முஸ்லிம்களுக்கு வீடு தர மறுக்கும் மகாராஷ்டிரா ஹவுசிங் சொசைடி

0

குஜராத்திகள் அதிகமாக வாழும் மகாராஷ்டிராவின் வாசை பகுதியில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைடியினர் தங்களது குடியிருப்பில் முஸ்லிம்களுக்கு வீடு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 16 ஃப்ளாட்டுகள் உள்ள இந்த குடியிருப்பில் தற்போது ஒன்று முஸ்லிம் குடும்பம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த குடியிருப்பில் வசிக்கும் 11 குடும்பத்தினர் இனி எந்த முஸ்லிம் குடும்பத்திற்கும் அங்கு வீடு விற்பனை செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த சந்திப்பு நடைபெற்ற நேரத்தில் அந்த குடியிருப்பில் உள்ள இரண்டு முஸ்லிம் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவின் Happy Jivan Co-operative Housing Society இல் வசித்து வந்தவர் கண்டாபேன் படேல். இவர் தனது வீட்டை கண்ணாடி விற்பனையாளரான முஸ்லிம் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த அந்த குடியிருப்பில் உள்ள மற்ற 11 வீடுகளின் உரிமையாளர்கள் கண்டாபேன் படேல் மற்றும் அவரது மகன் ஜிக்னேஷ் படேல் ஆகியோருக்கு கடிதம் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தங்களது கடிதத்தில் “உங்கள் வீட்டினை நீங்கள் ஒரு முஸ்லிமிற்கு விற்கப் போவதாக அறிந்தோம். இதனை நீங்கள் செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறியுள்ளனர். மேலும் அவரது வீட்டினை தங்களது சமூகத்தை சேர்ந்த யாருக்காவது விற்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனை வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து கண்டாபேன் படேலின் குடும்பத்தினர் ஹவுசிங் சொசைட்டியின் துணை பதிவாளரருக்கும் காவல்துறையினருக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து ஜிக்னேஷ் படேல் கூறுகையில், அந்தக் குடியிருப்பின் முதல் மாடியில் அமைத்துள்ள தங்களின் 710 சதுரடி வீட்டை விகார் அஹமத் கான் என்பவருக்கு விற்றுள்ளதாகவும் இதற்கான முன்பணமாக ரூபாய் ஒரு லட்சத்தை அவர் தங்களிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தாங்கள் கேட்ட விலைக்கு கான் வீட்டை வாங்க சம்மதிக்க அவருக்கு தங்கள் வீட்டை விற்றதாகவும் தற்போது சொசைடியில் உள்ளவர்கள் இவ்வீட்டைனை விற்க ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இந்த சொசைட்டியின் செயலாளரான ஜிதேந்திர ஜெயின் இது குறித்து கூறுகையில், இவர்களின் இந்த முடிவு குடியிருப்பில் உள்ள பெரும்பாலானவர்களால் ஆதரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். “இந்த குடியிருப்பின் முதல் மாடியில் வசிப்பவர்களுக்கு இந்துக்கள் அல்லாதோருடன் பிரச்சனை உள்ளது. இதனை நாங்கள் சரி செய்வோம்” என்று கூறியுள்ளார்.

இந்த முதல் மாடியில் ஐந்து சைவ உணவு பழக்கம் உள்ள குஜராத்திகள் வசிப்பதாகவும் அவர்களுக்கு அசைவ உணவு உண்பவர்கள் அங்கு குடியேறுவதில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து விகார் அஹமத் கானிடம் கருத்து கேட்ட போது, இது போன்ற நிராகரிப்பை தான் முன்பும் அனுபவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Comments are closed.