ரபேல் ஒப்பந்தத்தில் எங்கள் மீது ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அரசால் திணிக்கப்பட்டது: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டே

0

ரபேல் ஒப்பந்தத்தில் எங்கள் மீது ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அரசால் திணிக்கப்பட்டது: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டே

ஆளும் பாஜக மோடி அரசின் மிகப்பெரிய ஊழலாக கருதப்படும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நடைபெற்று வரும் சர்ச்சைகளுக்கு நடுவில் அது நாட்டின் முன்னாள் அதிபர் கூறிய கருத்து பாஜகவின் உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது.

பிரான்ஸின் டச்சால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் போது ரிலையன்ஸ் நிறுவனத்தை பிரான்ஸ் தான் தேர்வு செய்தது என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. குறிப்பாக இந்த ஒப்பந்தமானது இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றும் இதில் இந்திய அரசு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியிருந்தது.

ஆனால் பிரெஞ்சு பத்திரிகையான Mediapart இற்கு ஹோலாண்டேவிடம் பேட்டியளிக்கையில் ரபேல் ஒப்பந்தத்திற்கு இந்தியத்தரப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது யார் என்றும் எதனடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று ஹோலாண்டடேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரான்சின் முன்னாள் பிரதமர் ஹோலாண்டே, ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் இந்தியத்தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட ஒரே நிறுவனம் அது ஒன்று தான் என்றும் எங்களுக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “இந்த விஷயத்தில் எங்களது கருத்து எதுவும் கேட்கப்படவில்லை. இந்திய அரசு இந்த நிறுவனத்தை முன்னிறுத்தியது. அதனால் டச்சால்ட் நிறுவனம் ரிலையன்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட நிறுவனத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்தை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி, இத்துடன் ஒரு விமானத்தின் விலை 590 கோடிகளில் இருந்து எப்படி 1690 கோடிகளாக மாறியது என்பதையும் ஹோலாண்டே விளக்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஹோலாண்டேவின் இந்த கருத்து இந்திய அரசு இதுவரை கூறிவந்த கருத்துக்களுக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது. தற்போது ஹோலாண்டேவின் இந்த கருத்துக்கு பின்னர், பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாசால்ட் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட ஒரு இந்திய நிறுவனத்தை இந்திய அரசு முன்னிருத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபரின் அறிக்கையை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய அரசோ அல்லது பிரெஞ்சு அரசோ தலையிட ஒன்றும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் முன்னிறுத்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் எரோனாட்டிகள் லிமிட்டட் (HAL) நிறுவனம் தகுதி வாய்ந்த நிறுவனமாக இல்லை என்ற காரணத்தினால் தான் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது என்று தெரிவித்தார். இதில் நகைமுரண் என்னவெனில் நிர்மலா சீதாராமன் அமைச்சராக இருக்கும் இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் தான் HAL நிறுவனமும் உள்ளது. நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த HAL நிறுவனத்தின் முன்னாள் தலைவர் T.சுவர்ண ராஜு, கச்சாப் பொருட்களின் நிலையில் இருந்து 25 டன் எடையுள்ள நான்காம் தலைமுறை சுகோய்-30 ரக விமானத்தை தாயாரிக்கவும், ரபேல் போர்விமான தயாரிப்பாளர் டச்சால்ட் நிறுவனத்தின் மிராஜ்-2000 விமானங்களை பராமரிக்கவும் திறன் பெற்றது HAL நிறுவனம் என்று கூறியுள்ளார்.

இன்னும் ஆசியாவிலேயே தலைசிறந்த விமான தயாரிப்பு நிறுவனங்களில் HAL நிறுவனமும் ஒன்று. சுமார் 60 ஆண்டுகாலம் விமான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த HAL தனது தொழில்நுட்ப திறன்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொண்டே வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான HAL 2017-2018 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 18519 கோடி ரூபாய் அளவிலான விற்பனைகளை செய்துள்ளது. விமான தொழில்துறை சந்தையின் வருகிற 2025 ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை தகுதி வாய்ந்த HAL நிறுவனத்தை தான் பாஜக அரசின் ரிலையன்ஸ் நிறுவன தேர்வை நியாயப்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறனற்றது என்று கூறினார். இன்னும் HAL இற்குப் பதிலாக இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனமோ விமான தயாரிப்பு தொழிலில் எந்த ஒரு முன்அனுபவமும் இல்லாத, வெறும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் உருவான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.