முஸ்லிம் நபருடன் நட்பு கொண்ட இந்துப் பெண்ணை கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்

0

அலிகாரில் இந்துப் பெண்மணி ஒருவரை பாஜக தலைவர் சங்கீதா வர்ஷ்னே என்பவர் பல முறை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு காரணம் அந்த இந்துப் பெண் முஸ்லிம் ஆண் ஒருவருடன் நட்பு பாராட்டி அவருடன் தேநீர் அருந்தியது என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணுடன் இருந்த முஸ்லிம் நபர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294 இன் கீழ் (பொது இடத்தில் அநாகரீகமாக நடத்தல்) வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்ட பாஜக தலைவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

தற்போது பரவலாகிவரும் அந்த வீடியோவில் சங்கீதா வர்ஷன் அப்பெண்ணிடம் “உனக்கு வெட்கம் இல்லையா, இவ்வளவு பெரிய பெண்ணாக உள்ளாய், உனக்கு யார் இந்து யார் முஸ்லிம் என்பது தெரியாதா?” என்று கேள்வி எழுப்புகிறார். இது தொடர்பாக பாஜக வின் மகிலா மோர்ச்சாவின் முன்னாள் அலிகார் மகாநகர் தலைவரான சங்கீதா வர்ஷ்னே விடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அந்தப் பெண்ணை தான் அறைந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் அவ்வழியாக செல்கையில் ஒரு தம்பதியை ஒரு கூட்டம் சூழ்ந்திருப்பதை கண்டேன். அப்போது அங்கிருந்தவர்கள் ஒரு இந்துப் பெண் முஸ்லிம் ஒருவருடன் ஓடிப்போக முயற்சித்ததாக தெரிவித்தனர். இதனை லவ் ஜிஹாத் என்று நான் கண்டுகொண்டேன். அந்த நபரை காவல்துறையும் சில மக்களும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அப்பெண்ணை நான் அருகில் இருந்த ஐஸ் கிரீம் பார்லருக்கு பேசுவதற்காக அழைத்துச் சென்றேன். அந்தப் பெண்ணிற்கு 16 அல்லது 17  வயது தான் இருக்கும். அந்த ஆணுக்கோ 34 வயது இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ரவீந்திர குமார் சிங் கூறுகையில், “அந்த முஸ்லிம் நபரை அங்கு கூடியிருந்தவர்கள் தாக்கக் கூடும் என்று கருதி அவரை காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்தோ அல்லது அப்பெண்ணுடன் இருந்த நபர் மீதோ  வழக்கு பதிவு செய்ய அப்பெண்ணின் தந்தை மறுத்துவிட்டார். அந்தப் பெண்ணிற்கு 22 வயது அந்த ஆணுக்கு 34 வயது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நபர் மீது IPC 294 பிரிவன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணை தாக்கிய பாஜக தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு தாங்கள் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவர்கள் எந்த புகாரும் அளிக்க முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.