ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பலியான உயிர்கள்: தன் உயிருக்கு ஆபத்து என்று கூறும் மோடி

0

மும்பையின் கோவந்தி பகுதியில் வசித்து வருபவர்கள் ஜகதீஷ் மற்றும் கிரண் ஷர்மா. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்ததை தொடர்ந்து நாட்டு மக்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி வரும் இவ்வேளையில் அரசின் இந்த முடிவிற்காக இந்த தம்பதியினர் கொடுத்த விலை மிக அதிகம்.

இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் பணம் டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் அதனை அரசு செல்லாது என்று அறிவித்த காரணத்தினால் அவர்களால் மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்ட இயலவில்லை. இதன் விளைவாக தங்களது குழந்தையை இழந்துள்ளனர் அந்த தம்பதியினர்.

கடந்த புதன்கிழமை கிழமை வீட்டில் இருந்த கிரணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது கணவர் தாங்கள் கடந்த ஆறு மாதகாலமாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு தனது மனைவியை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு முன்பணமாக ரூபாய் 6000 த்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 தாள்களை அவர் கட்டனமாக செலுத்த முன்வரவே அதனை மருத்துவமனை நிராகரித்துள்ளது.

“நான் அவர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன், மருத்துவமனைகள் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது என்றும் கூறிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எனக்கு செவிமடுக்க மறுத்துவிட்டனர்” என்று ஜகதீஷ் ஷர்மா கூறியுள்ளார்.

தனது குழைந்தையின் ஃபைலை கூட பெற முடியாமல் தங்கள் குழந்தையை வேறு மருத்துவமனையிலும் அனுமதிக்க முடியவில்லை என்று ஜகதீஷ் கூறியுள்ளார். இதனை அடுத்து காய்ச்சலால் அவரது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு ஜகதீஷ் கடிதம் எழுதியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில் கொல்கத்தாவின் பேலூர் பகுதியில் ATM முன்பு பணத்திற்காக வரிசையில் நிற்க முடியாமல் 27 வயது பெண் ஒருவர் 10 மாடி கட்டடத்தின் மேல் இருந்து குத்தித்து தற்கொலை செய்துள்ளார். மது என்ற அப்பெண்ணை அவரது கணவர் பிரஜேஷ் தங்கள் வங்கி ATM இல் பணத்தை எடுப்பதற்காக தான் வரும் வரை வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். ஆனால் வரிசையில் நிற்காமல் விரக்தியடைந்து மது தனது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் மது தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் அவரை மாடியில் இருந்து தள்ளி விட்டுள்ளனரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
பீகாரின் கைமூர் பகுதியில் தனது மகளுக்கு திருமணம் வைத்திருந்த ராம் அவாத் சஹ என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக 500, 1000 மாக சேர்ந்தது வைத்திருந்த 35000 ரூபாய் அரசின் அறிவிப்பை தொடர்ந்து செல்லாததாகிவிட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். இவர் தனது நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு வரும் வருடத்தின் தொடக்கத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தார் என்றும் அதற்காக 35000  ரூபாயை அவர் சேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. நவம்பர் மாதம் 8 ஆம் தேதி. மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதது என்று அறிவித்ததை தொடர்ந்து தனது மகளின் வாழ்க்கை வீணாகிவிட்டதே என்று எண்ணி கவலையுற்ற அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ராம் அவாத் சாஹ் வின் உறவினரான ஷாந்தி தேவி, “மோடியின் அறிவிப்பை தொடர்ந்து சாஹ் ஒருவித அச்சத்துடனும் பதட்டத்துடனும் காணப்பட்டார். தன் மகள் திருமணத்திற்காக சேத்துவைத்த பணத்தை மணமகன் வீட்டார் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று எண்ணி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவி, அரசின் இந்த அறிவிப்பால் தங்கள் நிலத்தை விற்று பெற்ற 54 லட்ச ரூபாய் செல்லாது என்று நினைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தெலுங்கானாவின் செனாகபுரம் பகுதியில் வசித்து வந்தவர் கண்டுகுறி வினோதா. இவர் தனது கணவரின் மருத்துவ செலவிற்காக தங்களின் 12 ஏக்கர் நிலத்தை விற்று 56.40 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதில் தன் கணவரின் மருத்துவ செலவிற்கு 1.4 லட்சம் போக மீதி பணத்தை வைத்து விவசாயத்திற்காக வேறு நிலம் வாங்கலாம் என்று எண்ணி தனது வீட்டில் வைத்துள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதும் அவரது குடும்பத்தில் பெரும் குழப்பம் நிலவியதாக தெரிகிறது. தங்களின் மொத்த பணமும் செல்லாகாசாகிவிட்டதை எண்ணி மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேராளாவில் தனது ஐந்து லட்ச ரூபாய் பணத்தை மாற்ற வங்கி சென்ற 48 வயது முதியவர் இரண்டு மாடி கட்டதடித்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் முதல் நாளும் தனது பணத்தை மாற்ற வங்கிக்கு சென்று முடியாமல் திரும்பியுள்ளார். இரண்டாவது நாளாக அவர் வங்கிக்கு செல்கையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

நாடு முழுவதும் மக்கள் அரசின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு துன்பத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய மோடி, கருப்புப்பணத்தை பதுக்கியவர்கள் தற்போது நாலாயிரம் ரூபாய்க்காக வங்கி வரிசியைல் நிற்கின்றனர் என்றும், கருப்புப்பணத்தை ஒழிக்க தான் எடுத்த இந்த நடவடிக்கையினால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தன்னை உயிருடன் எரித்தாலும் கருப்புப்பணத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு இந்த கருப்புப்பணத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தான் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை எதிர் கட்சிகள் அரசியலாக்குகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று காங்கிரஸ் அரசு அறிவிக்க திட்டமிட்ட போது அது மக்கள் விரோத நடவடிக்கை என்றும் அது வெறும் பாமர மக்களையே பாதிக்கும் என்று பா.ஜ.க. கூறியது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.