மேலப்பாளையம்: சிறுமியை கடத்திய காவலர்கள்!

0

மேலப்பாளையம் திருநெல்வேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓர் ஊர். மற்ற மதத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

காவல்துறையும் உளவுத்துறையும் இப்பகுதி முஸ்லிம்களை நிரந்தர அச்சத்தில் வைத்திருப்பதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் எங்கு பிரச்சனை நடந்தாலும் அதன் எதிரொலி மேலப்பாளையத்தில் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு மேலப்பாளையம் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகின்றனர்; சோதனைக்கு உள்ளாக்கப்டுகின்றனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஆகஸ்ட் 2013ல் மேலப்பாளையத்தை காவல்துறையும் உளவுத்துறையும். ஆறு முஸ்லிம்களை கைது செய்து மொத்த மேலப்பாளையத்தையும் தீவிரவாதத்தின் இருப்பிடமாக காட்ட முற்பட்டனர். (விரிவான தகவல்களுக்கு விடியல், செப்டம்பர் 2013). டிசம்பர் 6,2014 அன்று நடைபெற்ற சிறு கல்வீச்சு சம்பவத்தை தன் பங்கிற்கு ஊதிப் பெரிதாக்கியது உள்ளூர் காவல்துறை.

தற்போது 9 வயது சிறுமியை உளவுத்துறை காவலர்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களை குறிவைத்தவர்கள் தற்போது குழந்தைகளை குறிவைக்க ஆரம்பித்துள்ளனரோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 10ம் தேதி சமீரா என்கிற சிறுமியை சிறப்பு விசாரணை குழுவை சார்ந்த எஸ்.ஐ. மனோகரன் உள்ளிட்ட இருவர் கடத்தி 5 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்திருக்கிறார்கள். 9 வயது சமீராவை கடத்தியது ஏன்? அதற்கு எதுவும் பின்னணி இருக்குமா? இதுபற்றி தெரிந்து கொள்வதற்காக மேலப்பாளையம் விரைந்தோம்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை நீலாங்கரையில் தமீம் அன்சாரி என்ற சிறுவனை விசாரணைக்கு அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சிறுவனின் தொண்டைக் குழியில் துப்பாக்கியை வைத்து சுட்டது அனைவரும் அறிந்ததே. அந்த விசாரணையில் புஷ்பராஜ் தண்டிக்கப்படாமல் இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டார். இதனுடைய நீட்சியாகத்தான் 4ம் வகுப்பு படிக்கக்கூடிய சமீராவை எஸ்.ஐ. மனோகரன் சித்திரவதை செய்திருக்கிறார் என எடுத்துக் கொள்ளலாம்.

காவல்துறையினர் மக்களுக்கு இழைத்த அநீதிக்கு இதுவரை பெரிய அளவில் தண்டனை பெற்றது கிடையாது. இந்த தைரியம்தான் அவர்களை மென்மெலும் குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. அரசாங்கங்களும் அவர்களுக்கு என்றைக்குமே சாதகமாகவே இயங்குகின்றன. சமீராவின் தாயார் மெஹ்ராஜ் பேகத்தின் கணவர் தென்காசி ஹனீபா. இவர் தற்பொழுது திருச்சி சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.

2013 அத்வானி வருகையையொட்டி பைப் குண்டு வைத்ததாக இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உண்மையில் அத்வானி வருகையின்போது பைப் வெடிகுண்டு நாடகத்தை நடத்தியதே மதுரை உளவுத்துறை என்று டி.ஜி.பி. அவர்களுக்கு மதுரை கமிஷனரே கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே.

விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் கணவரை பார்க்க செல்லும்பொழுது புர்காவை கழட்டச் சொல்லி மெஹ்ராஜை புகைப்படம் எடுத்துள்ளனர் காவல்துறையினர். அது முதல் தொடர்ந்து தொலைபேசியில் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். கணவர் சிறையில் உள்ள நிலையில் மெஹ்ராஜின் குடும்பத்தினருக்கு யார் உதவி செய்கிறார்கள் என்று தொடர்ந்து கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். பீடி சுற்றியே தனது குழந்தைகளை காப்பாற்றி வருவதாக மெஹ்ராஜ் கூறினார். அத்துடன் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அபூபக்கர் என்பவர் குறித்த தகவல்களையும் காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

