மோடியின் முதலாம் ஆண்டு: மசோதாகளின் பலன் என்ன?

0

– எஸ்.எம்.ரஃபீக் அஹமது

மாநில பொருளாளர்,

எஸ்.டி.பி.ஐ. கட்சி

இந்திய  திருநாட்டை  காவி  இருள்  சூழ்ந்த   இருண்ட காலத்தின்  முதலாம்  ஆண்டு  முடிவடைந்துள்ளது  என கூறினால்  அதில்  தவறில்லைதான்.

 இத்தகைய  வேளையில்  நமது  இந்திய  துணை  கண்டத்தின்  பிரதமர்  மோடி அவர்கள்  தமது  ஆட்சியின்  ஓராண்டு  செயல்பாடுகள் பற்றி  சுய  தம்பட்டம்  அடித்துள்ளார்கள்.

அண்டை நாடான  சீனா  சென்றிருந்த  பிரதமர்  கடந்த  மே  16 அன்று  சீனாவின்  சாங்காய்  நகரில்  இந்தியர்கள்  ஏற்பாடு  செய்திருந்த  கூட்டத்தில்  பேசும்போது,

 தனது  ஆட்சியின்  முதலாம்  ஆண்டு  நிறைவடைந்துள்ளதைகூட   கொண்டாடாமல்  சீனா  வந்துள்ளதாகவும்  தான்  ஓய்வின்றி  உழைத்துக் கொண்டுள்ளதாகவும்   வழக்கம் போல  சுய  பெருமையை  கொட்டியுள்ளார்.

 அவரது  உழைப்பு பற்றியோ  உலகம்  சுற்றல்  பற்றியோ   நமக்கு  கருத்து  ஏதும் இல்லை.  ஆனால்..?

அங்கே பேசும்போது  அவர் தெரிவித்த  மற்றொரு  கருத்தான  “நான்  ஆட்சிக்கு வந்து  ஒருவருடம்தான்  ஆகிறது.  ஆனால்  முப்பது   ஆண்டுகளுக்கான  வேலையை  செய்து வருகிறேன். அதனால்தான் எங்களை  உலகம்  நம்புகிறது என்று கூறியுள்ளார்

இந்த வார்த்தைகள்தான்  எமது  மக்களிடம்  பெறும்   கலக்கத்தை   ஏற்படுத்தியுள்ளது.  மேலும்  பலவித  கேள்விகளுடன்கூடிய  சஞ்சல  அலைகளையும்  எழுப்புகிறது.

 பிரதமரின்  கூற்றுபடி  ஓராண்டு காலத்துக்குள்  முப்பது வருடங்களுக்கான   வேலையை  செய்துள்ளார்  என்கிற கணக்கின்படி   மீதமுள்ள  நான்கு  வருடங்களையும்  சேர்த்துக்கணக்கிட்டால்  ஏறத்தாழ  150  வருடங்கள் என்றாகிறது.  இந்நிலையில், தற்போது  மக்களின்  பயமும்  கேள்விகளும்  என்னவென்றால், இந்த  150 வருடத்திற்கு  இணையான  ஐந்தாண்டு  செயல்பாடுகள்  என்பது  எதிர்காலத்தை  கருத்தில் கொண்டு   முன்னேற்ற பாதையை  நோக்கியதா? அல்லது  கால  சக்கரத்தை  பின்னோக்கி   சுழற்றக்கூடிய  செயல்பாடுகளா..?  இதுதான்  பெரும்பாலான  அறிவுசார்ந்த  மக்களின்  கேள்வியாகும்.

