யோகா தினத்திற்காக பதாஞ்சலி சேமிப்புக் கிடங்காக மாறிய மகாத்மா காந்தி நினைவிடம்

0

குஜராத்தின் ஓல்ட் சர்கியுட் ஹவுஸில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தை யோகா தினத்தையொட்டி பதாஞ்சலி நிறுவனம் சேமிப்பு கிடங்கு போல பயன்படுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

ஷஹிபாக் பகுதியில் உள்ள இந்த நினைவிடத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் நெய், பாய்கள், மற்றும் துண்டு பிரசூரங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஸ்ம்ருதி கந்த் என்று அழைக்கப்படும் இந்த இடம், 95 ஆண்டுகளுக்கு முன்னால் தேச விரோத குற்றம் சாட்டி மகாத்மா காந்திக்கு ஆறு வருடங்கள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றமாக இருந்த அறையாகும். இந்த இந்த இடம் தான் பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனத்துடைய சேமிப்புக் கிடங்கு போல பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த மே மாதம் 25 ஆம் தேதிமுதல் சர்கியுட் ஹவுஸில் உள்ள மொத்தம் 28  அறைகளில் 12 அறைகள் பதாஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அறையான ஸ்ம்ருதி கந்த் பதாஞ்சலி நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு போல பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற அறைகளில் பதாஞ்சலி நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கி யோகா தினத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதாஞ்சலி நிறுவனத்திற்கு இந்த அறையை பயன்படுத்த யார் அனுமதி வழங்கினார்கள் என்ற கேள்விக்கு அஹமதாபாத் நகரத்தில் உள்ள அணைத்தது சர்கியுட் ஹவுஸ்களின் பொறுப்புதாரியான சிராக் படேல், “இவர்களுக்கு அந்த அறையை சேமிப்புக் கிடங்காக பயன்படுத்த யார் அனுமதி வழங்கினார்கள் என்று தெரியவில்லை.” என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக துணை முதல்வர் நிதின் படேலும் அந்த அறையை பதாஞ்சலி நிறுவனம் சேமிப்பு கிடங்காக பயன்படுத்துவது குறித்து தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் பிரிட்டிசார் ஆட்சி புரிந்த காலத்தில் 1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாள் இந்த ஸ்ம்ருதி கந்த் அரை நீதிமன்ற அறையாக செயல்பட்டு தேச விரோத குற்றத்திற்காக மகாத்மா காந்திக்கு ஆறு வருடங்கள் சிறை தண்டனை வழங்கியது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த அறை காந்தி ஸ்ம்ருதி கந்த் அறையாக மாற்றப்பட்டு அங்கு காந்தியின் புகைப்படங்களும், அவரது வழக்கு விசாரணை குறித்த ஓவியங்களும், காந்தியின் அஹமதாபாத் தொடர்பான கோப்புக்கள் மற்றும் ஆவணங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கோப்புகள் மற்றும் காந்தி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அந்த அறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டு யோகா தினத்தன்று பங்குபெறுபவர்களுக்கு வழங்குவதற்காக பதாஞ்சலி நிறுவனத்தால் வைக்கப்பட்ட நெய், பாய்கள், பதாகைகள், விரிப்புகள், துண்டு பிரசுரங்கள், டி ஷர்ட்டுகள் தொப்பிகள் முதலிய பொருட்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறையில் உள்ள காந்தியின் படங்கள் பதாஞ்சலி குப்பைகளால் பகுதி மறைக்கப்பட்டுள்ளது.

அந்த அறையின் நிலை இவ்வாறு இருப்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பாபா ராம்தேவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதாஞ்சலி தரப்பில் இதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் பதாஞ்சலி நிறுவனம் ஸ்ம்ருதி கந்த் இல் எந்த பொருட்களையும் சேமித்து வைக்கவில்லை என்றும் அதனை யார் வேண்டுமானாலும் சென்று சோத்தித்து பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் இந்த நிறுவனத்திற்கு 12 அறைகள் ஒதுக்கிய போதிலும் இவர்களிடம் இருந்து இதற்கென எந்த ஒரு வைப்புத் தொகையும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இங்குள்ள அறைகள் அமைச்சர்கள், மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் விருந்தினர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இந்த அறைகளில் ஒரு அறைக்கு நாள் ஒன்றிற்கு 1300 ரூபாய் செலுத்தி தங்கிக் கொள்ளலாம் என்பது வழமை.

Comments are closed.