முஸ்லிம்களை பிடிக்கும் என்பதால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட பெண்: பாஜக நிர்வாகி கைது

0

கர்நாடகா மாநிலம் சிக்கமகளுறுவை சேர்ந்தவர் 20 வயது பி.காம் மாணவி தன்யாஸ்ரீ. இவர் சந்தோஷ் என்ற தனது நண்பருடன் கடந்த வெள்ளிக்கிழமை வாட்ஸ்அப் மூலம் சாட் செய்து கொண்டிருக்கையில் மக்கள் தேவையற்ற சாதி மத மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார். இதற்கு சந்தோஷ் இவை அனைத்தும் தேவையான ஒன்று என்பது போன்று பதிலளித்துள்ளார்.

இவர்களின் இந்த சாட் முஸ்லிம்களை நோக்கி செல்கையில், தனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் என்று தன்யாஸ்ரீ கூறியுள்ளார். அப்போது அவரது நண்பர் முஸ்லிம்கள் மோசமானவர்கள் என்றும் அவர்கள் லவ் ஜிஹாத் செய்பவர்கள் என்றும் கூறி முஸ்லிம்களிடம் நெருக்கம் காட்ட வேண்டாம் என்று எச்சரித்ததாக தெரிகிறது. மேலும் சந்தோஷ் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தன்யாஸ்ரீயுடன் தான் பேசியவற்றை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பல வலதுசாரி இந்து அமைப்புகளின் வாட்ஸ்அப் குழுமங்களில் பகிர்ந்துள்ளார்.

சங்க்பரிவார அமைப்பை சேர்ந்த சிலர் இந்த படத்தை மேலும் பரப்பி அப்பெண்ணின் பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளனர். அத்துடன் அவர் வேறொரு ஆணுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். இதனையடுத்து பாஜக இளைஞரணித் தலைவர் அணில்ராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட இந்துத்வ கும்பல் ஒன்று அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று அப்பெண் மற்றும் அவரது தாயருடன் கடுமையாக சண்டையிட்டுள்ளது. அப்பெண் முஸ்லிம் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார் என்றும் இது லவ் ஜிஹாத் வழக்கு என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் முஸ்லிம்களுடனான அவரது நட்புக்களை தன்யாஸ்ரீ நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்த கும்பல் எச்சரித்துள்ளது.

இந்த பிரச்சையினால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட தன்யாஸ்ரீ துக்கத்தில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். தனது இந்த முடிவிற்கு காரணமான சம்பவம் மற்றும் நபர்கள் குறித்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர் அப்பகுதி பாஜக இளைஞர் அணித்தலைவர் அணில்ராஜ் ஐ கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தோஷ் மற்றும் மேலும் மூவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுளளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிக்கமகளுறு காவல்துறை கண்காணிப்பாளர் M.அண்ணாமலை பாஜக இளைஞரணித் தலைவர் அணில் ராஜ் உட்பட பல இளைஞர்கள் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து தன்யாஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இவர்களின் இந்த செயலை தயவு செய்து Moral Policing என்று கூற வேண்டாம் என்றும் இது Moral Goondaism என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண்ணின் சாட் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்டை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.