ராஜஸ்தான் பாஜக அரசின் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான கறுப்புச் சட்டம்

0

 

ராஜஸ்தானை ஆளும் பாஜக அரசு கிரிமினல் சட்டத்தில் சட்டதிருத்தம் ஒன்று கொண்டுவந்துள்ளது. தற்போது பணியில் உள்ள மற்றும் முன்னாள் நீதிபதிகள் மற்றும் அரசு ஊழியர்களை முன் அனுமதி இன்றி விசாரணை செய்யக் கூடாது என்றும் அவர்கள் மீதான விசாரணைக்கு அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அது குறித்து செய்திகள் வெளியிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த மசோதாவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த சட்ட திருத்தங்களை கண்டித்து பத்திரிகையாளர்கள் ராஜஸ்தான் சட்டசபை நோக்கி பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு வழக்கிஞர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 6 அன்றே இந்த மசோதா பிரகடனம் செய்யப்பட்டாலும் அதனை சட்டமாக்கும் தனது திட்டத்தை அரசாங்கம் அக்டோபர் மாத இறுதியில் தெரிவித்த போதுதான் அது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே படுகொலைகள், மிரட்டல்கள், வழக்குகள் என்று ஒடுக்கப்படும் பத்திரிகையாளர்களை மேலும் நசுக்குவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும் என்று இதனை எதிர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.
இது போன்ற சட்டங்கள் அமலுக்கு வருமேயானால் பத்திரிகை சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டு அரசு மட்டத்தில் நடக்கும் ஊழல்கள் அனைத்தும் மக்களிடம் இருந்து மறைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சமீபத்தில் பாஜக தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனத்தின் ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட தி வயர் செய்தி நிறுவனத்திற்கு நீதிமன்றம் மூலம் அந்த செய்தியை மேலும் வெளியிடக் கூடாது என்று பாஜக உத்தரவு பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சட்ட திருத்தத்திற்கு ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.