ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் காங்கிரஸ் திட்டத்தை மக்கள் விரோத செயல் என்று கூறிய பா.ஜ.க.

0

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு 2005 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்போவதாகவும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளுக்கு பகரமாக மாற்றித்தரப்படும் என்றும் அறிவித்தது. அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க.வின் மீனாக்ஷி லேகி அப்போதைய நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தை கடுமையாக சாடினர்.

இது குறித்து, “2005 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நிதி அமைச்சகத்தின் தந்திரம் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப்பணத்தை மறைக்கும் செயல். இது முற்றிலும் ஏழை எளிய மக்களுக்கு விரோதமானது” என்று கூறியிருந்தார்.

பா.சிதம்பரத்தின் இந்த திட்டம், வங்கி கணக்கு இல்லாத படிப்பறிவற்ற அன்றாடங்காச்சிகளையும் பாமர மக்களையும் பாதிக்கும் திட்டம் என்று மீனாக்ஷி லேகி கூறியிருந்தார். மேலும் இந்தியாவில் 65% மக்கள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்றும் அத்தகைய மக்கள் தங்களது சேமிப்புகளை ரூபாய் நோட்டாகத்தான் வைத்துள்ளனர் என்றும் அவர்களே இந்த திட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் என்று கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் அரசின் இந்த திட்டம் கறுப்புப் பணத்தை ஒழிக்க எந்த விதத்திலும் உதவாது என்றும் அவர் கூறியிருந்தார்.

தற்போது ஆளும் பா.ஜ.க அரசு எதனை தாங்கள் முன்னதாக ஏழை பாமர மக்களை பாதிக்கும் திட்டம் என்று கூறினார்களோ அதே திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் தற்போது தங்களது அன்றாட செலவுகளுக்காக பணம் வேண்டு வரிசையில் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் மீனாக்ஷி லேகிக்கு பதிலாக அமித் ஷா இது சிறந்த திட்டம் என்று கருத்து கூறியுள்ளார். மேலும் இத்திட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் அனைத்தும் கருப்புப்பணம் பதுக்குபவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்று அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து அவர், “என்னால் கருப்புப்பணம் பதுக்கியவர்கள், கள்ள நோட்டு அடித்தவர்கள், தீவிரவாதிகள், ஹவாலா பண பரிவத்தனை செய்து வந்தவர்கள், நக்சலைட்டுகள் போதை மருந்து கடத்துபவர்களின் வேதனையை புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் இது குறித்து சில அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவிப்பது தான் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கூறி மோடி அறிவித்துள்ள இந்த திட்டத்தை பலர் பாராட்டினாலும் எதிர்கட்சிகள் இதனை ஏழை எளிய மக்களை துன்புறுத்தும் முடிவு என்று சாடியுள்ளனர். வங்கிகளில் தங்களது பணத்தை மாற்றிக்கொள்ள வரிசையில் நின்ற மக்களுடன் வரிசையில் நின்ற ராகுல் காந்தி, “இந்த வரிசையில் எந்த கோடீஸ்வரரும் இல்லை. மக்களின் துயரங்களை இந்த அரசு எப்போதும் புரிந்துகொள்ளாது” என்று கூறியுள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ருபாய் நோட்டுகளில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது என்றும் அவற்றை கள்ள நோட்டாக அச்சிடுவது மிக சிரமம் என்றும் முன்னதாக பா.ஜ.க வினரால் கூறப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கி இந்த ரூபாய்களில் ஏற்கனவே இருந்த பாதகாப்பு அம்சங்கள் மட்டும் தான் உள்ளன என்றும் புதிதாக பாதுகாப்பு அம்சங்களை இந்த நோட்டுகளில் அறிமுகப்படுத்த போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியது.

தற்போது கர்நாடகாவின் சிக்மகளூர் பகுதியில் புதிதாக வந்த 2000ருபாய் நோட்டுகளின் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நோட்டுகள் APMC சந்தையில் கண்டெடுக்கப்பட்டதாக விஜய் கர்நாடகா என்ற அப்பகுதி செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கள்ள நோட்டுகளின் நிறம் அச்சு அசலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளைப் போலவே உள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரூபாய் தாள்கள் கத்தரியால் வெட்டியது போல் தெரிகிறது என்று கூறப்படுகிறது.

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மிகுந்த உற்சாகத்துடனும் பொறுமையுடனும் தற்போதுள்ள கஷ்டங்களை நாட்டு நலனுக்காக பொறுத்துகொண்ட மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Comments are closed.