ராஜஸ்தானில் லவ் ஜிஹாத் குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை

0

ஃபாசிஸ கும்பல்கள் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் உயிர்களை பறித்தது போதாது என்று தற்போது லவ் ஜிஹாத் என்று கூறி கொலை செய்ய தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்சமந்த் மாவட்டத்தில் முஹம்மத் அஃப்ரசுல் என்கிற கூலித்தொழிலாளியை ஷம்புலால் ரீகர் என்றவன் கோடரியாலும் அறிவாளாலும் வெட்டி அவர் உயிருக்கு போராடிய நிலையில் செய்து பின்னர் தீயிட்டு கொளுத்தி கொலை செய்துள்ளான்.

இந்த கொடூர செயல் முழுவதையும் ஷம்புலாலின் நண்பன் ஒருவன் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்போனில் படம் பிடித்துள்ளான். இந்த கொலையை செய்யும் போது இந்த கொலைக்கு காரணமாக ஷம்புலால் லவ் ஜிஹாதை குறிப்பிடுவதும் அந்த வீயோவில் பதிவாகியுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி கொலை செய்யப்பட்ட முஹம்மத் அஃப்ரசுலை ஷம்புலால் மறைவான பகுதி ஒன்றிற்கு வேலை இருப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துள்ளான். பின்னர் அப்பகுதிக்கு முஹம்மத் அஃப்ரசுல் சென்றதும் அவரை தாக்கி கொலை செய்து அந்த செயல் முழுவதையும் படம் பிடித்துள்ளான் ஷம்புலால்.

தான் தாக்கப்படும் போது அஃப்ரசுல் கொலைகாரன் ஷம்புலாலிடம் கெஞ்சுவதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை அப்பகுதியில் இருந்து பாதி எறிந்த நிலையில் உள்ள உடல் ஒன்றையும் அரிவாள் கோடரி முதலிய ஆயுதங்களையும் காவல்துறை கைபற்றியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ராஜ்நகர் காவல்துறை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 302 மற்றும் 201 (ஆதாரங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த கொலை பதிவாகியுள்ள வீடியோவில் கொலைகாரன் முஸ்லிம்களுக்கு எதிராக பல கருத்துக்களை தெளிவாக கூறியிருந்த போதிலும் அது தொடர்பாக எந்த ஒரு பிரிவிலும் காவல்துறை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பித்தக்கது.

இது குறித்து ராஜ்நகர் காவல்நிலைய அதிகாரி ராம்சுமர் மீனா இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “மேற்கு வங்கத்தை சேர்ந்த முஹம்மத் அஃப்ரசுல் ராஜ்சமந்த் பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினரும் அவருடன் வசித்து வந்துள்ளனர். இந்த கொலைக்கான நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஷம்புலாலை கைது செய்ததும் அது எங்களுக்கு தெரியவரும். அவரை பல காவல்துறை பிரிவுகள் தேடி வருகிறது.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பங்கஜ் குமார் சிங் தெரிவிக்கையில், “குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய நாங்கள் முயன்று வருகிறோம். மேலும் அவரது குடும்பத்தினரிடமும் நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த கொலையில் இருப்பதாக கூறப்படும் மதவாத கோணம் குறித்தும் நங்கள் விசாரித்து வருகின்றோம். கைதிற்குப் பின் எங்களுக்கு மேலும் தகவல்கள் தெரிய வரும்.” என்று கூறியுள்ளார்.

எப்படியாகினும் இந்த கொலைக்கு காரணம் பாஜக வின் லவ் ஜிஹாத் என்ற போலிப் பரப்புரையே என்று தெளிவாகிறது.

Comments are closed.