 குறிப்பாக,  சேரிகளை விட்டும்  மெல்ல  மெல்ல  வெளியே  சுதந்திரகாற்றை  சுவாசிக்க  முனையும்  தலித்துகள்,

சேற்றிலே  தானியங்களை மட்டும்  விதைக்காமல்  தம்  மக்களின்   வருங்கால  கல்வி பற்றிய   கனவுகளையும்  சேர்த்து  விதைத்துக் கொண்டிருக்கும்  அப்பாவி  விவசாயிகள்,

மதத்தால்  சிறுபான்மையினராக  இருந்தாலும்   நாமும்  இந்திய  நாட்டின்  சம உரிமை கொண்ட  குடிமக்கள்தான்  என்பதை  நிரூபணம்  செய்வதற்காக  சகிப்புத்தன்மையின்  எல்லை வரையிலும்   சென்றுகொண்டிருக்கும்  முஸ்லிம்கள் உள்ளிட்ட  சிறுபான்மையினர்,   மேலும்  ஒடுக்கப்படுகின்ற  ஓரம் கட்டப்படுகின்ற  ஒவ்வொருவரின்  கேள்வியும்  இதுவாகத்தான்  இருக்கும்.

இத்தகைய  அச்சங்கள்  அர்த்தமற்றவைகளல்ல  தற்போது  நடைபெறுகின்ற  நிகழ்வுகளின்  வெளிப்பாடுகளேயாகும்.

ஏனெனில் 150 வருடங்களுக்கு முன்பு  இந்தியாவின்  வியாபாரங்கள்  வெள்ளை  ஏகாதிபத்தியத்தின்  பிடியில் இருந்தது. இன்றும்  அதுதானே  யதார்த்த நிலை.  அன்று  வெள்ளைக்காரன்  இன்று  பன்னாட்டுக்காரர்கள். அதேபோல  நமது  விவசாயிகள்  விளைவிக்கும் பொருட்களுக்கு  விலை  நிர்ணயம்  செய்தவன்  வெள்ளையன்.   இன்றைக்கு   நமது  விவசாயி  எதை  விளைவிக்க   வேண்டும்  எந்தவகை  மருந்துகள்  தெளிக்கவேண்டும்   என்பதில் தொடங்கி  விவசாயத்தின்  அனைத்தையும்  தீர்மானிக்கும்   எஜமானாக  அந்நிய  நிறுவனங்களே  வளர்ந்தோங்கி  வருகின்றன.

இந்திய  குழந்தைகளை  தங்களின்  குமாஸ்தாகளாக  உருவாக்கும்  கல்வியை  படிக்கும்படி  செய்ததன்மூலம்  ஓரளவு  படித்த  அடிமைகளை  உருவாக்கினார்கள் அன்றைய ஆங்கிலேய  வெள்ளையர்கள்.

 தற்போது  கணினி  பொறியாளர்களையும்  அமெரிக்காவிற்காக  இரவுநேரங்களிலும்  வேலை செய்யும்   கால் சென்டர்  விசுவாசிகளை யும் உருவாக்குகிறது  நமது  கல்விமுறை.

போதாக்குறையாக  நமது  பிரதமர்  கலந்துகொள்ளும்   விஞ்ஞானிகளின்   கூட்டங்களிலேயே   “விமான  தொழில்நுட்பம்  வேதத்தில்  இருந்ததாகவும்  பிளாஸ்டிக்  சர்ஜரி  போன்ற  அறுவை  சிக்கிசை  பாண்டவர்கள்  காலத்திலே  இருந்ததாகவும்  கொஞ்சமும்  கூச்சம்  இன்றி  பேசுகிறார்கள்.  இதுபோன்ற  பா.ஜ.க. அரசின்  செயல்பாடுகளை  கவனிக்கும்  சராசரி  இந்தியன்.   இந்த  அரசானது  காலத்தை  பின்னோக்கி  சுழற்ற  முயல்வதாகவே  புரிந்து கொள்வான்.

 இந்த  கருத்துகளுக்கு  வலுசேர்க்கும்  விதமாகத்தான்   சமீபத்தில்  மோடி அரசு  கொண்டு வருகின்ற   சட்ட மசோதாக்களை  நாம்  பார்க்க முடிகிறது.

