மூத்த பத்திரிகையாளர் வி.டி. ராஜசேகருக்கு முகுந்தன் சி. மேனன் விருது

0

மூத்த பத்திரிகையாளர் வி.டி. ராஜசேகருக்கு முகுந்தன் சி. மேனன் விருது

மனித உரிமை களத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் மூத்த பத்திரிகையாளரும் தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியருமான வி.டி.ராஜசேகருக்கு 2018ஆம் ஆண்டிற்கான முகுந்தன் சி. மேனன் விருது வழங்கப்படும் என்று தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு National Confederation of Human Rights Organisations (NCHRO) அறிவித்துள்ளது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தேசிய தலைவர் பேரா. அ. மார்க்ஸ் மற்றும் பொதுச் செயலாளர் பேரா. கோயா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தனர். ஒவ்வொரு வருடமும் மனித உரிமை களத்தில் போராடி வரும் தனிநபர்களுக்கு அல்லது இயக்கத்திற்கு என்.சி.ஹெச்.ஆர்.ஓ. இந்த விருதை வழங்கி வருகிறது. இந்த விருதை பெறும் 13வது நபர் வி.டி. ராஜசேகர்.

தலித்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காக வி.டி. ராஜசேகர் பல்லாண்டுகள் பணியாற்றி வருகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இவர் 25 ஆண்டுகள் பணியாற்றினார். உயர் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் தீண்டாமை மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் அரை நூற்றாண்டாக பணியாற்றி வருபவர் வி.டி. ராஜசேகர். 1981ல் இவரால் தொடங்கப்பட்ட ‘தலித் வாய்ஸ்’ பத்திரிகை, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் தலித் பத்திரிகை என்ற பெருமையை பெற்றது. மனித உரிமைகளுக்காக போராடியதன் காரணமாக தடா மற்றும் தேச துரோக சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் அரசியல், சட்டம், மதம் மற்றும் சமூக நிறுவனங்கள் அனைத்தும் சாதியின் அடிப்படையிலேயே அமைகின்றன என்பதை தனது பல்வேறு நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரின் மகன் சலில் ஷெட்டி லண்டனில் உள்ள அம்னஸ்டி இன்டர்நேஷனலில் பணியாற்றி வருகிறார். மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை போராளியும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் முதல் பொதுச் செயலாளருமான முகுந்தன் சி.மேனன் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. டிசம்பர் 12, 2005ல் மறைந்த முகுந்தன் சி.மேனன் பெயரால் இவ்விருது 2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 25,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் நினைவுப் பரிசு ஆகியவை தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏ.வாசு, எம். ரஷீத், லஹா கோபாலன், சி.ஆர். நீலகண்டன், என்.எம். சித்தீக், லீலா குமாரியம்மா, எஸ்.பி.உதயகுமார், ஜாமீஆ ஆசிரியர்கள் ஆதரவு அமைப்பு, சி.கே.ஜானு, ராம் புன்யானி, சுரேஷ் கைர்னார் மற்றும் ஓ. அப்துல்லாஹ் ஆகியோருக்கு இந்த விருது இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.