முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்

0

முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு : கேள்விகளும் தெளிவுகளும்

பாராளுமன்ற தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்ற வேண்டும் என்பது தான் இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களின் எண்ணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து முஸ்லிம்களின் மனசாட்சி எழுப்பும் பல்வேறு வினாக்களுக்கு வரலாற்றுப் பூர்வமாகவும், எதிர்காலம் குறித்த விசாலமான பார்வையை கருத்தில் கொண்டும் அறிவுப்பூர்வாமான முறையில் சில தெளிவுகளை வழங்குவதே இந்த தொகுப்பின் நோக்கம்.

கேள்வி 1 :
பா.ஜ.க வை தோற்கடிக்க முஸ்லிம்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சரியான தீர்வா?
தெளிவு :
பா.ஜ.க வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தேசநலனில் அக்கறை கொண்ட யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடம் மட்டும் ஒப்படைத்துவிட்டு மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகள் எடுக்கும் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் சுயநலம் நிறைந்த்தாகவும், பொறுப்பற்றதாகவும் உள்ளது.

”பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கான மதச்சார்பற்ற கூட்டணி” என்ற முழக்கத்தோடு தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் அதற்கு நேர்மாற்றமாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்திரகான்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 243 தொகுதிகளில் தனித்து களம் காண்கின்றது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டைப் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க பலன் பெறாதா ?
80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரியளவில் செல்வாக்கு இல்லாத போதும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் ஆகிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெறாமல் அனைத்து தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ். 42 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது.
”தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடித்துவிடுவோம்” என மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு பெருமளவில் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் உள்ள 243 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை ஜெயிக்க வைப்பதற்கான வாய்ப்புகளை ஏறபடுத்திக் கொடுக்கும் முரண்பாடான இந்நிலைபாட்டை நாம் எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும்? தமிழகத்தில் காங்கிரஸ் இணைந்திருக்கும் கூட்டணி குறித்து சிலாகித்து பேசும் நடுநிலையாளர்கள்!! பலரும் இது குறித்து வாய் திறப்பதே கிடையாது.

பா.ஜ.க. மதரீதியாக தேசத்தை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் மதச்சார்பற்ற கட்சிகள், சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக இதுநாள் வரையிலும் தாங்கள் ஆட்சியிலிருந்த போது சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்விற்காகவும் தாங்கள் செய்தவற்றை கூறி வாக்கு சேகரிப்பதில்லை, மாறாக ’நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது. நீங்கள் வேறு எதுவும் சிந்திக்காமல் எங்களுக்கு வாக்களிக்கவேண்டும்’ என்று சிறுபான்மையினரின் அச்சத்தையே அறுவடை செய்ய முனைகிறார்கள். இந்த பாசிச பூச்சாண்டி பயத்தை தூண்டியே முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கின்றனர். தங்கள் கட்சியிலும் கூட முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை.

பாசிசம் என்பது ஒரு சித்தாந்தம். அது ஒரு தேர்தலுடன் தோல்வியை தழுவி விடாது. இந்த தேர்தலில் தோற்று விட்டால் அடுத்த தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்போதும் இதே பாசிச பூச்சாண்டியை காட்டி முஸ்லிம்கள் போட்டியிடுவதை தடுப்பார்களா? இவர்கள் பாசிசத்தை முற்றிலுமாக தோற்கடிக்கும் வரை முஸ்லிம்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமா?

தேசத்தில் சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் விரும்பும் மதச்சார்பற்ற வாக்காளர்களின் வாக்குகளை கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் மதச்சார்பற்ற! கட்சிகள், பா.ஜ.க.வை தோற்கடிக்கும் பொறுப்பு தங்களுக்கு கிடையாது என்பது போலவும், மாறாக, அது சிறுபான்மையினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே அப்பொறுப்பு உள்ளது என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். ஆனால், உண்மையில் தேச நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் பா.ஜ.க.வை தோற்கடிக்க பாடுபடவேண்டும். எல்லோரும் அதற்கான தியாகத்தை செய்ய வேண்டும். சிறுபான்மையினர் மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு மதச்சார்பற்ற கட்சிகளை வெற்றியடையச் செய்யவேண்டும் என்று கூறுவது ஏற்புடைய கருத்தல்ல.

அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அவர்களின் ஈகோக்களை ஒதுக்கி விட்டு ஒன்றாக இணைந்து இந்நாட்டை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். அத்தகையதொரு விசாலமான கூட்டணி நாட்டில் உருவானால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கண்ணை மூடிக் கொண்டு அக்கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கலாம். மாறாக, முஸ்லிம்களையும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் கருவேப்பிலைகளாக பயன்படுத்த எண்ணினால் அவர்களுக்கு சரியானதொரு பாடத்தை புகட்ட வேண்டியது முஸ்லிம்களின் மீது கடமையாகிறது. ஏனென்றால், கடந்த காலங்களில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு நாம் வாய்ப்பளிக்காமல் இல்லை. 60 ஆண்டு காலமாக தேசத்தை ஆள்வதற்கு ஆவர்களுக்கு வாய்பளித்த பிறகே நாம் இம்முடிவினை நோக்கி செல்கிறோம்.

கேள்வி 2 :
பா.ஜ.க விற்கு மாற்று காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் என்ற நிலைப்பாடு குறித்து
தெளிவு :
ஃபாஸிச பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் கட்சியும் அது இடம்பெற்றுள்ள கூட்டணியும்தான் என்று முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் நம்புகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்றதா? அல்லது அந்த நம்பிக்கையை விதைக்கும் ஏதேனும் காரியங்களை அக்கட்சி செய்திருக்கிறதா?

அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தேச விரோத பாசிச சக்திகளை முஸ்லிம்கள் தீர்க்கமாக எதிர்ப்பார்கள். குறைந்தபட்சம் அந்த எதிர்ப்பு போராட்டத்திலாவது காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுடன் இணைந்து நின்றுள்ளதா? நிற்குமா?. வாக்குகளை பெறுவதற்காக மென்மையான இந்துத்துவத்தை கடைபிடிக்கும் வழக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து வருவது நாம் அறிந்ததே, இத்தகைய போக்கு தற்போது அதிகரித்துள்ளது.

பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற மற்றும் மாநில கட்சிகள் தங்கள் அரசியல் அஜென்டாக்களிலிருந்து எடுத்து விட்ட அதே வேளையில் ”ராமர் கோயிலை எங்கள் ஆட்சியில்தான் கட்ட முடியும்” என்று காங்கிரஸ்காரர்கள் அறிவித்து வருகிறார்கள். அறிவிப்பு செய்தவர்கள் எந்தவித அதிகாரமும் அற்ற சாமான்யர்கள் அல்ல, மாறாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஹரீஷ் ராவத் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்கள் என்பது நாம் எளிதில் கடந்து செல்லக்கூடிய கருத்து அல்ல. மேலும், அதனை மறுத்தோ அல்லது குறைந்தபட்சம் ”அது அவரின் தனிப்பட்ட கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல” என்றோ கூட காங்கிரஸ் தலைமையிலிருந்து இன்று வரையிலும் கூட அறிவிப்பு வெளிவரவில்லை என்பதே யதார்த்தமாகும். இதன் மூலம் இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் பாஜகவை விட நாங்கள் தான் பெட்டர் என்பதை அவர்களே தெளிவுபடுத்துகின்றனர்.

”பாசிசத்தை எதிர்க்க எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பவர்கள் 60 வருடங்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்? என்பதை நாம் மறந்துவிட்டோமா?. ஃபாசிஸ சங்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் என்ன நேற்று பெய்த மழையில் முளைத்தவர்களா? நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே ஏன் அதற்கு முன்பிருந்தே அவர்கள் செயல்பட்டுக் கொண்டும், வளர்ந்து கொண்டும்தானே இருக்கிறார்கள் என எண்ணற்ற கேள்விகள் எழுகின்றது.

கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், அத்தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதா என்றால், நிச்சயமாக இல்லை என்பதையே அவர்களின் செயல்பாடுகள் நிரூபிக்கிறது. மத்திய பிரதேச தேர்தலின் போது ”பசு பாதுகாப்பு மையங்களை அமைப்போம், இராமாயண பாதை அமைப்போம்” என்று பாஜகவிற்கே சவால் விடும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. அதேபோன்று தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின், ”மாடுகளை கடத்திச் சென்றார்கள்” என்று குற்றம்சாட்டி முஸ்லிம்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது. பசு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான எந்த முயற்சியையும் மதச்சார்பற்ற! நடுநிலையான! இவர்கள் செய்யவில்லை. நிவாரணமும் வழங்கவில்லை. கடந்த 5 வருட பா.ஜ.க ஆட்சியில் முஸ்லிம்கள் சந்தித்த கொடுமைகளுக்காக காங்கிரஸ் எங்கேனும் போராட்டம் நடத்தியதுண்டா? ஆக முஸ்லிம்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்.? ஆனால் வாக்குகளை மட்டும் அவர்கள் எங்களுக்கே சிந்தாமல்

சிதறாமல் அளிக்க வேண்டும் என்று கூறுவதை என்னவென்று சொல்வது?
தேர்தல் அரசியலில் ஒதுங்கி நின்று தனது இடத்தை இழப்பதற்கு எந்த கட்சியும் தயாராகாது. ஆனால், விட்டுக் கொடுப்புகள் மற்றும் புரிந்துணர்வுகள் மூலம் கூட்டணிகளை அமைத்து அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அரசியல் கட்சிகளின் வியூகம். இதனை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. ஆனால் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கட்சிகளையும் சிறிய கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. வாய்ப்புகள் இருந்த போதும் உரிய கூட்டணிகளை அமைக்காமல் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்ததால் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்று கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடந்த 2014 தேர்தலில் இருந்து எவ்வித பாடங்களையும் பெறாமல் காங்கிரஸ் அதே தவறை மீண்டும் செய்கின்றது.

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதை மட்டுமே இலக்காக கொள்ளாமல், கொள்கையளவில் இந்துத்துவத்தை தீவிரமாக எதிர்த்தால் மட்டுமே தேசத்தையும் தங்களையும் இவர்களால் காப்பாற்ற முடியும்.

கேள்வி 3 :
முஸ்லிம்களின் வாக்குகள் பிரிவதால் பாஜக வெற்றி பெற்று விடும் என்பது குறித்து

தெளிவு :
முஸ்லிம் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலோ அல்லது சமுதாயநலன், பிரதிநிதித்துவம், அங்கீகாரம் சார்ந்து இதர கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலோ மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடுமே என்ற கவலை பலருக்கும் உண்டு.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் வெற்றி வேட்பாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 2014 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளித்தும் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாக்களித்தும் திமுக தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளை மறு சீரமைப்பு என்ற பெயரில் பிரித்தும் தனி தொகுதிகளாக மாற்றியும் சதிவேலை நிறைவேற்றப்பட்டு விட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை விடுத்து இனி வார்டுகளில் கூட முஸ்லிம்கள் வெற்றி பெற முடியாத நிலைதான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் கூட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் இன்று தயாரில்லை. ஆனால் அக்கட்சி தலைவர்கள் தாங்கள் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.