“உங்களிடம் அபூபக்கர் புகைப்படம் இருக்கிறதாமே? இருந்தால் கொடுங்கள். நாங்கள் 5 லட்சம் தருகிறோம். உங்கள் கணவரை விட்டு விடுகிறோம். நீ இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் உன் புகைப்படத்தை இண்டர்நெட்டில் வேறுவிதமாக மார்ஃபிங் செய்து, நீ வேறு மாதிரி பெண் என தப்பாக செய்தியை பரப்பி விடுவோம்” என என்னை மிரட்டுகிறார்கள். “அபூபக்கரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பலமுறை சொன்ன பிறகும் என்னை விடுவதாக இல்லை. தொடர்ந்து நான்கு மாதங்களாக நிம்மதியாக வாழ விடாமல் சித்திரவதை செய்கின்றனர்” என்றார்.

“கார்த்திகேயன் என்பவர்தான் திருச்சியிலிருந்து போன் செய்து தேவையில்லாத வார்த்தைகளை சொல்லி டார்ச்சர் செய்வார். அந்த நம்பரை எனக்கு தெரிந்த வழக்கறிஞரிடம் கொடுத்து விசாரிக்க சொன்னவுடன் அவரிடமிருந்து போன் வருவது நின்றுவிட்டது.

“இந்நிலையில்தான் எனது மகளை கடத்தி விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்திருக்கிறார்கள். 9 வயது சிறுமிக்கு என்ன தெரியும்? அவளிடம் ஏன் இப்படி நடந்தார்கள் என்று புரியவில்லை. 5 மணி நேரம் குழந்தையை காணாமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது இரவு 10.45 மணிக்கு எனக்கு போன் வந்தது. ஒன்றும் பதற்றப்படாதே, உன் மகள் வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அந்த நம்பரில் பேசியது மனோகரன் என்பவர் என்று தெரிந்தது.

சின்ன குழந்தைக்கு என்ன தெரியும். அவளை போய் அடித்திருக்கிறார்கள். உன் அப்பாவை போல சிறையில் தள்ளிருவேன் என்று மிரட்டி இருக்கிறார். அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இதுபோல நடந்தால் அவர்கள் தாய்மார்கள் நிலை எப்படி இருக்கும்” என ஆதங்கப்படுகிறார் மெஹ்ராஜ் பேகம்.

கடத்தி சென்ற குழந்தை சமீராவிடமும் அவரின் குடும்பத்திற்கு யார் உதவி செய்கிறார்கள் என்ற கேள்வியைதான் மீண்டும் மீண்டும் கேட்டுள்ளனர். மகளை காணாத துக்கத்தில் மெஹ்ராஜ் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். சிறுமியை காணவில்லை என்ற செய்தி மஸ்ஜித் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால், எரிச்சலும் கோபமும் அடைந்த மனோகரன், “எதற்காக தேவையில்லாமல் பள்ளிவாசலில் அறிவிக்கிறாய்? உன்னுடைய மகள் பத்திரமாக வந்து விடுவாள்” என்று கூறியுள்ளார். பின்னர் இரவு 10.45 மணியளவில் சிறுமி சமீராவை அருகில் உள்ள தெருவில் விட்டுச் சென்றுள்ளார். சீருடை அணிந்த காவலர் ஒருவர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி இவ்விஷயத்தில் முனைப்புடன் செயல்படவே, விஷயம் மேலப்பாளையம் முழுவதும் பரவி விட்டது. ஒரு பக்கம் எஸ்.டி.பி.ஐ. சார்பாக போஸ்டர், பிரஸ் மீட் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக அவசர அறிக்கை என விஷயம் சூடு பிடிக்க எஸ்.ஐ. மனோகரன் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

“இதுபோன்ற, இக்கட்டான சூழ்நிலையை தணிக்க காவல்துறை உயரதிகாரிகள் கையாலும் யுக்தியே பணியிட மாற்றம். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இடமாற்றம் மட்டுமே தீர்வாகாது” என்கிறார் வழக்கறிஞர் தங்கசாமி.

