யோகா மையமா சித்திரவதை கூடமா? யோகா மைய போர்வையில் மதமாற்ற தடுப்பு மையம்

0

கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 20 வயது அஷிதா. செவிலியர் படிப்பு படித்தவரான இவர் ஷுஹைப் என்ற இளைஞர் உடன் பழகி வந்துள்ளார். இந்த இருவரின் நட்பு காதலாகி இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அஷிதாவின் இந்த முடிவு அவரது பெற்றோர்களுக்கு தெரியவரவே, இந்து மதத்தை சேர்ந்த அவர் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்யக்கூடாது என்று அவர்கள் தீர்மானத்துடன் கூறிவிட்டனர். அவர்களின் இந்த முடிவிற்கு தான் சம்மதிக்க மறுக்கவே அவர்கள் தங்கள் தீர்மானத்தை மேலும் தீவிரத்துடன் செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அஷிதா தனது விருப்பத்திற்கு மாற்றமாக திரிபுனிதுராவில் உள்ள உதயம்பெரூர் சிவ ஷக்தி யோகா வித்யா மையம் என்ற மதமாற்ற தடுப்பு மையத்திற்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட பாலில் மயக்க மருந்து கலந்து அவர்கள் தன்னை இன்னோவா காரில் ஏற்றி அந்த யோகா மையத்திற்கு கடத்திச் சென்றதாக அஷிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய அவர், “என்னை கடத்த்திச் செல்லப்பட்ட வழியெல்லாம் நான் உதவிக்காக கத்தினேன், என்னை எனது தந்தையின் சகோதரர் மற்றும் அஷ்வின் என்ற யோகா மையத்தின் ஊழியரும் காரில் வைத்து அடித்து துன்புறுத்தி கடத்திச் சென்றனர். என்னை காப்பாற்றுமாறு நான் போட்ட கூச்சல் வெளியே கேட்காமல் இருக்க காரில் அதிக சப்தத்துடன் பாட்டுகளை அவர்கள் இசைக்கச் செய்தனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “நாங்கள் யோகா மையத்தை அடைந்ததும் காரில் இருந்து இறங்க நான் மறுத்தேன். அப்போது என்னை அவர்கள் கடுமையாக தாக்கி காரில் இருந்து என்னை இழுத்துப் போட்டனர். பின்னர் அவர்கள் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். என்னை ஒரு இருக்கையில் கட்டி வைத்து இரவும் பகலும் என்னை சித்திரவதை செய்தனர். அங்கு என்னை காப்பாற்றுமாறு எவ்வளவு கத்த முடியுமோ அவ்வளவு கத்தினேன். ஆனால் அந்த மையத்தில் எப்போதும் அதிக சப்தத்துடன் இசை ஒலித்துக்கொண்டே இருந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.

தனக்கு கொடுக்கப்பட்ட இந்த சித்திரவதைகள் அனைத்தும் அவர்கள் கூறுவது போல் சுஹைபுடனான உறவை முறித்துக்கொள்ள தான் ஒப்புக்கொள்ளும் வரை தொடர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி அஷிதாவின் சட்ட விரோத சிறையை எதிர்த்து சுஹைப் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனையடுத்து அஷிதாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜரான அஷிதா தனது விருப்பத்துடன் தான் தன்னுடைய பெற்றோருடன் இருப்பதாகவும் தான் சட்ட விரோத காவல் எதிலிலும் இல்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்ததும் ஷுஹைபின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது.

இது குறித்து கருத்து கூறிய அஷிதா, “நான் அப்போது நீதிமன்றத்தில் கூறிய எதுவும் உண்மையில்லை. நான் மிரட்டப்பட்டேன். அவர்கள் சுஹைபை கொன்றுவிடுவதாக மிரட்டினர்.“ என்று கூறியுள்ளார். தான் நீதிமன்றத்திற்கு செல்லுவதற்கு முன் தன்னை மனோஜ் குருஜி என்ற யோகா மையத்தின் இயக்குனரும் யோகா மையத்தின் ஊழியர்களும் மிரட்டினார்கள் என்றும் அஷிதா கூறியுள்ளார்.

“நான் நீத்மன்றம் செல்வதற்கு முன்னர் மனோஜ் மற்றும் அவரது சீடர்கள் என்னை மிரட்டினார்கள். அவர்கள் என்னுடைய பெற்றோர்களுடன் நீதிமன்றம் வந்திருந்தனர். நான் மிகுந்த அச்சத்தில் இருந்தேன். அவர்களின் அழுத்தத்தினால் நான் என் பெற்றோருடன் என்னுடைய வீடு செல்ல சம்மதித்தேன்.” என்று அஷிதா தெரிவித்துள்ளார்.

