முஸ்லிம் குடும்பத்தை தீவிரவாதிகள் என்று கூறிய செய்தித்தாளுக்கு 15 லட்சம் பவுண்டு அபராதம்

0

டெய்லி மெயில் என்ற பிரித்தானிய பத்திரிகையில், அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவான டிஸ்னீ லேன்டிற்கு செல்ல முற்பட்ட முஸ்லிம் குடும்பம் ஒன்றை அல்-கொய்தா இயக்கத்தை சேத்ர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தங்கள் நோக்கத்தை மறைத்து பொய் கூறுகின்றனர் என்றும் கூறி கட்டுரை ஒன்று வெளியானது. இந்த கட்டுரையை கேட்டீ ஹாப்கின்ஸ் என்பவர் எழுதியிருந்தார். தற்போது இந்த செய்தி குறித்து வருத்தம் தெரிவித்ததோடு அந்த குடும்பத்திற்கு 15 லட்சம் பவுண்டுகளை அபராதமாக செலுத்தியுள்ளது டெய்லி மெயில் பத்திரிக்கை.

கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று தங்களின் குழந்தைகளின் விடுமுறை நாட்களை அவர்களுக்கு விருப்பமான முறையில் செலவிட அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்டிற்கு செல்ல இருந்தது. ஆனால் அவர்கள் அமெரிக்க விமான நிலையத்தில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் தடுக்கப்பட்டனர். இது குறித்த செய்தியை அறிய (இங்கே கிளிக் செய்யவும்)

இந்த தருணத்தில் டெய்லி மெயில் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதிய கேட்டீ ஹாப்கின்ஸ் இந்த குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல விடாமல் தடுக்கப்பட்டது சரிதான் என்றும் (இவர்களை பயணம் செய்ய அனுமதித்த) இங்கிலாந்தின் எல்லைப்பாதுகாப்பு மோசமாக இருப்பதால் இவர்களை அமெரிக்கா செல்ல விடாமல் தடுக்கும் அமெரிக்காவின் எல்லைப்பாதுகாப்பை எப்படி குறை கூற முடியும் என்றும் “நானாக இருந்தாலும் அவர்களை அனுமதித்திருக்க மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் லண்டனில் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழும் இடத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த கருத்துக்களை 2015 டிசம்பர் 23 ஆம் தேதி வெளியான கட்டுரையில் அவர் எழுதியிருந்தார். பின்னர் 2015 டிசம்பர் 29 இல் வெளியான மற்றொரு கட்டுரையில் மீண்டும் அவர்களை குறை கூறி கருத்துகளை பதிந்திருந்தார்.

இதனை அடுத்து இந்த செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது தாங்கள் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்தும் அந்த செய்தியினால் பாதிக்கப்பட்ட மஹ்மூதின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக்கோரியும் செய்தி வெளியிட்டுள்ளது டெய்லி மெயில்.

அதில், “தாரிக் மஹ்மூத் மற்றும் சாஹித் மஹ்மூத் ஆகியோர் பயங்கரவாதிகள் இல்லை என்றும் அவர்களுக்கு அல்-கொய்தா இயக்கத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள அவர்களது சகோதரர் ஒருவரை காண அமெரிக்கா சென்றனர். மேலும் டிஸ்னீ லேண்ட் செல்வதற்கும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “ஹம்ஸா, தயீபா, ஹஃப்ஸா மஹ்மூத் ஆகியோருக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நாங்களும் கேட்டீ ஹாப்கின்ஸும் மஹ்மூத் குடும்பத்தினரிடம் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் மன்னிப்புக் கோருகிறோம். மேலும் அதற்கான நஷ்டயீட்டையும் அவர்களது வழக்கு செலவுகளையும் நாங்கள் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மஹ்மூத் குடும்பத்தின் சட்ட நிறுவனமான கார்டர் – ரக், “டெய்லி மெயில் தற்போது ஒப்புக்கொண்டது போல அவர்கள் கூறிய அனைத்தும் பொய்யானவை. மஹ்மூத் குடும்பத்தை தீவிரவாதிகளுடன் ஒப்பிட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவர்கள் விடுமுறைக்காக அமெரிக்க சென்றார்கள்” என்று கூறியுள்ளது. மேலும், “தங்களது கூற்றை மெய்ப்பிக்க டெய்லி மெயிலோ அல்லது கேட்டீ ஹாப்கின்ஸோ எந்த ஒரு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.” என்று கூறியுள்ளது.

இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட மஹ்மூத் குடும்பம் சார்பாக செய்தியாளர்களிடம் பேசிய தாரிக் மற்றும் சாஹித் மஹ்மூத், “பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு டெய்லி மெயில் மற்றும் கேட்டீ ஹாப்கின்ஸ் தாங்கள் வெளியிட்ட செய்தி தவறானது என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.”

“ஆனால் இந்த நாள் வரை அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் ஏன் பயணிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை. அது அவர்கள் தரப்பில் ஏற்பட்ட தவறு என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.