மோடியை விமர்சித்த முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் 22 வருட பழமையான வழக்கில் கைது

0

மோடியை விமர்சித்த முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் 22 வருட பழமையான வழக்கில் கைது

மோடியையும் பாஜகவின் கொள்கைகளையும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் குஜராத் IPS அதிகாரி சஞ்சீவ் பட் 22 வருட பழமையான வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விபரப்படி, கடந்த 1996 ஆம் ஆண்டு சஞ்சீவ் பட்டிற்கு கீழ் பணியாற்றிய பனாஸ்கந்தா காவல்துறை சுமர்சிங் ராஜ்புரோஹித் என்பவரை போதைப்பொருள் வைத்திருந்தார் என்று கூறி கைது செய்திருந்தது. அப்போதைய காவல்துறையின் கூற்றுப்படி ராஜ்புரோஹித் தங்கியிருந்த அறையில் இருந்து சுமார் 1 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இவ்வழக்கை பின்னர் விசாரித்த ராஜஸ்தான் காவல்துறை இது போலியாக சித்தரிக்கப்பட்ட வழக்கு என்று தெரிவித்தது. மேலும் ராஜ்புரோஹித் விடுதி அறையில் இருந்து கைது செய்யப்படவில்லை என்றும் அவர் ராஜஸ்தான் பாலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து பனாஸ்கந்தா காவல்துரையால் இழுத்துச் செல்லப்பட்டார் என்று ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்தது.

ராஜஸ்தான் காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு பனாஸ்கந்தா காவல்தறை முன்னாள் காவல் ஆய்வாளர் I.B.வியாஸ் இவ்வழக்கில் தீவிர விசாரணை வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இவ்வருட ஜூன் மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை மூன்று மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதனையடுத்து சஞ்சீவ் பட் மற்றும் பனாஸ்கந்தா காவல்துறையை சேர்ந்த மேலும் 7 பேரை சிபிஐ விசாரித்தது. அதில் சஞ்சீவ் பட் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பாஜக ஆளும் அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் சஞ்சீவ் பட்டிற்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்தை சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் என்று கூறி இடித்து தள்ளியது.

இந்நிலையில் தற்போது 22 வருட பழைமையான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சஞ்சீவ் பட். இன்னும் அவர் நீதிமன்றத்தை அணுக கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளார் என்று கூறி அவரது மனைவி ஸ்வேதா பட் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். தனது சார்பில் வக்காலத்து பதிவு செய்யவும் நீதிமன்றத்தில் இன்ன பிற ஆவணங்களை தாக்கல் செய்யவும் சஞ்சீவ் பட்டிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்ற ஸ்வேதா பட்டின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி நவீன் சின்ஹா, இது தொடர்பாக குஜராத் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய நீதிபதி கோகோய், “ஒருவர் நீதிமன்றத்தை அனுகவிடாமல் தடுத்து அவர் சார்பாக அவரது மனைவி நீதிமன்றத்தை நாடுவது மிகவும் மோசமானது” என்று கூறியுள்ளார். மேலும், “இவ்வழக்கினுள் செல்வதற்கு முன்னர் ஒரு குடிமகனை நீதிமன்றம் அணுக விடாமல் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக குஜராத் அரசு பதிலளிக்க வேண்டும். “ என்று நீதிபதி கோகோய் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை வருகிற அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.