மூன்று நிறுவனங்கள் மீது நாட்டின் முதல் ஆதார் மோசடி வழக்குப் பதிவு

0

ஆதார் அமலுக்கு வரும்போதே அதில் உள்ள தனிமனித தகவல்கள் குறித்த பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்த கவலைகளும் முன்வைக்கப்பட்டது. அதற்கு தகுந்த பதில் அரசிடம் இருந்து வரும் முன்னர் ஆதார் தொடர்பான குற்றச்சாட்டு நிகழ்ந்துள்ளது.

Unique Identification Authority of India (UIDAI) பிப்ரவரி 15 ஆம் தேதியில் மூன்று நிறுவனங்கள் மீது டில்லி காவல்துறையில் புகாரளித்துள்ளது. அந்நிறுவனங்களாவது ஆக்சிஸ் வங்கி, மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் சுவிதா இன்போசெர்வ் நிறுவனம் மற்றும் பெங்களூரை மையாமாக கொண்டு இயங்கும் ஈமுத்ரா நிறுவனங்களாகும். இவர்கள் ஆதார் தகவல்களை அங்கீகரிக்கப்படாத  முறையில் பதிவு செய்து அதனை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரே விரல் ரேகையை வைத்து பல வங்கிப் பரிமாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததை அடுத்து UIDAI இந்த முறைகேடை கண்டுபிடித்துள்ளது. இது போன்ற பரிமாற்றங்கள் அந்த விரல் ரேகைகள் பதிவு செய்யப்படாமல் நடப்பதற்கு சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் 397 ஆதார் விரல் ரேகை பரிவர்த்தனைகளை கடந்த ஜூலை 14, 2016 இல் இருந்து 19 பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு  வரையிலான காலகட்டத்தில் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் 194 ஆக்சிஸ் வங்கி மூலமாகவும், 112 eMudhra நிறுவனம் மூலமாகவும், 91 சுவிதா இன்போசர்வ் மூலமாகவும் நடைபெற்றுள்ளது.

பல பரிவர்த்தனைகள் ஒரே நேரத்தில் நிகழ்வதில் இருந்து இது போன்ற சட்ட விரோத நடவடிக்கையை செய்வது இவர்களுக்குள் உள்ள ஒரு பொதுவான யாரோ செய்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து சுவிதா இன்போசெர்வ் நிறுவன CEO பரேஷ் ராஜ்தே கூறுகையில், தங்கள் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியின் வணிக முகவர் தான் என்றும் ஆக்சிஸ் வங்கி ஆக்சிஸ் சுவிதா ப்ரீபெய்ட் அட்டையை வழங்குவதற்காக சோதனை ஓட்டங்களை மட்டுமே நடத்தியது என்று கூறியுள்ளார். மேலும் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் பொருளாதார இழப்பு இல்லாமல் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளரும் இதே பதிலை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் UIDAI இடம் சமர்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவர்கள் அளித்த பதில் போதுமானதாக இல்லை என்றும் இது போன்ற சோதனைகளுக்கு ஆதார் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்படவில்லை, அப்படி சோதனைகளை அவர்கள் நடத்துவதாக இருந்தால் முன்கூட்டியே தங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் இந்நிருவனங்களுக்கான ஆதார் தொடர்பான அங்கீகார நடவடிக்கைகளை இந்த பிரச்சனை தீரும் வரையில் UIDAI தடை செய்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக மாற்ற நினைக்கிறது. நாட்டில் 88% மக்களின் தகவல்களை பள்ளி மாணவர் சேர்க்கையில் இருந்து பாஸ்போர்ட் பெறுவது வரை அனைத்து சேவைகளும் பயன்படுத்தும் வகையில் இந்த அரசு இணைக்க இருக்கிறது. இது நடைமுறைக்கு வருமாயின் தற்போது இருப்பதை விட இன்னும் பெரியளவிலான தகவல்மையங்களை அது உருவாக்கும். தனிமனித தகவல் பாதுகாப்பு குறித்த சரியான சட்டங்கள் இல்லாத நிலையிலும் தற்போது நடைபெற்றது போன்ற அடையாளத் திருட்டு மற்றும் தகவல் கசிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்யும் முறைகள் போதியளவு இல்லாத நிலையிலும் இந்த திட்டத்தின் நடைமுறை பெரும் சிக்கல்களுக்கு வழிவக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது சோதனையோட்டம் என்று கூறி இந்நிறுவனங்கள் செய்த மோசடியின் பரிணாமம் எப்படி இருக்கும் என்பதும் அதனை தவிர்க்க அரசு எடுக்கபோகும் செயல்த்திட்டங்கள் என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லாமையும் கோடிக்கணக்கான மக்களின் தகவல்களுக்கு இருக்கும் அபாயத்தை உணர்த்துகிறது. இது போன்ற அடையாளத் திருட்டு குற்றத்திற்கு இந்திய அரசு வழங்கும் தண்டனை மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் மட்டுமே.

 

Comments are closed.