எனவே, முஸ்லிம்கள் மட்டும் வாக்குகளை பிரித்து வழங்குவதால் பாஜக வெற்றி பெற்று விடும் என்பது அறிவுக்கு பொருந்தாத வாதமாகும். பாசிச எதிர்ப்பில் தங்களின் தோல்விகளை மறைப்பதற்காகத் தான் அரசியல் கட்சிகள் இன்று பாஜக வெற்றி பெற்று விடும் என்று கூறி முஸ்லிம்களை பயமுறுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் என்பது இந்தியா முழுவதும் நடைபெறக்கூடியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டும் ஆட்சியை அமைக்க முடியாது. 1989 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தோற்ற பின்னரும் திமுக அங்கம் வகித்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை அமைத்தது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதும் அதிமுக ஆட்சியில் பங்குபெறவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கேள்வி 4 :
முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை; முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரே கூட்டணியில் நின்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து

தெளிவு :
சமூகத்தின் ஒற்றுமை அவசியம் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், எது ஒற்றுமை எப்படி ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பதுதான் இங்கு முக்கியமானது.
மக்கள் ஆதரவு பெற்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கலந்து பேசி சமூகத்தின் நலனிற்காக கோரிக்கைகளை அரசியல் கட்சிகளிடம் முன் வைத்து அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் கொடுக்கும் போது அந்த கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆதரவு கொடுக்கலாம்.
இதற்கு மாற்றமாக, யாருடனும் ஆலோசனை செய்யாமல் எந்த கோரிக்கையும் வைக்காமல் ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்கிவிட்டு மற்ற முஸ்லிம் கட்சிகளும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்குதான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறுவதை ஒற்றுமை என்று கூற முடியாது. இது சமுதாயத்தை அடகு வைக்கும் செயலாகும்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதும் தவறான வாதமாகும். முஸ்லிம் ஓட்டுகள் ஒரே இடத்தில குவிவது எதிரிகளின் பிரச்சாரத்திற்கு கூடுதல் பலன் சேர்க்கும். இன்னும் சொல்லப்போனால் இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைப்பதற்கு (Hindu Polarisation) இது வழிவகுக்கும். ”முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள், இந்துக்களே ஒன்றுபடுங்கள்” என்று இந்து வாக்குகளை ஒரே இடத்தில் குவிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும். மேலும் நாம் அனைவரும் ஒரே கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலையில் மற்ற கட்சிகளிடம் நமது பேரம் பேசும் திறன், அதாவது லாபியிங் (Lobbying) செய்வது குறைந்து விடும். சமூக நலனிற்கான எவ்வித கோரிக்கையும் வைக்காமல் உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நாம் ஆதரவளிப்பது அறிவார்ந்த நிலைப்பாடாக இருக்காது. அவ்வாறு செய்வதனால் எதிர்கால அரசியலில் நம் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் என்பது காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை நினைவில் கொள்க.

கேள்வி 5 :
கூட்டணி நிலைப்பாடுகள் மற்றும் காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறும் கூட்டணி குறித்து

தெளிவு :
ஒரு சமூகம் வலிமையடைய அதிகாரத்தில் போதிய பங்கேற்பு அத்தியாவசியம். சமூகத்தை சக்திப்படுத்தும் அடிப்படை காரணிகளில் அதிகாரமும் ஒன்று. அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதே முஸ்லிம் சமுதாயம் முழுமையாக சக்திப் பெறாததற்கு காரணமாகும்.

அதிகாரத்தில் பங்கேற்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானது முஸ்லிம்கள் தங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடன் இணைந்து அமைப்பாக அணிதிரள்வது, தங்களது பொதுவான கோட்பாடுகளுக்கு முரண்படாத முக்கிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவது. ஒத்த கருத்துடையவர்களுடன் ஓர் அணியாக திரள்வது என்பது இயலாத சூழலில் முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனியாக அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

துவக்கத்தில் அந்த அமைப்புகள் தனித்து போட்டியிடுவது அதனுடைய வாக்குபலத்தையும், பொது சமூகத்திடம் தங்களது செல்வாக்கையும் நிரூபிப்பதாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து தனித்து போட்டியிடுவது நேரம், பொருள், மனிதவள விரயத்திற்கு காரணமாகிவிடும். ஆதலால் தேர்தலில் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கும், பொதுவான கொள்கைகளுக்கு முரண்படாத கட்சிகளோடு இணைந்து தேர்தலில் களம் காண்பது அவசியமாகிறது. இந்தியா போன்ற பல்வேறு மாறுபட்ட கலாச்சார, மத, இன, ஜாதி மக்கள் வாழும் தேசத்தில் கூட்டணி என்பது முஸ்லிம்கள் பிற சமூக மக்களோடு கலப்பதற்கும், இணங்கி வாழ்வதற்கும் பேருதவியாக இருக்கும்.
காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறும் கூட்டணி