“காவல்துறை பொதுவாகவே, இன்றைக்கு இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் திட்டமிட்டு ஏதாவது வழக்குகளில் சிக்க வைப்பதில் முனைப்பு காட்டுகிறது. என்னுடைய 40 ஆண்டு பணியில் இதுவரை காவல்துறை அதிகாரிகளோ அல்லது சாதாரண கான்ஸ்டபிளோ தண்டிக்கப்பட்டது கிடையாது. இடமாற்றம் என்பது தண்டனையாகாது. இடமாற்றம் செய்தாலே அவன் குற்றவாளி என்றுதானே பொருள். இப்படித்தான் காலங்காலமாக காவல்துறைக்கு அரசுகள் துணை போகின்றன.

இதனால்தான், காவல்துறையினர் தப்பு செய்வதற்கு அஞ்சுவதில்லை. அந்த தைரியத்தில்தான், அவர்கள் இன்னும் கொடூர எண்ணம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். இன்னொரு விஷயம் இந்திய அளவில் உளவுத்துறையில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். அதைப்போலவே தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இது கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மேலிருந்து கீழ் வரை ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதை காணலாம். இதனால்தான், இவர்கள் தொடர்பான எந்த விஷயமும் அரசுக்கு தெரிவதில்லை. கண் துடைப்பிற்காக ஒரு சில சாதி, மதத்தை சார்ந்தவர்கள் உளவுத்துறையில் இருந்தாலும் பெரும்பான்மையாக இவர்களின் ஆதிக்கம் இருப்பதால் அவர்களின் குரல் நீர்த்துப் போகின்றது.

இந்த சிறுமியின் வழக்கில் எஃப்.ஐ.ஆர். போட்ட பிறகும் ஏன் கைது செய்யாமல் தாமதிக்கிறார்கள்? விசாரணையின் நாட்கள் தள்ளிப் போகும்பட்சத்தில் சாட்சிகளை அழிக்கும் வேலைகளில் இறங்கி விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். எனவே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சம்பவங்களும் சாட்சிகளும் தெளிவாக இருக்கும் பொழுது அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது” என்று மேலும் கூறினார் என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தங்கசாமி.

“குற்றவாளிகளை இவர்களகவே உருவாக்க வேண்டியது, பின்னர் அதற்கு ஒரு கதையை தயார் செய்து கொண்டு நாடகம் நடத்துவது, அதன் மூலம் அரசிடம் உயர் பதவிகளை பெறுவது என்பது தற்பொழுது காவல்துறையில் அதிகமாக நடக்கிறது.

மீண்டும் மீண்டும் முஸ்லிம் மக்களை குற்றவாளி போல சித்தரிக்கும் வேலையில் ஒரு கும்பலே இறங்கியிருக்கிறது” என்கிறார் எஸ்.டி.பி.ஐ. மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன். முஸ்லிம் சமூகத்தை தங்களுடைய அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வைக்க காவல்துறை விரும்புகிறது. முஸ்லிம்கள் தன்னெழுச்சி பெறும்பொழுது அதனை தாங்கிக் கொள்ள முடியாத காவலர்கள் இதுபோன்ற விஷயங்களில் இறங்கிவிடுகிறார்கள்.

9 வயது சிறுமியை விசாரிப்பதற்கு எந்தவித முகாந்திரமுமில்லை. அவர் தகப்பனார் குற்றவாளி என்றாலும், அப்படி விசாரிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. வயது வந்த பெண்களை பெண் காவலர்களை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்பொழுது ஒன்றுமறியா குழந்தையை பெற்றோருக்கு தெரியாமல் கடத்திப்போய் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்த எஸ்.ஐ. மனோகரனை சிறையில் அடைக்க வேண்டும். மட்டுமல்லõமல், மனோகரன் தன்னிச்சையாக இதுபோன்ற செயலில் இறங்கி இருக்க மாட்டார். எனவே, மனோகரனை இயக்கியவர்கள் யார் என்பதை காவல்துறை கண்டறிய வேண்டும்.

ஆனால், காவல்துறையினர் காவலருக்குதான் துணையாக இருப்பார்கள். எனவே, மத்திய புலனாய்வுத்துறை, சி.பி.ஐ. மூலம் நேர்மையாக விசாரித்து இவர்கள் நடத்தும் இந்த நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்க இருக்கிறோம். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள மனு கொடுத்திருக்கிறோம்” என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது ரிட் மனுவை எஸ்.டி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான பெ. சாந்தி அவர்கள் கூறும்பொழுது, மத்தியில் மோடி அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கை ஆரம்பம் முதலே கடைப்பிடித்து கொண்டிருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடிகிறது.

