ரயில் விபத்தில் சாதனை புரிந்து வரும் பாஜக

0

இன்று செவ்வாய்க்கிழமை நாக்பூர் சென்றுகொண்டிருந்த டுரொண்டோ விரைவு ரயில் (ரயில் எண்:12290) மகாராஷ்டிரா மாநிலம் அசன்கோன் பகுதி அருகே விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதுவரை எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க கல்யாணில் இருந்து மீட்புக்குழு சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய இந்த விபத்திற்கு காரணம், காசரா மலைப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதி கனமழையினால் அடித்துச் செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு தான் ரயில் தடம் புரண்டதற்கு காரணம் என்று மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் உதாசி தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த காஃபியத் விரைவு ரயில் உத்திர பிரதேசத்தில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்தில் 81 பேர் படுகாயமடைந்தனர். ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி முசாப்பர்நகரில் கலிங்கா உத்கல் விரைவு ரயில் தடம்புரண்டதில் 22 பேர் உயிரிழந்தனர்.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்ததும் ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்ற சுரேஷ் பிரபுவின் பதவிக்காலத்தில் கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவு மிக அதிகப்படியான விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 2016-17 இல் மட்டும் 193 பயணிகள் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மூன்று வருடங்களில் 157 ரயில் விபத்துக்களில் 84 பேர் உயிரிழந்தனர். இதில் 73 உயிரிழப்புக்கள் 2011-12 ஆண்டுக் காலத்தில் ஏற்ப்பட்டது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட 207 ரயில் விபத்துகளில் காயமுற்றோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1135 என்று தெரியவந்துள்ளது. முன்னதாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, இரயில்வே துறையில் பாதுகாப்பு காரணங்களுக்கான முதலீடு வருடம் ஒன்றிற்கு 32,972 கோடிகளில் இருந்து 54,031 கோடி ரூபாய்களாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 60% உயர்வாகும். ஆனால் அப்படியிருந்தும் ரயில் விபத்துக்கள் மற்றும் ரயில்கள் தடம் புரள்வது அதிகரித்து வருவது இந்த முதலீடுகள் எங்கே சென்றது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய மோடி அவரை காத்திருக்குமாறு கூறியுள்ளார்.

Comments are closed.