 இந்த மசோதாக்கள்  மேலோட்டமாக  பார்க்கும் போது  தனித்தனி  துறைகள்  சார்ந்ததாக  தனியான  விவகாரங்களை  கொண்டதாக  நமக்கு  தோன்றினாலும்   இவைகள்  அனைத்தும்   அந்நிய  நாட்டின்  பெரிய  நிறுவனங்களுக்கு  மண்  வளங்களையும்   மனித  சக்திகளையும்  ஒன்று திரட்டி  தாரைவார்க்கும்  செயலாகவே  அமைகின்றன.

 இனி,  தற்போதைய  மசோதாக்கள்  பற்றி  குறைந்த  அளவில்  பரிசீலிக்கலாம்.   குறிப்பாக, வாகன  பாதுகாப்பு  சட்ட  மசோதா,

சி.  எஸ்.  டி.  எனும்  வணிகவரி  தொடர்பான  சட்டங்கள்,குழந்தை  தொழிலாளர்   சட்ட மசோதா   இவைகள்  பற்றி மட்டும்  மிக  சுருக்கமாகவே   பார்க்கலாம்.

வாகன  பாதுகாப்பு  மசோதா  

 வரவிருக்கின்ற   இந்த சட்டமானது   நில கையகபடுத்தலை விடவும்  மிகவும்  கொடூரமானது  எனலாம். ஏனெனில்  இன்றைய  வாழ்க்கை முறையில்  அனைவருமே  ஏதேனும்  ஒரு  வகையில் வாகனங்களோடு  வாழ்ந்து கொண்டிருபோர்களே. சாதாரணமாக கிராமங்களில்  ஒரு  இருசக்கர  வண்டியை  வைத்து  பால்  வியாபாரம் செய்துவரும்  சாமானியன் தொடங்கி  நகரவீதிகளில்    வாழ்க்கையை  நகர்த்திக் கொண்டுள்ள  ஆட்டோ  தொழில் புரிபவர்கள்,   வாடகை  கார் ஓட்டுனர்கள்,  ஸ்கூட்டர்  வண்டிகளில்  அலுவலகம்  சென்றுவரும்  பெண்கள் உள்பட  பஞ்சர் கடைக்காரர்  முதல்  பழுதுநீக்கும்  சிறிய  பணிமனைகள்  நடத்துபவர்கள்…   இப்படி  வாகனங்கள்  சார்ந்து  தொழில்  புரிவோர்  நமது நாட்டில்  ஒரு  பெரும் பங்கினராக   உள்ளனர்.

 ஆனால்,  இவர்கள்  அத்தனை பேர்களையும்   பெரும்  சிரமங்களுக்கும்  சுமைகளுக்கும்   ஆளாக்கி  அந்த தொழிலை  விட்டே  ஓடுமளவிற்கு  வாகன  பாதுகாப்பு  சட்டம்  மக்கள்  விரோத  அம்சங்கள்  கொண்டவையாக  உள்ளது.

 எடுத்துக்காட்டாக,   இனிமேல்  உங்கள்  வாகனங்களில்  ஒரு  சிறு  நட்டு  போட வேண்டும்  என்றாலும்   நீங்கள்  அதை  அந்த வாகனம்  தயாரித்த  நிறுவனத்தின்  அங்கீகாரம்  உள்ள  நிலையங்களில்தான்  போட முடியும்.  அப்போது  அவர்கள்  சொல்லுகின்ற  தொகையை  கட்ட வேண்டும்.  இது  எல்லோருக்கும் சாத்தியமா?

