ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மறைக்கப்படும் வரலாறு

0

இந்திய சுதந்திரப் போராட்டங்களைக் குறித்தும் அப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் குறித்தும் வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்கள் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெரும்.

இவ்வாறு ராஜஸ்தான் மாநில சமூக அறிவியல் பாடத்திட்டத்திலும் இப்பாடங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் நேரு உள்பட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மற்றும் சரித்திரங்கள், சுதந்திரத்திற்கு பின்பு அரசு அமைக்க இவர்களின் பங்களிப்புகள் குறித்து விபரமாக பாடங்கள் இருந்தது.

ஆனால் தற்போது ராஜஸ்தான் மாநில பாடத்திட்டத்தில் மறுசீரமைப்பு என்கிற பெயரில் பல வரலாறுகளை மறைத்துள்ளனர். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வீர் சர்வார்கர், பகவத் சிங், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோரின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளது. ஆனால், நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது குறித்த தகவல்கள் கூட இதில் இடம் பெறவில்லை. இன்னும் மறுசீரமைக்கப்பட்ட இப்பாட புத்தகத்தில் மகாத்மா காந்தியின் கொலை குறித்தும் கோட்சே குறித்த செய்திகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி கூறுகையில், ”நான் இன்னும் அந்த புத்தகத்தை பார்க்கவில்லை. இனிமேல்தான், பார்க்க வேண்டும். தற்போது பாடத்திட்டங்கள் அனைத்தும் தன்னாட்சி அமைப்பால் உருவாக்கப்படுகிறது. எனவே, இதில் மாநில அரசோ, நானோ தலையிட முடியாது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.