அஷிதா வின் பதில் மனு ஷுஹைபை வெகுவாக பாதித்தது. அவர் ஜிஹாதி என்றும் லவ் ஜிஹாத் மூலம் இந்துப்பெண்களை முஸ்லிமாக மதமாற்றம் செய்பவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து சுமார் ஒரு வாரம் கழித்து அஷிதா சுஹைபை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் மார்ச் 22 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இது குறித்து அஷிதா கூறுகையில், “எங்களது திட்டத்தை எனது பெற்றோர்கள் எப்படியோ தெரிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நடந்த அனைத்தும் என்னை வேண்டுமென்றே மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று நிறுவ நடைபெற்ற முயற்சிகள். என்னை அவர்கள் வடகரையில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் நான் மனோநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். “பின்னர் மார்ச் 23 ஆம் தேதி எனது தந்தையின் சகோதரர் என்னை மீண்டும் காரில் இழுத்துச் சென்று சில மருந்துகளை உட்கொள்ள வைத்தார். அதன் பின் நினைவிழந்த நான் கண்விழித்துப் பார்கையில் மீண்டும் யோகா மையத்தில் இருந்தேன்.“ என்று அவர் கூறியுள்ளார்.

அஷிதா மீண்டும் யோகா மையத்திற்கு கடத்தப்படும் போது ஷுஹைப் அவருடன் தொலைபேசில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு அஷிதா அலறும் சப்தம் கேட்டுள்ளது. அதனால் உடனடியாக இந்த சம்பவம் குறித்து தர்மதம் காவல் நிலைய துணை ஆய்வாளரிடம் ஷுஹைப் புகார் அளித்துள்ளார். மேலும் கிரிமினல் மனு ஒன்றும் தாக்கல் செய்தார். காவல்துறை துணை ஆய்வாளரோ, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக கூறி இந்த சம்பவத்தை மூடி மறைத்து விட்டார். இதனை தொடர்ந்த ஏழு மாதங்கள் அஷிதா அந்த யோகா மையத்தில் கழிக்க வேண்டியதாகிற்று.

இந்த யோகா மையமா நிழலுலக மதமாற்று தடுப்பு மையமா என்று நினைக்கும் அளவிற்கு அங்கு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் அதிர்சிகரமாக உள்ளன. இந்த யோகா மையத்தை குறித்து அங்கு சட்டவிரோதமாக 22 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட ஸ்வேதா ஹரிதாசன் என்கிற மற்றொரு பெண்தான் முதலில் புகாரளித்தார். தங்கள் மீது இத்தகைய புகாரை யோகா மையத்தை நடத்தி வருபவர்கள் சற்றும் எதிர்பராரததினால் அவர்கள் மாட்டிக்கொண்டனர். அரசும் அந்த யோகாமையத்திற்கு சீல் வைத்தது. அதனை நடத்தி வந்த மனோஜ் உட்பட பலர் தலைமறைவாகிவிட்டனர்.

ஸ்வேதாவின் புகாரை தொடர்ந்து ஷுருதி மேலேதத் என்கிற மற்றொரு பெண்ணும் தானும் அந்த யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரும் தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய யோகா மையத்திற்கு எதிராக தெரிவித்தார்.

இந்த யோக மையம் குறித்து தி நியுஸ் மினிட் தளத்திற்கு அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் சில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த யோகா மையம் முதலில் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள பெரும்பலத்தில் 1998 ஆம் ஆண்டு மனிஷா சம்ஸ்காரிகா வேதி என்ற பெயரில் கலாச்சார மையமாக தொடங்கியது என்றும் இதனை மனோஜ் கலாச்சார மையாமாக நடத்தி வந்தார் என்றும் அந்த முன்னாள் ஊழியர் கூறியுள்ளார். தான் இந்த மையத்தில் 2002 ஆம் ஆண்டு சேர்ந்ததாகவும் அப்போது இங்கு வேத கால வரலாறு மற்றும் இந்து மத கலாச்சாரம் குறித்து போதிக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு அவர்கள் இது தொடர்பாக பத்திரகை ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். இது கலாச்சார மையமாக அப்போது செயல்பட்டு வந்த காரணத்தினாலேயே தன்னைப் போன்ற பலரும் அங்கு பணியாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மனோஜ் இதனை யோகா மையமாக மாற்றியமைத்துள்ளார். மேலும் 2011 இந்து உதவி மையம் ஒன்றையும் இங்கு அமைத்துள்ளார். இந்த இந்து உதவி மையம் என்பது இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் செயலை செய்து வந்துள்ளது.

