ராஜஸ்தான் ஜெய்பூரில் காவல்துறை அராஜகம் – ஒருவர் பலி

0

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காவல்துறையினரின் அரஜாகம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இரு சக்கர வாகனத்த்தில் சென்ற முஸ்லிம் தம்பதியினர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஜைபூரின் ராம்கஞ் பகுதியில் காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுரித்து தாக்கப்பட்ட சாஜித் கூறுகையில், “நான் எனது மனைவி மற்றும் மூன்று வயது மகளுடன் ராம்கஞ் பகுதியை கடக்கையில் எங்களை ஒரு காவலர் லத்தியால் கடுமையாக தாக்கினார். இதில் எனது மகள் வாகனத்தில் இறுதி கீழே விழுந்துவிட்டாள். இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்க நாங்கள் சென்ற போது எங்களை தரக்குறைவாக பேசிய காவலர்கள் எங்களிடம் இருந்து புகாரை பெறாமால் மூன்று மணி நேரம் அங்கு எங்களை காக்க வைத்தனர். அங்கிருந்த சில காவலர்கள் குடி போதையில் இருந்ததையும் நாங்கள் காண நேர்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அன்றாடம் நடப்பவை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதி காவல்துறையினரின் அராஜகம் குறித்து அஸ்லம் கான் என்பவர் கூறுகையில், “சாலையில் செல்லும் வாகனங்களை தங்கள் இஷ்டப்படி நிறுத்தி பல்வேறு குற்றிகளை கூறி 5000 ரூபாய் வரை காவல்துறையினர் பிடுங்குகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் அலைபேசியுடன் நின்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை காலால் உதைத்து தனது லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார் ஒரு காவலர். இதில் அந்த சிறுவனிற்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து தற்போது இந்த சம்பவத்தை தொடர்ந்து புகாரளிக்கச் சென்றவர்கள் திரும்புவதற்கு நேரமாகவே காவல் நிலையம் முன்பு கூடிய கூட்டத்தில் உள்ளவர்கள் பொறுமையிழந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றும், பல வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தை கலைக்க காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 வயது முஹம்மத் ரயீஸ் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

“அன்றிரவு ஒன்பது மணியளவில் வீட்டில் நடைபெறும் விசேஷம் ஒன்றிற்காக ரயீஸ் சில பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் அவரின் தொலைபேசியை அழைத்தோம். அப்போது வேறு எவரோ அழைப்பினை எடுத்து ரயீஸ் சுடப்பட்டுள்ளதாகவும் SMS மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தகவல் அறிந்து நாங்கள் மருத்துவமனை விரைந்த போது அங்கு ரயீஸ் இல்லை. அவர் தாமதமாகவே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனை வந்தடைந்த பிறகும் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதப்படுத்தப்பட்டது. இதனால் அதிகப்படியாக இரத்தம் வெளியேறி ரயீஸ் உயிரிழந்துவிட்டார்.” என்று அவரது சகோதரர் ஜமீல்ல் கூறியுள்ளார்.

மேலும் கூறிய ஜமீல், “எனது சகோதரருக்கு அவரது மார்பின் அருகே இடது தோள்பட்டையில் துப்பாக்கிச் சூட்டினால் காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் எந்த ஒரு காரணத்திலும் இடுப்புக்கு மேலே சுட அனுமதி இல்லை. ரயீஸின் குடும்பத்தில் வருமானம் உள்ள ஒரே நபர் அவர் தான். அவரது தந்தையும் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ரயீஸிற்கு திருமணமாகாத மூன்று சகோதரிகள் உள்ளனர். இன்று வரை இது தொடர்பாக காவல்துறை எங்களது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் புகாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மாநில பாஜக தலைவரிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. பிணவறைக்கு முன் சுமார் நூறு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் எங்களுக்குள்ளேயே பேசுவதற்கு கூட அனுமதி வழங்கப்படுவது இல்லை.” என்று ஜமீல் கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கேள்வி எழுப்பிய ராம்கஞ் பகுதியை சேர்ந்த ஜாஸ்மீன் ஃபரூக்கி என்பவர் “யாருடைய உத்தரவின் பேரில் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காவல்நிலையத்தில் அப்போது எந்த ஒரு மூத்த அதிகாரியும் இல்லை. ரயீஸ் காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து சுடப்பட்டுள்ளார். கூட்டத்தினரை ஏன் அவ்வளவு தொலைவிற்கு அவர்கள் விரட்டிச் சென்றனர்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது போன்று இங்கு நடப்பது இது முதன் முறையல்ல என்றும் ராம்கஞ் பகுதியில் காவல்துறையினர் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகின்றனர் என்றும் ஃபரூக்கி தெரிவித்துள்ளார். சாலயோர வியாபாரிகளை தாக்கி துன்புறுத்துவது அப்பகுதி காவல்துறையின் தினசரி வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறை மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டினை குறித்து காவல்துறை துணை ஆணையர் சத்யேந்திர சிங், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை ஆணையர் சஞ்செய் அகர்வால்,” இது போன்ற சூழ்நிலைகளில் சரி தவறு என்று எதுவும் இல்லை. இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது துரதிர்ஷ்டவாமானது. ஆனால் காவல்துறையினர் சரியாக செயல்பட்டனர் என்பதற்கான முழு ஆதாரங்கள் உள்ளது. “ என்று கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய ராம்கஞ் பகுதியின் மக்களிடம் காவல்துறையினர் தங்களின் மதிப்பை இழந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது தேவைக்கு அதிகமான பலப்பிரயோகம் காவல்துறையினரால் அங்கு அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய இந்த பதற்றத்தை தொடர்ந்து நான்கு காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்பகுதியில் இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது.

Comments are closed.