஜெலட்டின் குச்சிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் வைபவ் ரவுத் என்பவர் வீட்டில் இருந்து இந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் ஹிந்து கோவன்ஷ் ரக்ஷா சமிதி அமைப்பின் உறுப்பினரும் சநாதன் சன்ஸ்தா அமைப்பின் ஆதரவாளருமாவார். இந்த சநாதன் சன்ஸ்தா அமைப்பு பிரபல பகுத்தறிவுவாதிகள் நரேந்த்திரா தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, கல்பர்கிமற்றும் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் ஆகியோரின் கொலையில் தொடர்புள்ள அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சதாரா பகுதியை சேர்ந்த மற்றொருவரான சுதன்வா கொந்தலேகர், ஸ்ரீ ஷிவா பிரதிஷ்டன் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பின் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பின் தலைவர் சம்பாஜி பிதே. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்ற பீமா கொரேகான் கலவரத்தில் தொடர்புடையவர் இந்த பிதே. இவர் மீது இரண்டு கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டவர்களில் மூன்றாம் நபர் சரத் கலஸ்கர். இவரை தீவிரவாத தடுப்பு பிரிவு(ATS) ரவுத்துடன் சேர்த்து கைது செய்துள்ளது. இவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது தொடர்பான குறிப்புக்களை ATS கைப்பற்றியுள்ளது. இந்த மூவரில் கொந்தலேகருக்கு வெடிகுண்டு தயாரிப்பதில் முன்னனுபவம் இருந்ததாகவும் இவர் மற்ற இருவருக்கும் பயிற்ச்சியளித்ததாகவும் ATS தெரிவித்துள்ளது.

UAPA சட்டத்தில் இவர்களை கைது செய்த ATS இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் ரவுத்தின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் இவ்வளவு அதிகமான வெடிகுண்டுகள் சுதந்திரதினம் மற்றும் பக்ரீத் பண்டிகை வர இருக்கும் நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதன் பின் மிகப்பெரிய சதி இருப்பதாக சந்தேகம் கொள்ளச் செய்கிறது என்று தெரிவித்துள்ளது. தற்போது இத்தனை அதிகமான வெடிகுண்டுகளை இவர்கள் தயாரித்ததின் நோக்கம் என்ன, ஒருங்கிணைந்த தாக்குதல் எதையும் நடத்த இவர்கள் திட்டமிட்டார்களா? இவர்களுக்கு பயிற்ச்சியளித்தது யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று ATS தெரிவித்துள்ளது.

இன்னும் இவர்களுக்கும் கெளரி லங்கேஷ் கொலை வழக்கிற்கும் எந்த வித தொடர்பும் இருக்கிறதா என்றும் ATS விசாரணை நடத்தி வருகிறது. இவர்களுக்கும் சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் பட்டாலும் இவர்கள் இரு வேறு பிரிவுகளில் பிரிந்து தனித்தனியே இவர்கள் இந்த சதிச் செயல்களில் ஈடுபட்டதாக கருதுவதாக ATS தெரிவித்துள்ளது. இதுவரையிலான கொலைகளில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் இப்போது வெடிகுண்டு தாயார் செய்ததால் இவர்கள் வேறு பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் ATS தெரிவித்துள்ளது.

கெளரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்ட டைரி ஒன்றில் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட வைபவ் ரவுத், தன்னை தானே பசு பாதுகாவலர் என்று அறிவித்துக் கொண்டவரும், அப்பகுதியில் உள்ள இறைச்சி விர்ப்பனையாளர்களிடம் அடிக்கடி சென்று மாட்டிறைச்சி இருக்கிறதா என்று சோதனை செய்வதை வழக்கமாக கொண்டவர் என்றும் அவரது பகுதியினர் தெரிவித்துள்ளனர். மேலும் சனாதன் சன்ஸ்தா அலுவலகத்திற்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், ரவுத் தங்களுடைய மட்டும் அல்ல, தீவிர இந்து அமைப்புகள் பலவற்றின் நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகளில் பங்கெடுத்துள்ளார் என்றும் சனாதன் சன்ஸ்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்துத்வ கொள்கை மற்றும் அதன் தர்மத்திற்காக உழைக்கும் எவரும் தங்களது அமைப்பை சேர்ந்தவராகவே சனாதன் சன்ஸ்தா அமைப்பு கருதுகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இத்துடன் தற்போது வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்ட ரவுத்திற்கு சநாதன் சன்ஸ்தா அமைப்பின் சார்பில் சட்ட உதவிகள் செய்யப்படும் என்று அதன் வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், “மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ATS அதிகாரிகள் தீவிர இந்து பக்தர்கள் வீட்டில் RDX வைத்தார்கள் என்றால் இதனை ஏன் ரவுத் விஷயத்திலும் இவர்கள் செய்திருக்க முடியாது? இதுவரை இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதனால் ரவுத்தை குற்றவாளி என்று கூறுவது ஆபத்தானது.” என்று சனாதன் சன்ஸ்தா அமைப்பு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ATS தரப்பு வழக்கறிஞர் சுனில் கொன்ஸால்வேஸ்அனுமதி கோரியுள்ளார். தங்களுக்கு கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி மும்பை, புனே, சாதாரா, சோலாபூர் மற்றும் நல்லசோபரா ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்த்த மூன்று பேர் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது என்றும் அதன் அடிப்படையில் இந்த கைதுகள் நடைபெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நடத்தப்பட்ட சோதனையில் ரவுத் வீட்டில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்களின் மொபைல் போனை சோதனையிட்ட போது அவர்களுடன் கொந்தலேகர் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ATS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இவர்களுக்கு இந்த வெடிப்பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது, இவர்களுடன் வேறெவரும் வெடிகுண்டு பயிற்ச்சி பெற்றனரா? இந்த குண்டுகளை வைத்து என்ன செய்ய இவர்கள் திட்டமிட்டனர் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க இவர்களிடம் ATS விசாரணை செய்ய வேண்டியதுள்ளது என்று கொன்ஸால்வேஸ் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளின் தரப்பு வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர், காவல்துறை இந்த மூன்று பேரை சட்டவிரோத காவலில் வைத்து கைது செய்துள்ளது என்றும் இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமலும் வாரண்ட் எதுவும் இல்லாமலும் இவர்கள் வீட்டில் காவல்துறை சோதனையிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இரு வாதங்களை கேட்ட சிறப்பு நீதிபதி அத்கர், முதற்கட்ட ஆதாரங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக மோசமான சதிச் செயலில் ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது என்றும் அத்துடன் அதனை உறுதிசெய்யும் பல ஆதாரங்களும் சிக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இருந்தும் இவர்களை 15 நாள் காவலில் அனுப்ப முடியாது என்று கூறி ஆகஸ்டு 18 ஆம் தேதி வரை இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் கலஸ்கர் மற்றும் கொந்தலேகர் ஆகியோர் தங்களை காவல்துறை தாக்கியதாக நீதிமன்றத்தில் புகாரளித்தனர். அவர்களை தாக்கிய அதிகாரிகளின் பெயர்களை நீதிபதி கேட்டதற்கு அதிகாரிகளின் பெயர் தங்களுக்கு தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான ரவுத் இது போன்ற புகாரை தெரிவிக்காத நிலையில் தன்னை காவல்துறையினர் தனது வீட்டில் இருந்து வியாழன் காலை 3 மணியளவில் கைது செய்ததாக மற்றும் தெரிவித்தார்.

Comments are closed.