ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை நிறுத்துமாறு மியான்மாருக்கு ஐ.நா. வற்புறுத்தல்

0

ஐ.நா வின் மனித உரிமை கண்காணிப்பாளர் சயீத் ராஅத் அல் ஹுசைன் கடந்த திங்கள் அன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை நிறுத்துமாறு மியான்மார் அரசை வற்புறுத்தியுள்ளார்.

மியான்மாரின் ராகைன் மாநிலத்தில் வசிக்கக்கூடிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெளத்த பேரினவாத குழுக்களால் பல்வேறு வகையிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று ஐ.நா. மணித் உரிமை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. நாட்டின் பகுதிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உயிர்களுக்கு எந்நேரமும் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கின்றது. இவர்களுக்கு மருத்துவம் மற்றும் கல்விக்கான உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இப்பகுதி முஸ்லிம்கள் அடிமைகள் போல் வேலை வாங்கப்படுவதும் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இவர்களின் அரசியல் உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் 120,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

பெளத்த இனவாத குழுக்களின் வெறுப்புப் பேச்சுக்கள் இன்னும் அதிகரித்துள்ளது என்றும் இதனால் மீண்டும் இவர்கள் மீதான வன்முறைகள் நடக்க கூடும் என்றும் சயீத் தெரிவித்துள்ளார். இவர்கள் மீதான வன்முறைகள் மனித இனத்திற்கு எதிரான வன்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது புதிதாக அமைந்துள்ள அரசும் தனது சட்டம் மற்றும் கொள்கைகளை சிறுபான்மையினருக்கான உரிமைகள் கிடைக்கப் பெறுவதை மறுக்குமாறு அமைத்துள்ளது. வன்முறையாளர்களை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்பது மேலும் வன்முறைகளை ஊக்குவிக்கும் என்று சயீத் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்று மியான்மார் அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.