மோடி பீகாருக்கு வாக்களித்த 1,25000 கோடி ரூபாய் ஜூம்லா

0

2015 அக்டோபர் மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி பீகாரின் வளர்ச்சிக்கு 1,25000 கோடி ரூபாய்களை வழங்குவதாக வாக்களித்திருந்தார். ஆனால் இந்த தேர்தல் முடிவடைந்து 18 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த பணம் பீகாருக்கு சென்றடையவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம் மூலம் தெரிய வந்துள்ளது. மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த வாக்குறுதிகளை வழங்கும் போதே வெற்று வாக்குறுதிகளை கொண்டு தேர்தலை வெற்றி பெற பார்கிறார் என்று எதிர்கட்சிகள் விமர்சித்தன. அவர்களின் விமர்சனத்தை தற்போது நிதியமைச்சகம் உண்மையாக்கி வருகிறது.

மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அணில் கள்கலி இதற்கான கேள்வியை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். அதில் மோடி வழங்கிய நிதியுதவிக்கான உத்திரவாதம் குறித்த தகவல்களை வழங்குமாறு டிசம்பர் 2016 இல் அவர் விண்ணப்பித்திருந்தார்.

மேலும் அந்த நிதியுதவி குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களையும் அவர் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது குறித்த நேரடி தகவல்களை வழங்க மறுத்த நிதி அமைச்சகத்தில் துணை இயக்குனர் ஆனந்த் பரமர், “2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரதமர் பீகாருக்கு வழங்குவதாக கூறிய 1,25000 கோடி நிதியுதவியானது பல கட்டங்களில் நிறைவேற்றப்படும், ஆனால் அதற்கென இன்னும் எந்த நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை.’ என்று பதிலளித்துள்ளார்.

நிதியமைச்சகத்தின் இந்த பதில் குறித்து கருத்து தெரிவித்த, கள்கலி, “நாட்டின் பிரதமர் பீகாருக்கு வழங்கிய நிதியுதவிக்கான வாக்குறுதி குறித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது வெட்கக்கேடானது.” என்று கூறியுள்ளார்.

இதனை பாஜக ஆட்சியின் மற்றொரு ஜூம்லா என்று விமர்சித்த அவர், பாஜக ஆட்சியில் நாட்டின் 125 கோடி மக்களுக்கு பல வகையிலான ஜூம்லாலக்கள் காட்டப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Comments are closed.