தேர்தல் கூட்டணி என்பது எல்லாக் காலக்கட்டங்களிலும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. உரிய பிரதிநிதித்துவம், அங்கீகாரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த கூட்டணி மாறுபடும். முஸ்லிம்கள் பா.ஜ.கவோடும், அக்கட்சிசார்ந்திருக்கும் கூட்டணியோடும் எந்த உறவையும் வைத்துக் கொள்ள இயலாது. இது எக்காலக்கட்டத்திற்குமான கொள்கை. இதில் மாற்றம் என்பது கிடையாது. மதச்சார்பற்ற கட்சிகளை பொறுத்தவரை முஸ்லிம் சமுதாயத்தின் நலன், பிரதிநிதித்துவம், அங்கீகாரம் ஆகியவற்றைப் பொறுத்தே கூட்டணியை தீர்மானிக்க முடியும். இது புதிய வழிமுறை அல்ல. அனைத்து சமுதாய அரசியல் கட்சிகளும் இதைத் தான் கடைப்பிடித்து வருகின்றன. இந்த அளவுகோலை வைத்து பா.ஜ.க அல்லாத எந்த கூட்டணியையும் தீர்மானிப்பதற்கான உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு. எல்லா காலங்களிலும் ஒரே கூட்டணியை சார்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் முஸ்லிம்களுக்கு கிடையாது.

முஸ்லிம்களின் நலன்களை புறக்கணித்தல், அங்கீகாரம் அளிக்க மறுத்தல், முஸ்லிம்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்காதது ஆகியவற்றில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளனர். சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் எனும் வெற்று வாக்குறுதிகளை வழங்கி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்றே மதச்சார்பற்ற கட்சிகள் கருதுகின்றன. இந்த அரசியல் கட்சிகளின் மாயவலையில் முஸ்லிம் சமுதாயம் ஒவ்வொரு முறையும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பார்வை மாற வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் பலகீனத்தையும், பய உணர்வையும் இவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இக்கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

மொத்த அதிகாரத்தையும் பெரும்பான்மை என்ற பெயரில் ஒரே கட்சியிடம் குவிக்க வேண்டும் என்ற வெகுஜன பார்வை ஆபத்தானது. அது நமக்கு எதிராகவே முடியும். எதேச்சதிகாரத்தையும், சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும், மக்கள் விரோத போக்கையும் அது உருவாக்கிவிடும். ஆகவே முஸ்லிம்கள் தங்கள் நலன் சார்ந்து, உரிமைகள் சார்ந்து மாற்றுக் கட்சிகளை தேடவேண்டும்.
கூட்டணி வரலாறு
இந்திய அரசியலில் கூட்டணி கணக்குகள் தேர்தலுக்கு தேர்தல் மாறி, மாறியே வந்துள்ளன. எந்த கட்சியும் நிரந்தரமான கூட்டணிகளை அமைத்தது கிடையாது. அதிகாரப் போட்டியில் தங்களுக்கு எது சாதகமோ அதனையே அவை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. உ.பியில் எதிரும், புதிருமாக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் தற்போதைய மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இடைத்தேர்தலில் இக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தற்போது அங்கு தனித்து போட்டியிடுகிறது. கேரளாவில் பரஸ்பரம் எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஆகவே எல்லா தேர்தல்களிலும் ஒரே கூட்டணி தொடரவேண்டும் என்பது கட்டாயமல்ல.
காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை அது அரசியல் மையப்படுத்தப்பட்ட சமூகம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை வரை அதிகாரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்பது கூடுதல், குறைவாக இருந்து வந்தது. அரசியல் நிர்ணய உரிமை சபைகளில் முஸ்லிம்களுக்கு உரிய இடமிருந்தது. இத்துறைகளிலெல்லாம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செல்வாக்கைப் பெற்றிருந்தது. அதாவது,

இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக அதிகார மையங்களில் இடம் பிடித்தது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து முஸ்லிம்கள், அதிகார மையங்களிலிருந்து அகற்றப்பட்டார்கள். இந்தியாவிலேயே வாழ்ந்து தங்களது உரிமைகளை பெறலாமென்று தீர்மானித்த பெரும்பாலான முஸ்லிம்கள் அடித்தட்டு மக்களாவர். அவர்களை வழிநடத்தவோ, முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்லவோ திறமையான தலைமை அன்று முஸ்லிம்களிடம் இல்லை. இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களது தலைமையை இழந்தனர் என்பது தான் பிரிவினை ஏற்படுத்திய மிகப் பெரிய துயரமாகும். இந்தியாவில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக திகழ்ந்த முஸ்லிம் லீக் கட்சி கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களோடு சுருங்கி விட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர்கள் அடைக்கலம் தேடும் நிர்பந்தம் ஏற்பட்டது. பல தேர்தல்களிலும் எதனையும் எதிர்பார்க்காமல் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வந்தனர். தென்மாநிலங்களைப் பொறுத்த வரை தமிழகத்தில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தும், திராவிட கட்சிகளில் அங்கம் வகித்தும் தங்களது உழைப்பை அக்கட்சிகளுக்கு நீண்ட காலம் செலவிட்டனர். எனவே அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும், அங்கீகாரமும் அளிப்பதும், அவர்களை அதிகாரப்படுத்துவதும் அக்கட்சிகளின் கடமையாகும். ஆனால், அக்கட்சிகள் தற்போதைய மக்களவை தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டன. இவ்வாறு முஸ்லிம்கள் மாற்றுக் கட்சிகளை தேடும் நிர்பந்தத்தை இக்கட்சிகளே ஏற்படுத்திவிட்டு அவர்களை குற்றம் சாட்டுவதில் என்ன அர்த்தம் உள்ளது?

பிரதிநிதித்துவம் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம்
தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை பிரதிநிதித்துவம் மற்றும் குறைந்த பட்ச செயல்திட்டத்தின்

அடிப்படையிலேயே அமைய முடியும். அது கொள்கை சார்ந்த கூட்டணியாக இருக்க முடியாது. ஏனெனில் தற்போது கூட்டணி அமைத்திருக்கும் மதச்சார்பற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் இடையே கொள்கை அளவில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. அவை பிரதிநிதித்துவம் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் காங்கிரஸுக்கு, இடதுசாரிகள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் ஆதரவளித்தனர். அதை ஏன் முஸ்லிம் சமுதாயம் கடைப்பிடிக்கக் கூடாது?

பா.ஜ.க அல்லாத கட்சிகளுடன் பிரதிநிதித்துவம் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் கூட்டணி அமைத்துக் கொள்வதே முஸ்லிம்களின் நலனுக்கு ஏற்றது.
ஒரு சீட் மட்டும் பெறுவது குறித்த நிலைபாடு?

முஸ்லிம்களின் சதவீதத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதே நேரத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அத்தகு நிலையை எட்டிப்பிடிக்க துவக்க காலங்களில் கூட்டணியில் ஒரு சீட்டு பெற்று போட்டியிடுவதும் தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் இன்று கூட்டணியில் முஸ்லிம்களால் வழிநடத்தப்படும் கட்சிகள் ஒரு இடத்தை பெறுவது கேலியாக பார்க்கப்படுகிறது. ஒரு இடத்தை வைத்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

