ராஜிவ் காந்தி குறித்து மோடியின் குற்றச்சாட்டு பொய்: கடற்படைத் தலைவர்!

0

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “(ஐ.என்.எஸ் விராட்) போர்க்கப்பலை அவர்களது டாக்ஸி போல பயன்படுத்தி சுற்றுலா சென்றது காங்கிரஸ் குடும்பம்” என பேசினார்.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களை திசைத்திருப்புவதும், போலி செய்திகளை பரப்புவதும்தான் மோடியின் இறுதித்திட்டம். இந்திய விமானப் படையின் விமானங்களை மோடி தனது சொந்த டாக்ஸி போல பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பயணங்களுக்காக இந்திய விமானப் படையின் ஜெட் விமானங்களை பயன்படுத்திவிட்டு சொற்பமாக ரூ.744 கட்டணமாக செலுத்தியுள்ளார். உங்களது சொந்த பாவங்களளை மறைப்பதற்கு மற்றவர்கள் மீது கைகாட்டுகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக தகவல் அறியும் உரிமை மனு வாயிலாக கிடைத்த தகவல்களை ஆவணமாக காட்டினார் ரந்தீப். அதில், மோடி அதிகாரப்பூர்வமற்ற சொந்த பயணங்களுக்காக உள்நாட்டில் 240 முறை இந்திய விமானப் படையின் விமானங்களை பயன்படுத்தியுள்ளதாகவும், அதற்காக பாஜக ரூ.1.4 கோடி கட்டணம் செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோடியின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என ஓய்வுபெற்ற கடற்படை தலைவர் வினோத் பஸ்ரிசா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியும், அவரது மனைவி சோனியா காந்தியும் இரண்டு நாள் அரசு பயணமாக ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலில் பயணித்தனர். அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களோ, விருந்தினர்களோ யாரும் கப்பலில் இல்லை. யாரும் விடுமுறை சுற்றுலாவிற்கும் செல்லவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், முன்னாள் கடற்படைத் தலைவர் எல்.ராமதாஸ் பேசுகையில், “காந்தி குடும்பத்தின் சொந்த பயன்பாட்டிற்கோ, வெளிநாட்டவர்களின் பயன்பாட்டிற்கோ எந்தப் போர்க்கப்பலும் பயன்படுத்தப்படவில்லை. அந்நாளில் ராஜிவ் காந்தி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அங்கிருந்து தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக போர்க்கப்பலில் லட்சத்தீவுகளுக்கு பயணித்தார். தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டம் அந்தமானிலும், லட்சத்தீவுகளிலும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.