இது குறித்து யோகா மையத்தின் முன்னாள் ஊழியர் கூறுகையில், “சில இளம் பெண்கள் எங்கள் யோகா மையத்திற்கு அழைத்து வரப்படுவதை நாங்கள் கவனித்தோம். இந்த மையத்தில் இரண்டு தளங்கள் இருந்தன. நாங்கள் கீழ் தளத்தில் பணியாற்றினோம். இந்த மதமாற்றம் தொடர்பான செயல்பாடுகள் மனோஜ் மற்றும் அவரது நம்பத்தகுந்த சீடர்களால் நடத்தப்பட்டது. “ என்று அவர் கூறியுள்ளார்.

“ஒரு நாள் மதிய உணவு முடிந்து யோகா மையத்திற்கு நாங்கள் சென்ற போது இரண்டாம் தளத்தில் இருந்து ஒரு பெண் அழும் குரல் கேட்டது. இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம். பின் நாங்கள் இரண்டாம் தளம் விரைகையில் அங்கே ஒரு கன்னடப் பெண் இருக்கை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நாங்கள் கண்டோம்.”

“இந்த நிகழ்வை கண்ட உடனேயே எங்களில் பலர் எங்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டோம். ஆனால் சில வருடங்கள் கழித்து எங்கள் மீது நாங்கள் யோகா மையத்தில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்ததாக மனோஜ் வழக்கு பதிவு செய்தார். அவர் மிகவும் செல்வாக்குள்ள நபர். அதனால் எங்கள் மீது மனோஜ் வழக்கு தொடர்ந்த போது நாங்கள் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தோம்.” என்று கூறியுள்ளார்.

இந்த யோகா மையம் குறித்து அஷிதா கூறுகையில்,”பெயரில் மட்டும் தான் அது யோகா மையம். அங்கு யோகாவை தவிர எல்லாம் நடைபெற்றது. நாங்கள் மனோஜ் மற்றும் அவரது சீடர்களுக்காக உணவு சமைக்க வைக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் ஒரு முறை கூட யோக செய்ய வைக்கப்படவில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் அந்க மையத்தில் தங்கியிருந்தனர். எங்களுக்கு மனோஜ் சனாதன தர்மம் குறித்து வகுப்பெடுப்பார். இந்த வகுப்புகள் பிற மதங்களின் தீங்குகள் குறித்து இருக்கும். ஷுஹைபை இந்து மதத்திற்கு மாற்றுமாறு கூட மனோஜ் என்னிடம் கூறியுள்ளார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஷுஹைபுடன் தொடர்புகொள்ள தான் எடுத்த அத்துணை முயற்சிகளுக்கும் தனக்கு அடியும் உதையும் பதிலாக கிடைத்தது என்று அஷிதா தெரிவித்துள்ளார். செவிலியர் படிப்பு முடிந்ததும் இலக்கிய படிப்பு ஒன்றில் அஷிதா சேர்ந்திருந்தார். அதன் தேர்வு எழுத செல்லும் போது ஒரு முறை ஷுஹைபை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அவரை யோக மைய குண்டர்கள் தேர்வு மையத்தில் இருந்து இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். பின்னர் யோகா மையத்தில் அரை ஒன்றில் அடைத்து வைத்து லத்தியால் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த கும்பலால் தான் அமிர்தா மருத்துவ கல்வி நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தனக்கு மருந்துகள் தரப்பட்டது என்றும் அஷிதா குற்றம் சாட்டுகிறார். இது குறித்து அஷிதா கூறுகையில், “நான் அங்கு ஐந்து நாட்கள் இருந்தேன். அங்குள்ள மருத்துவருக்கு மனோஜ் தெரிந்தவராக இருந்தார். எனக்கு அங்கு சில மருந்துகள் தரப்பட்டது. இந்த மருந்துகள் உதவியுடனும் மருத்துவ சான்றிதல் கொண்டும் தன்னை நீதிமன்றத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று நிரூபிப்பது எளிது என்று அவர்கள் எனது பெற்றோரை நம்ப வைத்தனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்து மதத்தைவிட்டு மதம் மாறும் இளம் பெண்களை மயக்க மருந்து கொடுத்து கடத்துவது, சட்டவிரோத காவலில் வைப்பது, அறையில் அடைத்து வைத்து மிருகத்தனமாக தாக்கி சித்திரவதை செய்வது, தங்களின் மருத்துவ சகாக்கள் மூலம் அவர்களுக்கு மருந்துகள் கொடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக முயற்சிப்பது என்ற குற்றங்களுடன் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களும் கொடுக்கப்பட்டது என்று அஷிதாவும் யோகா மையத்தின் முன்னாள் ஊழியரும் தெரிவிக்கின்றனர்.

“அந்த யோகா மையத்தில் பணியாற்றிய முரளி என்பவன் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டான். இது குறித்து மனோஜிடம் நான் தெரிவித்ததும் அது குறித்து மேலும் நான் பேசக்கூடாது என்று மனோஜ் கூறிவிட்டார்.” என்று அஷிதா தெரிவித்துள்ளார்.

