முஸ்லிம்களை அடித்தே படுகொலை செய்யும் கலாச்சாரத்தை தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

0

பத்திரிகை செய்தி

பா.ஜ.க ஆளும் மாநிலங்களை போன்று முஸ்லிம்களை அடித்தே படுகொலை செய்யும் கலாச்சாரத்தை தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

உத்திரபிரதேச மாநிலத்தை சார்ந்த சுஹைல் என்ற இளைஞர் கோவையில் வீடுவீடாக சென்று பெட்ஷீட் வியாபாரம் செய்து வந்தார். குனியமுத்தூர் பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கும் நோக்கத்துடன் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சுஹைல் பணம் கொடுக்க மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த பொருளால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே சுஹைல் துடிதுடித்து இறந்துள்ளார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களை அடித்தே படுகொலை செய்யும் கலாச்சாரம் தமிழகத்திலும் தற்போது துவங்கியுள்ளதை தமிழக அரசும், காவல்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொலை செய்த இந்துமுன்னணி அமைப்பைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் மீது பள்ளிவாசலை சேதப்படுத்தியது, சர்ச்சை சேதப்படுத்தியது, சசிகுமார் சவ ஊர்வலத்தில் கலவரம் செய்தது போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. 1997-ம் ஆண்டு இதே பகுதியில் யூசுப் என்ற முஸ்லிம் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட வழக்கிலும் இவர் சம்மந்தப்பட்டவர் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் கவனத்தில் கொண்டு இதன் பின்னணி என்ன என்பதை முழுமையாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் RSS, இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார அமைப்பை சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்கும் மக்களிடத்தில் மத உணர்வுகளை தூண்டி மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்திய ஹெச்.ராஜா-வின் செயல்பாடுகள் இதற்கு உதாரணமாகும். பா.ஜ.க ஆளும் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் படுகொலை கலாச்சாரத்தை நிகழ்த்த துடிக்கும் சங்பரிவார அமைப்பை சார்ந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசும், காவல்துறையும் ஒடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.