முஸ்லிம் என்று நினைத்து சீக்கியர் மீது கார்யேற்றிய இனவெறியர்கள் – அமெரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்கள்

0

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு மேற்குலகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இன வெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. பிரிட்டன், ஃபிரான்ஸ், அமெரிக்காபோன்ற நாடுகளில் இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது போன்ற தாக்குதல்களில் முஸ்லிம்கள் மட்டும் அல்லாது சீக்கியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

 தலைப்பாகை தாடியுடன் காணப்படுவதால் அவர்களும் முஸ்லிம்கள் என்று நினைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தற்பொழுது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்நோ பகுதியில் 68 வயதான சீக்கிய முதியவர் கார் ஏற்றி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

அம்ரிக் சிங் என்பவர் அதிகாலை 6:30 மணிக்கு தனது பணிக்கு செல்வதற்காக காத்திருந்தார். நீல நிற தலைப்பாகையும் வெள்ளை தாடியும் உடையவராக காணப்பட்ட அம்ரிக் சிங்கை கண்ட இரண்டு வெள்ளையர்கள் அவருக்கு முன் தங்கள் காரை நிறுத்தி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளனர். நிலைமையை உணர்ந்த சிங் தன்னை பாதுகாக்க அங்கிருந்து நகர முயன்றுள்ளார். உடனே அவரை தங்களின் காரை கொண்டு இடித்த இனவெறியர்கள் அவரை முகத்திலும் தலையிலும் கடுமையாக தாக்கினர்.

தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள் “இங்கு ஏன் நீ வந்தாய்?” என்று கூறியே தாக்கியுள்ளனர். தாக்குதலில் நிலைகுலைந்த சிங் கீழே விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து தாடி வைத்தவர்களையும் தலைப்பாகை கட்டியவர்களையும் தீவிரவாதிகள் என்று ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்த அனுதினமும் உழைத்தன. அதன் விளைவே இது போன்ற தாக்குதல்கள்.

சீக்கியர்கள் இஸ்லாமியர்களாக கருதப்பட்டு தாக்கப்படுவது முதல்தடவை அல்ல. இத்தகைய தாக்குதலினால் தங்களை முஸ்லிம்களை விட்டு அந்நியப்படுத்தாமல் முஸ்லிம்களுடன் இணைந்து இந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

Comments are closed.