ஒரு சீட் என்பது இந்திய வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளதை நாம் மறந்துவிடவேண்டாம். நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக இருந்த போதும் துணிச்சலாக உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் இருக்கின்றார்கள். சுயேட்சையாக வெற்றிப் பெற்ற மதுகோடா ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரானார். கர்நாடகா மாநிலம் பெங்களூர் பி.பி.எம்.பி மாநகராட்சியில் ஒரு வார்டில் வெற்றிப் பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் முஜாஹித் பாஷா, சுகாதாரத்துறை தலைவராக பொறுப்பேற்று பல சேவைகளை புரிந்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறார். ஒரு சீட்டும், இரண்டு சீட்டெல்லாம் கேவலம் அல்ல. திமுக கூட்டணியில் கூட தேசிய கட்சிகளான இடதுசாரிகள் தலா 2 சீட்டுகளில் தான் போட்டியிடுகின்றனர். மக்களுக்கு சேவையாற்றும் திறன் படைத்த, மக்களுக்காக குரல்கொடுக்கவும், உரிமைகளுக்காக போராடவும் வலிமை படைத்தவர்கள் ஒருவராக இருந்தாலும் அவர்கள் வெற்றி பெறுவது சமூகத்திற்கு தேவையே.
மாநில கட்சிகள் தேர்தலுக்கு பின் பாஜக ஆதரவு நிலைப்பாடு?

தேர்தலுக்கு முன் உள்ள பாஜக எதிர்ப்பு அரசியல் தேர்தலுக்கு பின்னும் அதே வீரியத்தோடு இருக்கும் என்று மாநில கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கடந்த காலங்கள் சில கசப்பான பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜக வோடு தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துள்ளது. ஆதலால் எந்தவொரு மாநில கட்சிகளும் அத்தகையதொரு நிலைப்பாட்டை நிரந்தரமாக எடுத்தது கிடையாது. நாம் முன்னமே குறிப்பிட்டது போல் மாநில கட்சிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளின் இலக்கும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே தவிர இந்துத்வ செயல்திட்டத்தை வீழ்த்துவது கிடையாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பாஜக எதிர்ப்பு அரசியல் என்பது இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் நிலைப்பாடு மட்டுமே. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல என்பதே கடந்த கால வரலாறாகும். எதிர்காலத்தில் இதில் மாற்றம் இருக்கும்பட்சத்தில் அனைவருக்கும் சந்தோசமே.

முடிவுரை :
▪ முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராவிட்டாலும்,
▪ முஸ்லிம்களின் எந்தவொரு கோரிக்கைகளையும் அங்கீகரிக்காவிட்டாலும்,
▪ பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்த கட்சிகள் தங்களது கட்சியின் வேட்பாளராக ஒரு தொகுதியில் கூட முஸ்லிமை நிறுத்தாவிட்டாலும்,
▪ முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக குரல் உயர்த்தாவிட்டாலும்,
ஃபாசிச பாஜகவை மட்டுமே அடிப்படையாக கொண்டு, முஸ்லிம் சமூகம் இக்கட்சிகளையும், கூட்டணியையும் ஆதரிக்கும் நிலைப்பாடு விவேகமானதா?
மாறாக முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் அளித்திருக்கும் கட்சிக்கும், கூட்டணிக்கும் ஆதரவளிப்பதே விவேகமான நிலைப்பாடாக இருக்க முடியும்.

மாற்று சிந்தனைகளோ அல்லது முயற்சிகளோ இல்லாமல், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு, கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் எதிர்மறை அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டு, பாஜக எதிர்ப்புடன், முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் தரக்கூடிய கட்சிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யும் நேர்மறை அரசியலுக்கு துவக்கம் குறிக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
ஒரு நூற்றாண்டுகாலம் பயணித்துவிட்ட பாஜக, இன்னும் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கும். பாஜக-வை தேர்தலில் வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றுவதை மட்டுமே இலக்காக கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளால் இந்துத்துவ சித்தாந்த அடிப்படையிலான ஆர்.எஸ்.எஸ்.ஸை பின்னணியாகக் கொண்ட பாஜக-வை எதிர்க்கவோ, தடுத்து நிறுத்தவோ கூடமுடியாது. ஏனெனில் 80 சதவீதம் இந்துக்களின் ஓட்டை பெறுவதற்கான அரசியலில் இருவரும் ஒரே யுக்திகளையும், கொள்கைகளையுமே கடைபிடித்து வருகின்றனர். கட்சிகள் மாறினாலும் கொள்கைகள் மாறப்போவதில்லை.

