முஸ்லிம் இளைஞர்களை கொன்றவர்களுக்கு பிணை: அவர்கள் மதத்தின் பெயரால் தூண்டப்பட்டனர் என்று கூறிய நீதிபதி

0

கடந்த 2014  ஜூலை மாதம் புனேயில் மொஹ்சின் சாதிக் ஷேக் என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு பாம்பே உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மேலும் இவர்கள் கொலை செய்யப்பட்டவரை பகை காரணமாக கொல்லவில்லை என்றும் இவர்கள் மத்தத்தின் பெயரால் தூண்டப்பட்டனர் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில், கொலை நடந்த தினத்தில் வலதுசாரி இந்து அமைப்பான ஹிந்து ராஷ்டிர சேனா என்கிற அமைப்பு புனேவின் ஹடஸ்பர் பகுதியில் கூட்டம் ஒன்றை நடத்தி சிவாஜி, முன்னாள் சிவ சேனா அமைப்பு தலைவர் பால் தாக்கரே மற்றும் சில இந்துக் கடவுள்களின் சோடிக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில், அதன் தலைவர் தனன்ஜை தேசாய் ஆத்திரமூட்டும் உரையை ஆற்றியுள்ளார். இதில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தூண்டப்பட்டு வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகளுடன் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற மொஹ்சின் மற்றும் ரியாஸ் என்ற இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த இருவரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்தவர்கள். இவர்கள் இருவரும் இரவு தொழுகை முடித்து வரும் வேலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் ரியாஸ் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளார். ஆனால் மொஹ்சின் ஷேக் அவருக்கு ஏற்ப்பட்ட காயங்களால் உயிரிழந்தார்.

இந்நிகழ்வை நேரில் பார்த்த சாட்சிகள், இந்த கொலை செய்தவர்கள் விஜய் காம்பிர், ரஞ்சித் யாதவ் மற்றும் அஜய் லால்கே ஆகியோர் என்று அடையாளம் காட்டியுள்ளனர். இதனையடுத்து இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது கொலை மற்றும் கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர்களின் பிணை விண்ணப்பங்கள் செசன்ஸ் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தை இவர்கள் நாடினர்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மிருதுளா பட்கர், இவர்கள் மூவரும் இவ்வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற வாதத்தை மறுத்தார். ஆனால் இவர்கள் பங்கு பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தேசாயின் உரையை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத ரீதியில் தூண்டப்பட்டதாள் தான் இந்த கொலை செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெற்றதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொலை செய்யப்பட்டவர் மீது தனிப்பட்ட விரோதமோ வேறு எந்த ஒரு நோக்கமோ இல்லை என்றும் இவர்களால் கொலை செய்யப்பட்டவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதனால் தான் அவரை இவர்கள் தாக்கி கொலை செய்தனர் என்று கூறி இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து மொஹ்சினுடன் தாக்கப்பட்ட ரியாஸ் கூறுகையில், தான் தாடி வளர்காததாலும், தன தலையில் தொப்பி இல்லாததாலும் தான் தப்பித்ததாகவும் மொஹ்சினின் தோற்றம் அவர் முஸ்லிம் என்று அடையாலப்படுத்தியதால் அவரை கொலைகார கும்பல் அடித்துக் கொன்றுவிட்டனர் என்று கூறியிருந்தார்.

மொஹ்சினின் கொலைக்கு பின்னர் வலதுசாரி இந்து அமைப்பினர் தங்களுக்கிடையே “முதல் விக்கட் விழுந்துவிட்டது” என்று குறுந்தகவல் அனுப்பி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.