மூன்று மாதங்களுக்கு புதிய வேலைகள் இல்லை என்று 73% உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

0

நாட்டை காக்கப்போவதாக கூறப்பட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை 15 லட்ச வேலையிழப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இனி வரும் மூன்று மாதங்களுக்கு புதிதாக எந்த ஒரு வேலைவாய்ப்பும் வழங்கப் போவதில்லை என்றும் 73% உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது சமீபத்தில் (Federation of Indian Chambers of Commerce and Industry) FICCI நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கள் வெளியிடப்பட்ட உற்பத்தியின் மீது நடத்தப்படும் இந்த காலாண்டு கருத்துக் கணிப்பில் 73%  உற்பத்தியாளர்கள் தங்களது இந்த முடிவை தெரிவித்துள்ளனர். இது இதற்கு முந்தைய காலாண்டில் உள்ள 77% உற்பத்தியாளர் முடிவிற்கு சற்று குறைவாக காணப்படுகிறது.

இது போன்ற மந்தமான வேலைவாய்ப்பு இந்திய சந்தையின் மீது அழுத்தத்தை ஏற்ப்படுத்தும் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வேலையின்மை இன்னும் ஒரு பிரச்சனையாக இருந்துவருகிறது என்றும் தெரியவந்துள்ளது. இத்துடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 1.5 மில்லியன் வேலைவாய்ப்புகளை இல்லாமல் போனதாக கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இம்மாத தொடக்கத்தில் CMIE (Centre for Monitoring Indian Economy) வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி கடந்த 2016 ஏப்ரல் மாதம் 401 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பு டிசம்பர் 2016 இல் 406.5 ஆக உயர்வடைந்தது என்றும் அதுவே பின்னர் ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 405 ஆக சரிவடைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

வர இருக்கும் மூன்று மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கருதப்பட்டு வந்த நிலையில் வெறும் 49% உற்பத்தியாளர்களே இது குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். ஜனவரியில் இருந்து மார்ச் மாதம் வரை நடத்தப்பட்ட காலாண்டு ஆய்வில் இது குறித்து 48%  நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தன. இந்த ஆய்வு வாகன உற்பத்தி, மின் மற்றும் மின்னணு உற்பத்தி, சிமென்ட், கெமிகல் உற்பத்தி என பல முக்கிய பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு ஆண்டு வருமானம் 3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ள 3000 த்துக்கும் அதிகாமான நிறுவனங்கள் தங்களின் பதிலை அளித்துள்ளனர்.

மேலும் உற்பத்தி விலை கணிசமாக உயர்ந்தது கவலைக்குரிய விஷயம் என்று 69%  நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இது முன்னதாக 60%  மாக இருந்தது. எதிமறை வளர்ச்சி இருப்பதாக கூறிய நிறுவனங்களின் எண்ணிக்கை 27%  இருந்து 17% ஆக குறைந்துள்ளது.

இருந்தும் சராசரி திறன் பயன்பாடு 75%  இல் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. இதில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் திறன் ஏற்கனவே பலகீனமாக உள்ள எதிர்கால முதலீட்டை மேலும் பலகீனமாக்கும் என்று கருதப்படுகிறது. 74% நிறுவனங்கள் தங்களது உற்பத்தி திறனில் எந்த ஒரு அதிகரிப்பும் இருக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

Comments are closed.