ரமலான்: இலக்கு எது ?

0

ஆன்மீகம்: ரமலான்:  இலக்கு எது ?

-முஹைதீன் அப்துல் காதர்
மாநில செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

சூடேறிய பாலைவனத்தில் வியக்கத்தக்க வகையில் பெய்யும் மழை ரமத். மனித உள்ளங்களில் இறையச்சம் எனும் மழையை பெய்விப்பது ரமலான். இறையச்சத்தை விதைத்திடவும் வளர்த்திடவும் செய்வதே ரமலானின் பிரதானமான இலக்கு என அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் 2:183)

இறையச்சம் என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்வு. அந்த உணர்விலிருந்தே நன்மையான செயல்கள் வெளிப்படுகின்றன. மனித மனதில் ஷைத்தானுக்கும் இறைவனுக்கும் மத்தியில் நிரந்தரமான போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். அதில் மனிதன் தான் இறைவனிடம் அளித்த வாக்குறுதிக்கு எந்த அளவு விசுவாசமாக நடந்துகொள்கிறானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் நன்மை மிகைக்கும். அவன் எந்த அளவுக்கு தன் மன இச்சைக்கு கட்டுப்பட்டு இறைவனைவிட்டும் தூரமாகின்றானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் தீமை மிகைக்கும். இந்த நிரந்தரமான போராட்டத்தில் தொடர்ந்து நன்மையின் பால் நம்மை உந்தி செலுத்துவதே இறையச்சம்.

ஒரு தடவை உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம், ‘இறையச்சம்’ என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக உபை இப்னு கஅப் (ரலி), “நீங்கள் இருபுறமும் முட்கள் சூழ்ந்த பாதையில் சென்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி), “ஆம். நான் சென்றுள்ளேன்” என்றார்கள். உபை இப்னு கஅப்(ரலி), “அந்தப் பாதையில் எப்படிச் செல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி), “என் ஆடைகளை கெண்டைக்காலுக்கு மேலுயர்த்தி முட்களில் பட்டுவிடாதவாறு பேணுதலாகச் செல்வேன்” என்றார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), “அப்படித்தான் இறையச்சமும்” என்றார்கள்.

இதுதான் இறையச்சம். உள்ளத்தில் நிரந்தரமாக இருக்கும் விழிப்புணர்வு. வாழ்க்கை என்னும் பாதையைச் சூழ்ந்திருக்கும் முட்களைக் குறித்த எச்சரிக்கையுணர்வு. பேராசை, தீய இச்சை, ஊசலாட்டம், பயம் ஆகியவை சரியான பாதையை விட்டும் நம்மை திசைதிருப்பும் முட்களாக இருக்கின்றன. இவைபோன்று இன்னும் ஏராளமான முட்களும் நம் பாதையில் காணப்படுகின்றன.

மனிதன் தன்னை முழுமையாக சுத்திகரிக்கும் மாதம் ரமலான். உள்ளத்தை  பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்துவதும் அதிகப்படியான அமல்கள் செய்வதன் மூலமாக உள்ளத்திற்கு  இறைவன் புறத்திலிருந்து ஒளியை பெறுவதும் வாழ்வின் எல்லா பாகங்களிலும் இறைவனை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய இறையச்சமுள்ள உண்மையான முஃமின்களாக மாறுவதும்தான்  ரமலானின் பிரதான இலக்கு.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.