பா.ஜ.க. ஆட்சி செய்த கடந்த 5 வருடங்களில் சிறுபான்மையிருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநியாயங்களை தடுத்து நிறுத்தாமல், அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பாமல், குறைந்தபட்சம் கண்டனங்கள் கூட தெரிவிக்காமல் 41/2 வருடங்களாக வேடிக்கை பார்த்த கட்சிகள், தேர்தலை ஒட்டிய 6 மாதங்களுக்கு மட்டும் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்வதும், அதனை மக்கள் நம்புவதும் வேடிக்கையாக உள்ளது.
மறுபக்கம், 5 வருடங்களில் 41/2 வருடங்களுக்கு மக்கள் நல் வாழ்விற்கான போராட்ட அரசியலை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் வேட்பாளராக நின்று போட்டியிடும் சமயத்தில் நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கின்றீர்கள் என கேட்பது வேடிக்கையாகவே உள்ளது. முஸ்லிம்களின் இத்தகைய தெளிவற்ற அரசியல் பார்வையினை தேர்தல் நேர பாதுகாவலர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
5 வருடங்களுக்கு மேல் பல புத்தகங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் படித்து பட்டம் வாங்கிய மருத்துவர்களின் மருத்துவ அறிவை வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக்கில் ஒரு கட்டுரையை படித்துவிட்டு குறைசொல்லுவது எப்படி பொருந்தாத விமர்சனமாக இருக்குமோ, அதேபோல எழுத்துக்களின் வாயிலாக மட்டுமே அரசியலை அறிந்துகொள்ளும் பலரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாக களத்தில் எதிரியை எதிர்கொள்ளும் SDPIன் தலைவர்களை விமர்சிப்பதும் பொருந்தாததாகவே உள்ளது.

அரசியலில் எதிர்கட்சிகளின் விமர்சனம் என்பது இயல்பானதே. ஆனால் சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்புபவர்கள் அவற்றை சீர்தூக்கி பார்க்க வேண்டும். பொய்களும், புரளிகளும் புரையோடிக் கிடக்கும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுபவற்றில் பெரும்பான்மையானவை தனிப்பட்ட பகையிலும், பொறாமையிலும் சித்தரிக்கப்படுபவையே. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவது நீதியாக இருக்காது.
இந்தியா முழுவதும் பயணம் செய்து வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலைகளை அறிந்து, ஆய்வு செய்து, அரசியல் ரீதியாக அவர்களை சக்திபடுத்தவும், பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக அவர்களை முன்னேற்றவும், அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் போராடி வரும் SDPI கட்சியை, ஆட்சியை பிடிப்பதையும், ஆட்சியில் அமர்ந்த பின் தேர்தலில் முதலீடு செய்த கோடிகளுக்கு லாபம் பார்ப்பதையும் மட்டுமே நோக்கமாக கொண்ட வழக்கமான தேர்தல் அரசியல் கட்சிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது முறையாகாது என்பதை நெட்டிசன்கள் உணர வேண்டும்.

பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதே நேரம் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட இந்திய நாட்டில் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்லும் மக்கள் சுயஉரிமைகளற்ற விளிம்புநிலை சமூகமாக மாற்றப்படுவார்கள் என்பதே நமக்கு வரலாறு கற்றுத்தரும் பாடமாகும். தங்களைப் பாதுகாக்கும், முன்னேற்றும் பொறுப்பை பிற கட்சிகளின் மீது சாட்டிவிட்டு, சொகுசாக வாழ நினைக்கும் முஸ்லிம்களுக்கு இறுதிவரை அவர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், பின்னடைவையுமே பரிசளிப்பார்கள்.

-அமீர்

Comments are closed.