ராஜஸ்தான்: பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டவர் மரணம்

0

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் பசுக்களை கடத்தினார் என்று கூறி பசு பாதுகாவல் குண்டர்களால் தாக்கப்பட்ட பெஹ்லு கான்(வயது 35) என்பவர் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார்.

ஹரியானாவின் நுஹ் பகுதியை சேர்ந்தவர் பெஹ்லு கான். இவரை மாடுகளை கடத்தினார் என்று கூறி பசு பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் அங்கு மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் அப்பகுதி பாஜகவினர் பசு பாதுகாவல் என்ற பெயரில் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துள்ளதகாவும் இதன் ஒரு பகுதியாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஆறு பேர் மீதும் அடையாளம் தெரியாத 200 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பஹ்ரோர் பகுதி காவல்நிலைய அதிகாரி ரமேஷ் சின்சின்வர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் கடந்த வருடம் மட்டும் சுமார் 40 முஸ்லிம்களின் வீடுகளை பசு பாதுகாப்பு என்கிற பெயரில், வலது சாரி குண்டர்கள் சூரையாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உத்திர பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் மாடுகளை கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகியுள்ளது. முன்னதாக 2011 இல் திருத்தம் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி மாடுகளை அறுத்தால் ஏழு ஆண்டுகள் சிறையும் 50000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். தற்போது திருத்தப்பட்டுள்ள குஜராத் மிருக பாதுகாப்பு சட்டத்தின் படி இதற்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் ஜடேஜா கூறுகையில், “இந்த புனிதமான நவராத்திரியின் போது, சாதுக்களின் பரிந்துரைப் படி குஜராத் மிருக பாதுகாப்புச் சட்டம் 2011 இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டம் தான் இந்தியாவில் கடுமையான சட்டம்.” என்று அவர் கூறியிருந்தார். முன்னதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, “பாஜக, பசு, கங்கை மற்றும் கீதையை பாதுகாக்க தன்னை அர்பணித்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்தீஸ்கர் முதல்வரோ பசுவை கொல்பவர்கள் தூக்கிலடப்படுவார்கள் என்று கூறியிருந்தார். (பார்க்க செய்தி)

ராஜஸ்தானில் மாடுகளை அறுப்பதோ, மாட்டிறைச்சி விற்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் ஆறு மாதங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரையிலான சிறை தண்டனை கிடைக்கக் நேரிடும்.

Comments are closed.