ரவிசங்கர் வாழும் கலை நிகழ்ச்சியில் வாழ்விழந்த நதிக்கரை: மீள 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்

0

கடந்த வருடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்திய வாழும் கலை நிறுவனம் நடத்திய உலக கலாச்சார விழா நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட யமுனா நதிக்கரை அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வர சுமார் 42.02 கூடி ரூபாய்கள் செலவாகும் என்றும் மேலும் இதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், “ஏறத்தாழ 20 ஹெக்டேர் பரப்பளவிலான யமுனா நதிக்கரையில் மேற்கு கரையும், சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவிலான கிழக்குக் கரையும் இவரது இந்த நிகழ்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

இந்த பாதிப்பை சரி செய்யவதற்கு உடனடியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கு ரூபாய் 28.73 கோடி செலவாகும் என்றும் இந்த நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள உயிரியல் கூறுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரி செய்ய 13.29 கோடி ரூபாய் செலவாகும் என்றும் இதுவும் உடனடியாக செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த மத்திபீடுகள் அனைத்தும் தோராயமானது தான் என்றும் இவற்றின் மீது  கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷஷி சேகர் தலைமை தாங்கிய இந்த கமிட்டி, இந்த நிலப்பரப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்ய நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைகள் குறித்தும் பரிந்துரைத்துள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த வாழும் கலை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கேதார் தேசாய், “இந்த அறிக்கையின் நகல் எங்களுக்கு கிடைப்பதற்கு முன்பே பத்திரிகைகளுக்கு கசிய விடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “இது அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது தான், தொடக்கம் முதலாக அவர்களின் நோக்கமே எண்களின் பெயரை கெடுப்பது தான். நாங்கள் அவர்களின் சதியால் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் உண்மை வெளிவர போராடுவோம்.’ என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையை தங்கள் நிறுவனம் முழுவதுமாக படித்து பின்னர் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2016  இல் ரவி ஷங்கரின் வாழும் கலை நிகழ்ச்சி யமுனா நதிக்கரையில் மூன்று நாட்கள் நடப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது, மேலும் இந்த நிகழ்ச்சியை தடுக்க தங்களால் முடியவில்லை என்பதையும் அது சுட்டிக்காட்டியது. கூடுதலாக வாழும் கலை நிகழ்ச்சி சுற்று சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பிற்கு 5 கோடி ரூபாய் அபராதமும் வித்திருந்தது.

தற்போது இந்த நிகழ்ச்சி யமுனா நதிக்கரைக்கு ஏற்படுத்திய பாதிப்பை கணக்கிட்ட 7 பேர் கொண்ட நிபுணர் குழு, இந்நிகழ்ச்சி யமுனா நதிப்படுக்கையை  முற்றிலுமாக சேதப்படுத்திவிட்டது என்று கூறியுள்ளனர். இதன் மறுசீரமைப்பு முயற்ச்சிகளுக்கு தேவைப்படும் மனிதவளம், நிதி ஆதாரம் மற்றும் நேரம் ஆகியவை யமுனா நதிக்கரை சீரமைப்பிற்கு தேவைப்படுவதை விட பன்மடங்கு அதிகமாக தேவைப்படும் என்று அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

ரவிஷங்கரின் இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள தாவரவகைகளை முற்றிலுமாக அகற்றி, அப்பகுதி நீர்பரப்பை மணலால் நிரப்பி இருக்கி மேடை உட்பட தற்காலிக கட்டிடங்கள் அமைத்துள்ளனர். மேலும் அப்பகுதிகளில் யமுனா நதியை மறித்து சாலைகளும் பாலங்களும் கட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியின் நிலப்பரப்பு, வாழ்விடம் பன்முகத்தன்மை, நீர்நிலைகள் இழப்பு, பல்லுயிர் மற்றும் தாவர இழப்பு, மணற்பரப்பு தன்மையின் மாற்றம், மாசடைதல், இன்னும் பல பாதிப்புகளை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது குறித்து மனுவளித்த மனோஜ் மிஸ்ரா என்பவர், நீண்டநாள் காத்திருந்த தனது இந்த அறிக்கை தற்போது வெளியானது குறித்து தான் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், பருவகாலங்களில் நிலத்தடி நீர் சேருவதற்கு தோதுவாக அந்த நிலப்பரப்பை மறு சீரமைப்பு செய்யும்பணி எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர் ஆனால் அது இந்த வருடம் சாத்தியமாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த நிலப்பரப்பை மறு சீரமைப்பு செய்ய 42.02 கோடி ரூபாய் ஆகும் என்று பசுமை தீர்ப்பாயம் கூறிய நிலையில், முன்னதாக நான்குபேர் கொண்ட மற்றொரு குழு இதே சீரமைப்பு பணிகளுக்காக வாழும் கலை நிறுவனம் 100 இல் இருந்து 200 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.