உங்களிடம்  தற்போது  கைவசம்  உள்ள  ஓட்டுனர்  உரிமம்  இனி  செல்லாது..  மாற்றாக  அரசு  அனுமதித்துள்ள  பகாசுர  பயிற்சி பள்ளிகளில்  புதியதாக  3 மாதங்கள்  வரை பயின்று  அதன்பின்  ஓட்டுனர்  உரிமம்  பெற வேண்டும்.   அந்த பயிற்சி  பள்ளிகளை  இனிமேல்  சாதாரணமாக  யாரும்  நடத்த முடியாது.   10  ஏக்கர்  நிலம் பணிமனை போன்ற  பல்வேறு  வசதிகளும்  கொண்டதாக  இருந்தால்   மட்டுமே ஓட்டுனர்  பயிற்சி  வழங்க முடியும்.  இவ்வளவு  வசதிகளுடன்  நடத்த  முன் வருபவர்கள்,  பன்மடங்கு  அதிகமாக  கட்டண வசூல் செய்வார்கள்.

இப்படியாக சாமான்யர்கள்  பின்பற்ற முடியாத  பல  அம்சங்களைக் கொண்ட  இந்த வாகன  சட்டம்  நிறைவேறுவதன்மூலம் இந்த  தொழில்களோடு  தொடர்புடைய  கோடானு கோடி மக்கள்  தங்கள்  சுய வாழ்வாதாரத்தை  இழந்து ஏதேனும்  கார்ப்பரேட் நிறுவனங்களில் நிரந்தரமில்லா  வேலை தேடி அலைய வேண்டிய விபரீதம்  ஏற்படும்.

சி. எஸ். டி. வணிகம் சார்ந்த வரி 

தற்போது  ஒவ்வொரு  மாநிலமும்  வர்த்தக தன்மைகளுக்கு  தகுந்தபடி  1 முதல் 4 சதம் வரை  விற்பனை  வரி  வசூல் செய்கிறது.  இந்த முறையின்படி  உள் மாநிலங்களுக்குள்  வியாபாரம் செய்யும் சிறிய நிறுவனங்கள்  மேற் சொன்ன  வரிவிகிதத்தை செலுத்துவதில்  பெரிய சிரமம் இருக்காது. ஆனால்  தற்போது  மோடி அரசு  கொண்டுவரும் சி.எஸ்.டி.யானது  முதலில்  மாநில வரி வசூல்  உரிமையை  பறிக்கும். இதன் மூலம் மாநிலங்களுக்குள்  விரிசல் ஏற்படும். கூட்டாட்சி தத்துவமும்  கேள்விக்குள்ளாகும்.

 இதை  காங்கிரஸ் செய்திருந்தால்  ஊடகங்களும்  சில ஊதாரி அரசியல் கட்சிகளும்  வானுக்கும் பூமிக்குமாய்  வாமன  அவதாரம் எடுத்திருப்பார்கள். மோடி  சொன்னதால்  முனங்கல்  கூட வெளி வரவில்லை.

 அடுத்தபடியாக,  இந்தியா முழுமைக்குமான  ஒரு  பொதுவான  வரி விதிப்பும் அதற்கு தகுந்தாற்போல  விதிக்கப்படும்  வரி  விகிதமும்  மாவட்ட  அளவிலும்  மாநில  அளவிலும்  வியாபாரம் செய்து வருபவர்களுக்கு  பெரும் சுமையாக மாறிவிடும்.  தற்போது இந்த சி.எஸ்.டி.  வரி விகிதம்  25  சதம்  வரைகூட வசூலிக்கலாம்  என நிபுணர்குழு  பரிந்துரைத்துள்ளது.

ஒரே தேசம் ஒரே மொழி ஒற்றை கலாசாரம்  வரிசையில் ஒற்றை வரி.

இந்த வரி விதிப்பை எதிர்கொள்ள முடியாத  சிறு வியாபாரிகள் கடைகளை சாத்திவிட்டு  விவசாயிகள்  வாகன தொழிலாளர்கள் போல   வேலை தேடி அதே பெரு நிறுவன வாசலில் போய் நிற்பார்கள்.

