லிட்டில் மாஸ்டர் ஹனீஃப்: கட்டுரை

0

 -சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

முஸ்தக், சாதிக், வசீர், ரயீஸ், ஹனீஃப், ஹனீஃபின் மகன் சொகைப் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக ஆடி புகழ் பெற்றவர்கள். ஆனால் ஹனீஃப் தொட்டது தான் புகழின் உச்சம்..

ஒரு கிரிக்கட்டருக்கான தோற்றப் பொலிவு ஹனீஃபிடம் இருக்கவில்லை. சராசரி வீரர்களை விட சற்று உயரம் கம்மி. ஆனால் களத்தில் புகுந்து விட்டால் உருக்கின் உறுதியும், செடிகளின் நளினமும் அவரது உடம்பினுள் புகுந்து கொள்ளும். பொறுமை, நிதானம், நங்கூரம் என்ற சொற்களுக்கு பொருளே அவர் தான். அதனால் கிரிக்கட் அபிமானிகள் முதலில் அவரைத்தான் லிட்டில் மாஸ்டர் என்று அழைத்தார்கள். பிறகு கவாஸ்கரை
இப்போது சச்சினை!!!

பிறந்தது இந்திய மண்ணில் தான். குஜராத் மாநிலம் ஜுனாகாத் சமஸ்தானத்தில்! 1934-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஒரு நட்சத்திரம் தங்கள் வானில் உதிக்கப் போகிறது என்று அந்த மண் அறிந்திருக்கவில்லை. ஒரு வேளை ஹனீஃப் இந்தியாவின் மிகச் சிறந்த துவக்க ஆட்டக்காரராக வந்திருக்கக் கூடும். ஆனால் காலம் வேறு விதமாகக் கணக்குப் போட்டு விட்டது.

1952-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி டெல்லியின் ஃபிரோஸ் கோட்லா மைதானத்தில் ஹனீஃப் தன் கன்னி டெஸ்டில் பாகிஸ்தானுக்காக களமிறங்கினார். இந்தப் பயணம் 55 டெஸ்ட்டுகள், 91 இன்னிங்ஸ், ஆட்டமிழக்காமல் ஏழு முறை, 12 சதங்கள் 2 இரட்டைச் சதங்கள், 15 அரைச் சதங்கள் என்று கடந்து சென்று 1969 அக்டோபர் 24-ம் தேது நியூசிலாந்தில் தேசிய விளையாட்டு மைதானத்தில் நிறைவடைகிறது. பெற்ற
ரன்களின் எண்ணிக்கை 3,915. சராசரி 49.98 ரன்கள். ஒரு சுவாரஸ்ய தகவல் ! இதில் அடங்கி இருப்பது இரண்டே சிக்சர்கள் மட்டுமே ! .

ஆனால் 238 முதல் தர ஆட்டங்களில் 17,059 ரன்கள். இதில் சதங்கள் 55, அரைச்சதங்கள் 66. இத்தனை போட்டிகளிலும் 2,766 பந்துகள் வீசி 53 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 4 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கட்டுகளை வீழ்த்தியது தான் சாதனை. டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு விக்கட்டைத் தான் கைப்பற்றியுள்ளார்.

1957-58 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில், மூன்றாம் நாள், தோல்வியைத் தவிர்க்க 473 ரங்கள் தேவை என்கிற ஒரு இக்கட்டான நிலையில் ஹனீஃப் களமிறங்குகிறார். சுமார் 16 மணி நேரம் அதாவது 970 நிமிடங்கள் பதறாமல் சிதறாமல், எதிர்க்கட்சியினருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு நின்று நிதானித்து 337 ரன்கள் சேகரிக்கிறார். அது மட்டுமல்ல தோல்வியிலிருந்து அணியை காப்பாற்றுகிறார்.
கிரிக்கட் வரலாற்றில் மிக நீ………..ண்ட இன்னிங்ஸ் இதுவென்று சொல்லலாம்.

1958-59 இந்தியாவுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் இந்த எண்ணிக்கையைக் கடந்தார். ஆனால் நீண்ட நேரத்தை அல்ல. இன்னொரு எதிர்மறையான சாதனைக்கும் ஹனீஃப் தான் சொந்தக்காரர். 223 பந்துகளில் வெறும் 20 ரன்களை மட்டுமே பெற்றது தான். பந்து வீச்சாளர்கள் நொந்து நூலாகிப்போய் இருப்பார்கள்.

முதல் தர ஆட்டத்தில் 500 ரன்களைப் பெற்ற முதல் நபர் ஹனீஃப் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார். ஆனால் ஆசையா பேராசையா என தெரியவில்லை 499 ரன்களில் இல்லாத ஒரு ரன்னை எடுக்க முயன்று பரிதாபமாக ரன் அவுட்டானார். இந்த சாதனை 35 ஆண்டுகள் நிலைத்து நின்றது. 1994-ல் பிரயன் லாரா அந்தச்
சாதனையை கடந்து செல்லும் வரை !.

கிரிக்கட் உலகின் ‘பைபிள்’ என்று கருதப்படும் ‘விஸ்டன்’ 1968-ம் ஆண்டுக்காக சிறந்த கிரிக்கெட்டராக ஹனீஃபை தேர்வு செய்தது. புகழ் பெற்றோர் மணி மாடத்தில் ( HALL of FAME ) உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சாதனை மன்னர்களான புகழ் பெற்ற கிரிக்கட் வீரர்களின் படங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடம் பெறச்செய்துள்ளது. அவற்றுள் ஹனீஃபுக்கும் பெருமைக்குரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

காலம் தன் கைகளுக்குள் அவரை பொதிந்து கொண்டிருக்கலாம். அவரது ‘கப்ரில்’ (மண்ணறையில்) அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவரது புகழ் கிரிக்கெட் உள்ள வரை நிற்கும் – நிலைக்கும் – வியாபிக்கும்!!!

Comments are closed.