மேற்கு வங்கத்தில் குழந்தை திருட்டு குற்றம் சுமத்தி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அடித்துக் கொலை

0

மேற்கு வங்க மாநிலம் செகேந்திரா கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை குழந்தையை திருடினார் என்று கூறி பொதுமக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் இந்த கூட்டு வன்முறை கலாச்சாரத்தின் சமீபத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

மிதிபூர் பனாநகர் கிராமத்தை சேர்ந்த ஒடேரா பீபி என்ற 42 வயது பெண் ஒருவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இந்தப் பெண் கையில் ஏதோ வைத்திருந்தபடி திலிப் கோஷ் என்பவற்றின் வீட்டிற்கு செல்வதை ஒருவர் கண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண் மயக்க மருந்துடன் திலிப் கோஷின் மகளை கடத்த அவ்வீட்டிற்குள் சென்றதாக செய்திகள் பரவியுள்ளது.

இந்நிலையில் தில்ப்பின் வீட்டிற்குள் சென்ற ஒரு கும்பல் அப்பெண்ணைப் பிடித்து கடுமையாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அதனை நேரில் கண்ட ஒருவர் பத்திரிகையாளர்களிடம், “கிராமத்து மக்கள் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். அவர் ஏதோ கூற முன்வந்த போதிலும் எங்களால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது புரியாத இந்த பேச்சும் கூட மக்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அவரை பங்களாதேசை சேர்ந்த ஆட்கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று மக்கள் சதேகித்தனர். சில இளைஞர்கள் அப்பெண்ணின் உடைகளை கிழித்தனர். மேலும் அவரை ஒரு டிராக்டரில் கட்டி வைத்து மூன்று மணி நேரம் கடுமையாக தாக்கினர்.” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்று ஒரு சிறிய காவல் படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. ஆனால் அவர்களை கூட இதில் தலையிட அந்த கிராமத்தவர்கள் அனுமதிக்கவில்லை. கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு அந்தப் பெண் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட போது அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த லால்பாக்-முர்ஷிதாபாத் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அங்க்ஷுமன் சாஹா, இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் பங்களாதேசை சேர்ந்த குழந்தை கடத்தல்காரர்கள் நடமாடுகிறார்கள் என்று வதந்தி பரப்பியவர்கள் தான் என்று கூறியுள்ளார். மேலும், “இந்த வதந்தி பரப்பியவர்களை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. ஒடேரா பீபியின் குடும்பத்தினர் புகாரளித்தால் இந்த கொலையில் ஈடுபட்ட கிராமத்தவர்கள் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப்பகுதியில் பல குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்மாதம் 21 ஆம் தேதி 14 வயதான ஃபுல்துஷிகோஷ் என்ற சிறுமி காணாமல் போயுள்ளார் என்றும் இதுவரை அவரை குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அந்த சிறுமியின் தந்தை தனது மகளை பங்களாதேஷை சேர்ந்த குழந்தை கடத்தல் காரர்கள் தான் கடத்தியுள்ளனர் என்று நாங்கள் சந்தேகிகின்றோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ரகுநாத்கஞ்ச் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது வன்முறை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட ஒடேரா குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்ற கூற்றை காவல்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது.

Comments are closed.