ரௌத்திரம் பழக்குவோம்

0

 – ஆமினா முஹம்மது

            தலையிலிருந்து நழுவிவிடும் துணியை அடிக்கொருமுறை ஒழுங்குபடுத்தினாலே  போதும் எனும் நிலையிருந்து மாறி பெண்கள் இன்று முழு ஹிஜாப் அணிய தொடங்கியுள்ளார்கள்.   பெண்கள் தன்னளவில் பல வரையறைகளுடன் ஒழுக்கத்துடன் வாழ தலைப்பட்டுள்ளனர். கொள்கையினை  விட்டு கொடுப்பது தன்மான பிரச்சனையெனும் அளவில் அவர்களிடையே விழிப்புணர்வு வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையை நாம் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா என்பதில்தான் பல கேள்விக்குறிகள்!  கலாச்சார சீர்கேட்டில் மேலோங்கிய  மேலைநாடுகளில் வாழும்  இஸ்லாமியப் பெண்களுடன் ஒப்பிடுகையில்  இந்திய பெண்களிடையே   ஷரியத் கொள்கை பிடிப்பு எந்த அளவில் உள்ளது?பதிலைப் பெறும் முன் சில  சம்பவங்களை அலசலாம்.

சமீபத்தில் ஓர் இஸ்லாம் பெயர் கொண்ட கல்வியமைப்பின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பார்வையாளராக சென்றிருந்தேன்.  சகோதர மதத்தை சார்ந்த அரசியல் தலைவர்களும்  சமயத் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். ஓர்  முஸ்லிம் மாணவியின் பெயர்  மைக்கில் ஒலிக்கிறது.  தனக்கான விருதினை பெற மேடைக்கு அவர் செல்கிறார். விருதினை பெற்றதும் சிறப்பு விருந்தினர் கை குலுக்க தன் கை நீட்ட, அந்த மாணவி கை தராமல் தன் நெஞ்சில் கை வைத்து பதில் மரியாதை செலுத்துகிறார். இது அச்சிறப்பு விருந்தினருக்கே புரிந்திருக்கக்கூடும்.  ஆனால் ஆஃப் செய்யப்படாத  மைக் வழியாக  கசிந்த ஓர் அதிகாரகுரல்  என்னை போன்ற பலருக்கு அசவுகரியத்தையும் முகச்சுளிப்பையும் உண்டாக்கியிருக்க வேண்டும் . ” கை கொடு! இப்ப இல்லன்னா எப்ப தான் பழகுறது” என்றது அந்த அதிகாரத் தோரணைக் குரல்.

ஓர் பெண்ணின் சுய உரிமையை பறிப்பது  மிகப்பெரும்  வன்முறை என்பதையும்,  கைகுலுக்க கட்டாயப்படுத்துவது அதனினும் உச்சம் என்பதையும் இஸ்லாமியர்களே அறிவதில்லை. கௌரவப்பேணல் விதைக்க வேண்டிய கல்வியாளர்களே  அதனை சீர்குலைப்பது  பரிதாபகரமான விஷயம். இதனை பார்க்கும் மற்ற சகோதர மதத்தவர்கள் என்ன நினைப்பார்கள்? கை குலுக்கச் சொல்லும்  முஸ்லிம் ஆசிரியர்களின் போக்கு  மேன்மையானதாகவும் , மறுக்க முயன்ற  அம்மாணவியின் துணிவு  பிற்போக்குத்தனமானதாகவும்  விதைக்கப்பட்டிருக்கும்.  இப்படித்தான் பல  பெண்களின்  கௌரவங்கள் வேரிலேயே கிள்ளி எறியப்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, இவையெல்லாம் தவறு என்றே தெரியாமல் பல மாணவிகள் இருக்கிறார்கள்.

தெரிந்த உறவுப் பெண், இறகுபந்தாட்ட போட்டிக்காக தயாராக்கி வருகிறார். பெற்றோரும் சிறந்த பயிற்சியாளர் என்ற வகையில் அந்த நபரை நியமித்துள்ளார்கள்.    எப்போதும் ஹிஜாப் அணியும் பெண் விளையாட்டு பயிற்சியின் போது  சக மாணவிகளைப் போலவே உடையணிந்திருந்தார்.  இது தவறான அணுகுமுறை என பெற்றோர்களுக்கு தெரியவில்லை. இதனை பார்க்கும் அந்த  பயிற்சியாளரும் இன்னபிற மாணவிகளின் மனதிலும் என்னவகையான காட்சி பதியப்பட்டிருக்கும் ? இதுபோக பெற்றோரின் தவறுக்கு அந்தச் சிறுமி பழியும் பாவமும் சுமக்கிறாள்.

பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நம் பெண்கள்  ஹிஜாப்பினை கேட்டில் உரிவதோடு சரி, திரும்ப வாசல் வரும் போதுதான் அணிந்துகொள்கிறார்கள்.   மற்ற பள்ளிகளை விட்டுவிடுவோம், இன்று இஸ்லாமியர்களால் நடத்தப்படும் பல பள்ளிகளிலும் கூட தொழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது ஆச்சர்யம்தான்.  பள்ளி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை,  பெற்றோர்களும்  வலியுறுத்துவதில்லை.

பலருக்கு தன் குழந்தைகளை நல்ல பள்ளியிலும் , எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ்க்கு  நல்ல பயிற்சி பட்டறையில் சேர்க்க மெனக்கெடும் அளவுக்கு , மார்க்க பேணலை மீறாத  இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. காரணம் மார்க்ககல்வியை விட  வருமானமும் புகழும் சார்ந்த கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, உரிமைகள் சார்ந்த விஷயங்களில் நாம் காட்டும் பொடுபோக்கை நம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோம். தம் உரிமைகளை விட்டுக்கொடுப்பதை அறியாமலேயே  அவர்களும் “வெறும் மார்க்க அடையாளம்” எனும் நிலையில் அனைத்து  கட்டாய கடமைகளையும் புறந்தள்ளிவிடுகிறார்கள்.

நாம் காட்டும் மெத்தனப்போக்கு நம்மை சுதந்திரமானவர் என காட்ட மட்டுமே  உதவும். அதே வேளையில் மற்றவர்களின்  உரிமையிலும் தலையிடுவதை நாம் பெரிதுபடுத்துவதே இல்லை. அஃது   மறைமுகமாகவும் யாரோ ஒருவரின் உரிமையை பறிக்கிறது என்பதனை நாம் அறிவோமா?

சிங் பிரிவை சார்ந்தவர்கள் டர்பன் அணிவதும் , இந்துக்கள் பொட்டு வைத்துக்கொள்வதுமாக தங்கள் மத நம்பிக்கையை நிலைநாட்ட முடிந்த அளவுக்கு இஸ்லாமியர்களால் முடிவதில்லையே ஏன் என சிந்தித்து பார்த்துள்ளோமா?   உடல் முழுவதும் வேண்டாம், குறைந்த பட்சம்  தலைக்கு ஸ்கார்ப் அணிவதே பெரிய சவாலாக இப்போதைய மாணவிகளுக்கு உள்ளதே… ஏன்  இந்த நிலை என ஆராய்ந்தோமா?  எங்கோ ஒருவர் காட்டும் மெத்தனபோக்கு ஒட்டுமொத்தமாக அனைவரையும் பழிதீர்க்கிறது.    ” இதெல்லாம்  போடலைன்னா உங்க மத நம்பிக்கை குறைந்துடாது” என்று  உச்சமன்ற நீதிபதியே சொல்கிறார். எனில்  தவறு யார் மீது? இவையெல்லாம் கட்டாய கடமையல்ல எனும் ரீதியில் நாம் காட்டும் நெகிழ்வுதன்மையால் தானே?

என் குழந்தையை முழு உடை அணிய அனுமதியுங்கள் என்றோ, என் மகளை ஆண்களுடன் இணைந்து அமர அனுமதிக்காதீர்கள் என்றோ  கேட்கும்  பல பெற்றோர்களுக்கான நிர்வாகத்தின் யூனிபார்ம் பதில் இதுதான் “மற்ற முஸ்லிம் பிள்ளைகள் போல் அல்லாமல்  நீங்கள் மட்டும் ஏன்  ஸ்பெசல் பெர்மிஷன் கேட்கிறீர்கள்?” இவர்களை இப்படிச் சொல்ல அனுமதித்தது யார் ? நாமே தான்!!!  யாரோ ஒருவரின் உரிமைத்தளர்வு இன்னொருவரின் உரிமைப்பறிப்பை உறுதிபடுத்துகிறது.   சிறு அடிப்படை விஷயங்களையும் கூட நாம் போராடி பெற வேண்டியதற்கு  முக்கால்வாசி காரணமே நாம்  அசட்டையாக  இருந்த காரணத்தால்தான் என்பதனை அனைவரும் உணரவேண்டும்.