காவல்துறையில் இருக்கக்கூடிய சில இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் தங்களுக்கான அரசு மேலே இருக்கிறது. நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கின்ற துணிச்சல் இருக்கின்ற காரணத்தினாலே 9 வயது சிறுமியை கடத்தி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். இதனை இப்படியே விட்டுவிட்டால் 90களின் ஆரம்பத்தில் நடந்தது போன்ற சம்பவம் நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை.

மேலப்பாளையவாசிகளும், மனித உரிமை அமைப்புகளும் சேர்ந்து கைகோர்த்து இதனை கண்டிக்க வேண்டும். மேலப்பாளைய மக்களுக்கும் இது விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல்துறையினரிடமிருந்து ஏதாவது தொலைப்பேசி வந்தால் உடனடியாக தெரிந்த நபர்களிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என்றார்.

குறிப்பிட்ட சமூகத்தினரை இதுபோன்ற நிரந்தர பயத்தில் வைத்திருப்பது காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் அழகல்ல. இதுபோன்ற செயல்பாடுகள் அரசாங்கத்தின் மீதான ஒரு வித்தியாசமான பார்வையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும். இத்துறைகளை தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் இதில் கவனத்தை செலுத்துவாரா?

பாதிக்கப்பட்ட சிறுமி சமீரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவரை சந்தித்தோம். மாலை 4.30 மணியளவில் சிறுமியை இருவர் அணுகியுள்ளனர். தங்களுடன் வருமாறு கூறியுள்ளனர். அவர் மறுக்கவே, தந்தையிடம் அழைத்துச்செல்வதாக கூறி கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் கத்தியை காட்டி மிரட்டியும் அடித்தும் சித்திரவதை செய்துள்ளனர். பின்னர், நிலைமை விபரீதம் அடையவே, இரவு சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர். தெருவில் நின்று கொண்டிருந்த சிறுமியை அங்குள்ள ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

“மேலப்பாளையம் முஸ்லிம்களிடம் சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”

பெ. சாந்தி மனித உரிமை ஆர்வலர், எழுத்தாளர் கூறும்பொழுது

“மத்தியில் மோடி அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கை ஆரம்பம் முதலே கடைப்பிடித்து கொண்டிருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடிகிறது. காவல்துறையில் இருக்கக்கூடிய சில இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் தங்களுக்கான அரசு மேலே இருக்கிறது. நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற துணிச்சல் இருக்கின்ற காரணத்தினாலே 9 வயது சிறுமியை கடத்தி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். இதனை இப்படியே விட்டால் 90களின் ஆரம்பத்தில் நடந்தது போன்ற சம்பவங்கள் நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை.

மேலப்பாளையவாசிகளும், மனித உரிமை அமைப்புகளும் சேர்ந்து கைகோத்து இதனை கண்டிக்க வேண்டும். மேலப்பாளைய மக்களுக்கும் இது விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காவல்துறையினரிடமிருந்து ஏதாவது தொலைபேசி அழைப்பு வந்தால் உடனடியாக தெரிந்த நபர்களிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது.”

மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஆனந்த் விடியலுக்கு அளித்த பேட்டி

விடியல்: எஸ்.ஐ. மனோகரன் மீது எஃப்.ஐ.ஆர். போட்ட பிறகு ஏன் அவரை கைது செய்யவில்லை?

இன்ஸ்பெக்டர் ஆனந்த்: அவர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்தானா அல்லது வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டாரா என்பதை பார்த்தப் பிறகுதான் அவர் மேல் நான் நடவடிக்கை எடுக்க முடியும்.

விடியல்: அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்?

இன்ஸ்பெக்டர் ஆனந்த்: அது மேலிடத்து முடிவு.

விடியல்: இரவு 10.45 மணியளவில் சிறுமி வந்து விடுவாள் என்று சிறுமியின் தாயாரிடம் எஸ்.ஐ. மனோகரன் பேசி இருக்கிறாரே, இதைவிட வேறு ஆதாரம் தேவையா?

இன்ஸ்பெக்டர் ஆனந்த்: இன்றைக்கு விஞ்ஞானத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Comments are closed.