மோடி விமர்சகர் வீட்டு காவலர் மீது தாக்குதல்

1

மூத்த பத்திரிகையாளரும் தி ஹிந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன், டில்லியில் உள்ள தனது வீட்டின் காவலரை நான்கு பேர் கொண்ட குண்டர் படை கடுமையாக தாக்கியுள்ளது என்றும், தாக்குதலை நடத்தியவர்கள், ‘உன் எஜமானரை, அவர் தொலைகாட்சியில் எதனை பேசுகிறார் என்று கவனமாக இருக்கச்சொல்” என்று கூறி மிரட்டிச் சென்றதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வரதராஜனின் மனைவி நந்தினி சுந்தருக்கும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

அரசியல் விமர்சகரான சித்தார்த் வரதராஜன் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர். இவர் 2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தி ஹிந்து பத்திரிகையில் இருந்து இவர் விலகினார். இவர் பணியில் இருந்த போது, ஹிந்து பத்திரிகையில் மோடிக்கு ஆதரவான செய்திகளை வெளியிட இவர் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரதராஜனின் மனைவியான நந்தினி சுந்தர் ஒரு சமூகவியலாளர் ஆவார். இவர் பஸ்தார் பகுதி குறித்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் சத்திஸ்கரில் அரசால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீதிமன்றங்களுக்கு உள்ளும் வெளியும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது வரதராஜனோ அவரது மனைவியோ தங்களது வீட்டில் இருந்திருக்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து தான் எந்த ஒரு யூகங்களுக்கும் செல்ல விரும்பவில்லை என்றும், தனது பாதுகாவலரருக்கு இந்த தாக்குதலால் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவர் மிகுந்த அச்சத்தில் உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக டில்லி காவல்துறை நல்ல ஒத்துழைப்பு தருகின்றது என்றும் CCTV காட்சிகளை ஆராய்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய அவர்கள் முற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை பொதுவெளியில் வெளியிடுமாறு தனக்கு நண்பர்கள் அறிவுரை செய்ததின் பெயரில், தான் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இனி தொலைகாட்சி நிகழ்சிகளில் என்ன பேசுகிறோம் என்பது குறித்து கவனமாக இருக்கப்போகிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இல்லை என்றும், தான் நிகழ்ச்சிகளில் பலரை விமர்சித்து வருவதாகவும் இதில் யாருடைய ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரபல எழுத்தாளரும் வரலாற்றாளருமான ராமச்சந்திர குஹா பாஜக மற்றும் மோடியை விமர்சித்ததால் தனக்கு மிரட்டல் கடிதங்கள் வருகின்றது என்று சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Discussion1 Comment

  1. உண்மையை வெளியில் சொன்ன சித்தார்த் வரதராஜனுக்கு நன்றியும் ஆதரவும். பாஸிசத்தை அழிக்கும் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றினைவோம், தேசத்தை பாதுகாப்போம்.