இப்படியான சித்திரவதை கூடத்தில் இருந்து அஷிதா மற்றும் அவரது தோழியான அஸ்வதி என்பவர்கள் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இது குறித்து அஷிதா கூறுகையில், “ஒருநாள் மாலை 7 மணியளவில் சமையலறை கழிவுகளை கொட்டச் செல்கிறோம் என்று கூறி நாங்கள் வெளியே சென்றோம். அப்போது வேலியை தாண்டி குதித்து அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் உள்ள புதர்களில் ஒளிந்துகொண்டோம். அங்கு தண்ணீர் எங்கள் இடுப்பளவிற்கு இருந்த போதும் நாங்கள் சுமார் மூன்று மணி நேரம் அங்கேயே ஒளிந்திருந்தோம். பின்னர் 10 மணியளவில் சாலைக்கு வந்தோம். அங்கு எல்தோ என்கிற டாக்ஸி ஓட்டுனரை சந்தித்தோம். அவர் நல்ல மனிதர். எங்களுக்கு அவர் 300 ரூபாய் கொடுத்து எங்களுக்கு தலச்சேரிக்கு இரண்டு ரயில் பயணச்சீட்டுகளும் பெற்றுத் தந்தார்.” என்று அஷிதா கூறியுள்ளார்.

பின் தனது வீட்டிற்கு சென்ற அஷிதா தனது பெற்றோரிடம் அவர்களுடன் தான் வாழ்வதாகவும் தன்னை மீண்டும் யோகா மையத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார். பின்னர் ஒருமாத காலம் தனது பெற்றோருடன் வாழ்ந்த அஷிதா அக்டோபர் 10 ஆம் தேதி அவரது பெற்றோரிடம் இருந்து தப்பி ஷுஹைபை சந்தித்துள்ளார். அன்றில் இருந்து அவர்கள் இந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி வாழ்ந்து வருகின்றனர்.

“என் மீது நடத்தப்பட்ட அத்துனை கொடுமைகள் மற்றும் துன்பங்களை தாங்கிக் கொண்டு நான் ஆறு மாத காலங்கள் வாழ்ந்துவிட்டேன். நான் அவர்களிடம் மாட்டிக்கொண்டதாக உணர்கிறேன். நாங்கள் வெகு நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கின்றோம். என் சொந்த குடும்பத்தை கண்டே நான் அஞ்சுகிறேன்.  என்னுடைய உயிர் ஆபத்தில் உள்ளது. நான் ஷுஹைபை திருமணம் செய்ய வேண்டும். நாங்கள் இருவரும் மதம் மாறப்போவதில்லை. நாங்கள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ளோம்.” என்று அஷிதா கூறியுள்ளார்.

தங்கள் மீதான இத்துனை குற்றச்சாட்டுகளையும் மனோஜ் மறுத்துள்ளதோடு அஷிதா மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இவை அனைத்தும் போலியான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். சித்திரவதை செய்வது எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அஷிதா 12 வகுப்பில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பள்ளியில் இருந்த போதே அவரது பெற்றோர்கள் அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். “ என்று கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் அஷிதா மிரட்டப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மனோஜ், அது உண்மையல்ல என்றும் நீதிமன்றத்தில் வைத்து ஒருவரை எப்படி மிரட்ட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அவர் எங்களுடன் ஒரு குடும்பம் போல வாழ்ந்து வந்தார். நாங்கள் நடத்திய பல கலாச்சார நிகழ்சிகளிலும் கூட அவர் பங்கெடுத்துள்ளார். இதற்கு எங்களிடம் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் யாருக்கும் எந்த கெடுதியும் செய்யவில்லை. எங்களது பெயரை கெடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் உள்நோக்கம் இதில் உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய யோகா மையத்தின் மீது குற்றம் சுமத்துபவர்கள் ஆஷிதா மற்றும் ஷுஹைப் மாத்திரம் அல்ல, ஸ்வேதா மற்றும் ரிண்டோ தம்பதியினரும் இது போன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர். ஆனால் ஸ்வேதா மற்றும் ரிண்டோவின் குற்றச்சாட்டுகளை அர்ஷ வித்யா சமாஜம் மறுத்துள்ளது. இந்த யோகா மையத்துக்கு தொடர்புடைய மற்றும் ஒரு பெண்ணான ஆதிரா இந்த யோகா மையத்தை குறித்து நற்சான்று கொடுத்துள்ளார். இவர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறி பின்னர் அவரது பெற்றோர்களால் இந்த யோகா மையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு வகை சந்தேகத்தை எழுப்புகிறது. எப்படியாயினும் இது போன்ற யோகா மைய போர்வையில் செயல்படும் அமைப்புகளை குறித்து தீவிர விசாரணை நடத்தபட வேண்டும் என்பது காலத்தின் தேவையாகியிருக்கிறது.

Comments are closed.