அமெரிக்காவில் வாழும் சமந்தா எலாப் க்கு அப்போது வெறும் 17 வயது தான். நேர்முகத்தேர்வில் கலந்தும் ஹிஜாப்காக  அவர் பணி நிராகரிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏழு வருடம் போராடி , தன்னை நிராகரித்த நிறுவனத்திற்கு தக்கபதிலடி கொடுத்துள்ளார்.  யார் சொல்லி வழக்கு தொடர்ந்திருக்க முடியும்?  தன்மானம் விட்டுகொடுக்காமை முளையிலேயே நீருற்றப்பட்டிருக்க வேண்டும்.

மேலை நாடுகளில் பெண்கள் தன் கடமையை உரிமையாக நினைக்கிறார்கள். அது மீறப்படும் போது அதனை தட்டி கேட்க பழகியுள்ளார்கள். ஆனால் நம் நாட்டின் கலாச்சார சங்கலித்தொடர் வழியே பெண்களை பொத்திபொத்தியே வைக்கும்  பொதுபுத்திக்கு ஆட்பட்டுள்ளோம்.  தனக்கான உரிமையையும் அவர்களுக்கு கேட்க  துணிவில்லை,  அதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் அதனை நாம் அங்கீகரிக்க முயல்வதில்லை. அல்லது இதுதான் தன்னுடைய உரிமை என்று  அவர்களுக்கே  தெரியாமல் ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் !    ஆனால் இவ்விஷயங்களில் பெரும்பாலும் பெண்களையே குறை சொல்கிறோம். மார்க்கம் கடைபிடிப்பதில்லை,  அனாச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள் என பல பக்க குற்றப்பத்திரிக்கை வாசிக்கவே நேரம் சரியாகிவிடுகிறது.

பெண்களை மட்டுமே குறை கூறி பிரோஜனம் இல்லை.  ஒவ்வொரு காரணிகளையும் ஆராய வேண்டும். அதனை சீர் செய்ய வேண்டும். அக்காரணிகளையெல்லாம் ஒழுங்குபடுத்திக்கொண்டால் பெண்கள் தாமாகவே தைரியமாகவே குரல்கொடுப்பார்கள். யாருடைய  சிபாரிசும் அவர்களுக்கு தேவையில்லாதுபோகும்.

ஆக நாம் என்ன செய்யவேண்டும் ?     யாருக்கோ எவருக்கோ நிகழ்கிறது என்றில்லாமல் ஒவ்வொருவரின்  கௌரவத்திற்கும் நாம் உதவ வேண்டும்.   பெண்களின் பாதுகாப்பை நாம்தான் கொடுக்க முயலவேண்டும்.   நெகிழ்வுதன்மைக்கு இடம் கொடுக்காது நம்  குழந்தைகளின் மார்க்கப் பேணுதலுக்கான சிறந்த வழிதடத்தினை நாம்  உறுதிபடுத்தி  அவர்களின் சுயகர்வத்தை காக்க முயற்சிக்க வேண்டும்.  இன்று மார்க்கம் கற்ற பலரும் இளமையில் தன் தவறுகளை நினைத்து வருந்தும் போதெல்லாம் முதலில் காரணியாக சொல்லும் விஷயமே “பெற்றோர்களால் இத்தகைய சட்டங்கள் எமக்கு கற்பிக்கப்படவில்லை” என்பதாகவே தான் உள்ளது.  இந்த பழியினை சுமப்பதில் இருந்து உங்களையும் என்னையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.

சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தனக்காக கொடுக்கப்பட்ட  கட்டாய கடமையினை பின்பற்றுவதை உரிமையாக நினைத்து செயல்படும் போது ஒவ்வொரு விஷயத்திற்காகவும் நாம் போராடும் சூழல் முற்றிலும் இல்லையென்றாலும்  பெரும் அளவில்  குறையும். அடிப்படை கொள்கை விஷயங்களில் வளைந்து போக உங்கள் குழந்தைகளை பழக்காதீர்கள்.  உங்களிடமே ஒரு சூழ்நிலையை கைக்கொள்ளும்  திராணியில்லாத போது உங்களை பார்த்து வளரும் இளைய சமுதாயத்திடம் எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும் ?   உங்கள் பெண் மக்களுக்கு கௌரவத்தை கற்றுக்கொடுங்கள்.  இவை  சரியான அளவில் கொடுக்கப்படும் பொழுது , உரிமைமீறல் நிகழும் வேளை அதனை எதிர்க்கும்  தைரியத்தை  பெற்று திடமாய் நிற்பார்பார்கள். ரௌத்திரம் பழக்குவோம்!

-ஆமினா முஹம்மத்

 

Comments are closed.