ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய ஆலோசனை

0

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நம் நாட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி, அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றி வரும் அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வையும் அவரே அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன என தெரிவித்தார்.

இதற்கிடையே பாலியல் வழக்கில் தலைமை நீதிபதியை சிக்கவைக்க சதி நடப்பதாகவும், அதுகுறித்து தனக்குத் தகவல் தெரியுமென்று உச்சநீதிமன்ற வழக்கறிஞா் உத்சவ் பெய்ன்ஸ் தகவல் தெரிவித்து இருந்தார்.  அதையடுத்து அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக பொதுவெளியில் அதாவது டெல்லி பத்திரிகையாளர் மன்றம் மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகுமாறு செய்யக்கோரி, அதற்குக்கூலியாக ஒன்றரை கோடி ரூபாய் வரை, அவருக்கு சிலர் தர முன்வந்தனர் என்று பிரமாணப் பத்திரத்தில் அவா் தொிவித்திருந்தாா். அதற்கான ஆதாரங்களையும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும்  என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மேலும், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் சதி உள்ளதா என்பது குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழுவுக்கு  சி.பி.ஐ., உளவுத்துறை, டெல்லி போலீசார் ஆகியோர்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.