முஸ்லிம்களை கொலை செய்யுமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்த பத்திரிகையாளரின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

0

இந்துத்வாவின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் பத்திரிகையாளருமான ஜாக்ரதி சுக்லா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர், இந்துக்கள் ஆயுதம் தாங்கி முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்று இந்து முஸ்லிம் என்ற வகுப்பின் பெயர்களை குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தார்.

இவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்ப, தான் இந்த பதிவில் தீவிரவாதிகளை மட்டுமே கொலை செய்யும்படி குறிப்பிட்டதாகவும் முஸ்லிம்களை அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.  ஆனால் இவரது இந்த பதிவு நடுநிலை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் வன்முறையை தூண்டும் இவரது பக்கத்தை முடக்க வேண்டும் என்றும் ட்விட்டருக்கு வேண்டுகோள் வைத்தனர். இன்னும் இவரின் இந்த பதிவிற்காக டில்லி காவல்துறை அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வேண்டுகோள் வைத்தனர்.

இவரின் இந்த பதிவிற்கு அதிகப்படியான எதிர்ப்புகள் கிளம்பவே, ட்விட்டர் இணையதளம் இவரைது கணக்கை முடக்கியது. அவர் சர்ச்சைக்குரிய தனது பதிவை நீக்கும்வரை அவரது கணக்கு முடக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவிக்க அதற்கு சம்மதம் தெரிவித்து அவர் தனது பதிவை நீக்கியதாக தெரிகிறது.

சமீபத்தில் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி வன்முறை தூண்டும் விதத்தில் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்வது வாடிக்கையாகி வருகிறது. முன்னதாக ஆஜ் தக் செய்தி நிறுவனத்தின் இரண்டு பத்திரிகையாளர்களான ரோஹித் சார்தனா மற்றும் GPS சிப் புகழ் ஸ்வேதா சிங், காஸ்கஞ் வன்முறை தொடர்பாக போலியான கருத்துக்களை பதிவு செய்தது பலரது கண்டனத்திற்கு உள்ளானது.

Comments are closed.