ராம்குமார் தற்கொலையில் மர்மம்?

0

சென்னை சுவாதி கொலையில் முக்கிய குற்றவாளியான ராம்குமார் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் இந்த கூற்றை பலரும் சந்தேகிகின்றனர். இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாத நிலையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொலை செய்துள்ளனரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் சிறை அறையில் எந்தவித மின் கம்பிகளும் போவது இல்லை என்றும் பொதுவாகவே சிறையில் எளிதில் தெரியக்கூடிய வகையில் மின்கம்பிகள் இருக்காது என்றும் அப்படியிருக்க முக்கிய குற்றவாளி ஒருவர் இருக்கும் அறையில் எப்படி இது போன்ற பாதுகாப்பு குறைபாடு இருக்க முடியும் என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் ராம்குமார் இருந்த சிறை அறையிலிருந்து சந்தேகிக்கும்படி எந்தவித சத்தமும் வரவில்லை என்றும் சக கைதிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராம்குமாரின் மரணம் சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைத்து ராம்குமாரை கொலையாளியாக்க நடத்தப்பட்ட நாடகமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராம்குமாரின் தந்தை தனது மகன் சிறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ராம்குமாரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

ராம் குறைன் மரணத்தை அடுத்து இரு வேறு விதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ராம்குமார் செய்த கொலைக்கு சரியான தண்டனை அவருக்கு கிடைத்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களும், சிலரை தப்ப வைப்பதற்காக ராம்குமார் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பது போன்ற பதிவுகளும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

ராம்குமாரின் மரணத்திற்கு பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ராம்குமார் தற்கொலைக்கு தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.