ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு ஐ.நா.மனித உரிமை தலைவர் கண்டனம்

0

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர், ரோஹிங்கிய முஸ்லிகளை மியான்மாரில் மனித உரிமை மீறகள் நடைபெற்று வரும் சமயத்தில் வெளியேற்ற இந்தியா எடுத்திருக்கும் முடிவை கண்டித்துள்ளார். இது குறித்து ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 36வது கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜெய்த் ராஅத் அல் ஹுசைன், இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜூஜூ வின் அறிக்கையை குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் இந்தியா ஒட்டுமொத்தமாக அந்த அகதிகளை வெளியேற்ற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கொடுமையான வன்முறைகள் நடைபெறும் இது போன்ற காலகட்டத்தில் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றுவது குறித்து இந்தியா தற்போது எடுத்துள்ள முடிவுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். சுமார் 40000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 16000 பேர் அதிகாரப்பூர்வமாக அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா சர்வதேச அகதிகள் மாநாட்டில் கையெழுத்திடவில்லை என்ற காரணத்தினால் இந்த விஷயத்தில் சர்வதேச சட்டத்தை கொண்டு, அடிப்படை கருணை கொண்டு செயல்பட முடியும் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைக்கு அது ஒப்புதல் வழங்கியதால், சர்வதேச கொள்கைகளின் படி எந்த நாட்டில் இந்த அகதிகள் துன்புருத்தப்படுவார்களோ அதே நாட்டிற்கு இந்தியா கூட்டாக அகதிகளை வெளியேற்ற முடியாது” என்று அவர் கூறியுள்ளார். மியான்மாரில் ராகைன் மாநிலத்தில் மியான்மார் இராணுவத்தால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் வருகின்றனர்.

சமீபத்தில் அகதிள் குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, அகதிகளை ஏற்றுக்கொள்வது குறித்து இந்தியாவிற்கு யாரும் பாடம் கற்றுத்தர தேவையில்லை என்றும் இந்தியா அதிகப்படியான அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், “சர்வதேச இயக்கங்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்கிறேன். ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஐநா மனித உரிமை கழகத்தில் பதிவு செய்யப்பட்டவர்களா இல்லையா? அவர்கள் இந்தியாவின் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்.” என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கே ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்துடன் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை குறித்தும் இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்தும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

‘மேலும் நான் இந்தியாவில் அதிகரித்து வரும் சிறுபான்மையினருக்கு எதிரான சகிப்பின்மை குறித்தும் கலக்கமுற்றுள்ளேன். தற்போது பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நடைபெறும் வன்முறைகள் அபாயகரமாக உள்ளது. அடிப்படை மனித உரிமை பேசும் நபர்கள் கூட அச்சுருத்தப் படுகின்றனர். தொடர்ச்சியாக பிரிவினைவாதம், மற்றும் வெறுப்பு கருத்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் 12 நகரங்களில் கூட்டுப் படுகொலைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களும் மனதிற்கு திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் பலகீனமான குழுக்களுக்கான பணியாற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டு அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் மீது அரசு கிரிமினல் குற்றம் சாட்டி ஒடுக்குகிறது.” என்று கூறியுள்ளார்.

ஹுசைனின் இந்த கருத்துக்கள் குறித்து பதிலளித்த ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்த பிரதிநிதி அஜித் குமார், ஹுசைனின் கருத்துக்கள் செயற்கைத் தனமானவை என்று கூறியுள்ளார்.

Comments are closed.