 இத்தனையும்  போதாதென்றுதான்  தற்போது  குழந்தை தொழிலாளர்  சட்ட திருத்தம் வருகிறது.  இதை பழைய குல கல்வி முறை என்பதாகவும்  விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டம்  கல்வி கற்கும்  பருவத்தில்  குழந்தைகளை வருமானம் தேடும்  ஆசைக்கு  தள்ளிவிடும்.  அதன்பின்  எந்த மாணவனுக்கும்  படிக்க வேண்டும்  எனும்  எண்ணம்  வராது.  இதில்  தனியார் பள்ளிகளின்  கெடுபிடிகளில்  இருந்து  தப்பினால்  போதும்  என கருதும்  பெற்றோர்களும்  பிள்ளைகளும்  கல்வியை தொலைத்து  நகர  வீதிகளுக்கே  குடும்பம்  குடும்பமாக  புறப்பட்டுவிடுவார்கள். இவர்கள்  வேலை தேட போவதும்  அதே பெரும்  நிறுவன  வாசல்களில்தான்.

 இப்போது  இந்த சட்டங்களின்  சாரத்தையும்  விளைவையும் கவனிப்போம்.

 வாகன தொழில்களை  இழந்த தொழிலாளிகள், வியாபாரத்தை  இழந்த  சிறு வணிகர்கள், இவைகளோடு கல்வியிழந்த பதின்ம வயது குழந்தைகள்.

இவர்களெல்லாம் செயறக்கையாக  வேலையில்லா  திண்டாட்டத்திற்கு  ஆளாக்கப்பட்டு  நகர வீதிகளில்  அந்நிய  நிறுவனங்களுக்கு  அவர்கள்  சொல்லுகிற  கூலிக்கு  இடுகின்ற  கட்டளைக்கு வேலை செய்யும்  அடிமைகளாக  மாறிவிடும் அபாயம்  இந்த சட்டங்களின் மூலம் உருவாகலாம். சங்கம்  வைக்க முடியாது,  பனி பாதுகாப்பு கேட்டாலோ நிரந்தரம்  கேட்டாலோ   வேலையை விட்டு  துரத்தி விடுவார்கள்  எனும் பயம் கவ்விக்கொள்ளும்.

ஒருவேளை வேலை இல்லாதோர் எண்ணிக்கை  அதிகமானதன் காரணமாக பட்டிணத்து வீதிகளில்  உண்ண உணவின்றி உடுதுணிகள்  ஏதுமின்றி  வறுமையின் பிடியில் சிக்கி வாழ்வை  வெறுமையாக உணரும்  ஒருகூட்டம்

பிழைத்தால் போதும்  அது எப்படியாகினும்  எவ்வழியானாலும் சரியே  என முடிவெடுத்தால்,

அந்தக்கூட்டம்  சந்தர்ப்ப  சூழலால்  புரட்சியாளர்களிடம்  அடைக்கலம்  ஆகலாம்.   அல்லது  நகரத்து  தாதாகளின்  கூலிப்படையாக மாறலாம்.   இன்னும்  பல்வேறு  குற்ற  நடவடிக்கைகள்  புரிவோராக  மாறலாம். இப்படியெல்லாம்  விரும்பத்தகாத  செயல்கள்  நடந்தேறினால்?

இந்தியாவின்  கலாச்சார  பெருமைகள்  சகிப்புதன்மை,  நெறி சார்ந்த  வாழ்க்கை முறைகள்   அத்தனையும்  அழிந்துபோகும். நாடே  நரகமாகிவிடுமல்லவா?  ஆகையால் அறிவு  ஜீவிகளே  பார்வையாளர்களாக  இருந்ததுபோதும்  தேசம்  காக்க  பயனுள்ள  எதையேனும்  செய்ய  களம் கான்பீர்

இந்தியர்களின்  அரசும் ஆட்சியும்  இந்தியர்களுக்காக மட்டுமே  எனவொரு  விதி செய்வோம்.

(ஜூன் 2015 இதழில் வெளியான அட்டைப்பட கட்டுரை)

Comments are closed.