முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முன்னாள் தலைவர் மஹ்தி ஆகிப் மரணம்!

0

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) முன்னாள் தலைவர்(முர்ஷிதுல் ஆம் – தலைமை வழிகாட்டி) முஹம்மது மஹ்தி ஆகிப் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மரணமடைந்தார்.எகிப்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த மஹ்தி ஆகிப் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கெய்ரோவில் உள்ள அல் கஸ்ருல் அய்னி மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு விடுதலைச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் குழுவின் தலைவர் அப்துல் முனீம் அப்துல் மக்ஸூத் தெரிவித்தார்.சனிக்கிழமை அன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.பாதுகாப்பு படையின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் அவரது உடல் அடக்கம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அவரது மனைவி மற்றும் மகன் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.அவரது ஜனாஸா தொழுகையில்(மரணித்தவர்களுக்கான பிரார்த்தனை) நான்கு பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.அவரது உடல் அடக்கம் தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.மஹ்தி ஆகிபின் மரணத்திற்கான முழு பொறுப்பும் எகிப்திய அரசுக்கே என்று முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தல்அத் ஃபஹ்மி தெரிவித்தார்.எகிப்து மற்றும் வெளிநாடுகளிலுள்ளவர்கள் அவருக்காக காயிப் ஜனாஸா( மறைமுக பிரார்த்தனை) நடத்துமாறு அவர் அழைப்புவிடுத்தார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஏழாவது தலைமை வழிகாட்டி(முர்ஷிதுல் ஆம்) பொறுப்பை வகித்த மஹ்தி ஆகிப் எகிப்தின் தகாஹ்லியா மாகாணத்தில் பிறந்தார்.முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டில் தான் அவரது பிறப்பும் அமைந்தது.12-வது வயதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தில் உறுப்பினரானார். 1948 ஃபலஸ்தீனை மீட்பதற்கான போரில் கலந்துகொண்டார்.பிரிட்டீஷ் ஆக்கிரமிப்பிற்கு எதிரான சூயஸ் கால்வாய் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1951- 52 களில் பிரிட்டீஷ் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடும் போராளிகளை பயிற்றுவிக்க ஐன் ஷம்ஸ் பல்கலைக் கழகத்தில் இருந்த பயிற்சிமுகாமின் தளபதியாக செயல்பட்டார். 1954 இல் அப்துல் நாஸர் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 20 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு 1974 இல் விடுதலையானார். சவூதியில் உள்ள வேல்ட் அசெம்ப்ளி ஆஃப் முஸ்லிம் யூத்தின்(வாமி) ஆலோசகராகவும், ஜெர்மனியில் உள்ள மூனிச் இஸ்லாமிக் சென்டரின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.1987 இல் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கைடன்ஸ் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஹ்தி ஆகிப், அதே ஆண்டில் எகிப்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.முன்னாள் எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் பல முறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.2004 இல் மஃமூன் ஹுதைபியின் மரணத்தை தொடர்ந்து முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமை வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.2010 ஆம் ஆண்டு வரை அவர் இப்பொறுப்பை வகித்தார்.ஆயுட் தலைமை என்ற நிலையை மாற்றி சுழற்சி முறையில் தலைமை அமைய பதவி விலகி முன்மாதிரியாக திகழ்ந்தார்.2011 இல் மக்கள் புரட்சியின் மூலம் ஹுஸ்னி முபாரக் பதவி விலகிய பிறகு நடந்த தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி வெற்றி பெற்று முர்ஸி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு மஹ்தி ஆகிப் முக்கிய பங்கு வகித்தார்.2013 இல் முர்ஸியின் தலைமையிலான அரசு ராணுவ சதிப்புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டு அப்துல் ஃபத்தாஹ் அல் ஸீஸி ஆட்சியை கைப்பற்றியபோது முஸ்லிம் சகோதரத்துவம் தடைச் செய்யப்பட்டபோது சிறையிலடைக்கப்பட்ட அதன் தலைவர்களில் மஹ்தி ஆகிபும் ஒருவர்.ஸீஸி அரசு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவ்வழக்கு மறு விசாரணைக்கு வருவதற்கு இடையில் அவரது மரணம் நிகழ்ந்தது.
கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் எகிப்து நாட்டு சட்டப்படி கருணை விடுதலை வழங்கப் படக் கூடிய நிலை இருந்தது. ஆனால், அதற்காக சர்வாதிகார ஆட்சியாளர்களிடம் கருணை மனு கோராமல் இறை கருணையை மாத்திரம் யாசித்தவர். அவரது மரணத்திற்கு பிந்தைய வாழ்வை இறைவன் செழிப்பாக்குவானாக!

Comments are closed.