வங்காளதேசம்:ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் மீர் காஸிம் அலி தூக்கிலிடப்பட்டார்!

0

டாக்கா:வங்காளதேச ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவரான மீர் காஸிம் அலி(வயது 63) சர்வாதிகார ஷேக் ஹஸீனா அரசால் தூக்கிலிடப்பட்டார்.டாக்காவுக்கு வெளியே உள்ள காசிம்பூர் சிறையில் சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரம் 10.30 மணியளவில் மீர் காஸிம் அலியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.1971-ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போராட்ட காலக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்களின் பெயரால் மீர் காஸிம் அலி தூக்கிலிடப்பட்டுள்ளார்.மீர் காஸிம் அலி, போர்க் குற்றம் சாட்டி ஷேக் ஹஸீனா அரசால் தூக்கிலிடப்படும் ஐந்தாவது எதிர்கட்சி தலைவரும், ஜமாஅத்தே இஸ்லாமியின் 4-வது தலைவருமாவார்.

ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடக நிறுவனங்களின் பொருளாளராகவும், முக்கிய பொருளாதார நிதியாளராகவும் திகழ்ந்தவர் மீர் காஸிம் அலி.அரசால் தடைச் செய்யப்பட்ட தொலைக்காட்சி சானல்கள் உள்பட பல்வேறு ஊடக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இவரின் கீழ் இயங்கி வந்தன.ஜமாஅத்தே இஸ்லாமியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் மீர் காஸிம் அலி.சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் என்ற பெயரில் வங்காளதேச அரசால் நிறுவப்பட்ட நீதிமன்றம் கடந்த ஜூன் 6-ஆம் தேதி மீர் காஸிம் அலிக்கு தூக்குத்தண்டனையை விதித்தது.இத்தீர்ப்பிற்கு எதிராக மீர் காஸிம் அலி சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது.உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடிச் செய்ததால் கருணை மனுவை அதிபருக்கு அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால், கருணை மனுவை அளிக்க மீர் காஸிம் அலி மறுத்துவிட்டார்.இதனைத் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச சட்ட அளவுகோல்களை கடைப்பிடிக்காமல் நிறுவப்பட்டதே குற்றவியல் தீர்ப்பாயமும், அதன் தீர்ப்புகளும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இண்டர்நேசனலும், ஹியூமன் ரைட்ஸ் வாட்சும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஐ.நா மனித உரிமை ஆணையம், வங்காளதேச அரசு நிறுவிய சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.தீர்ப்பாயமும், அதன் விசாரணை முறைகளும் சர்வதேச அளவுகோல்களின் படி நடக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது.ஆனால், இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டின் அடிப்படை பிரச்சனைகளை மூடி மறைக்கும் நோக்கில் எதிர்கட்சி குறிப்பாக ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களை ஈவு இரக்கமில்லாமல் மரணத்தண்டனை விதித்து அதனை நிறைவேற்றி வருகிறது ஷேக் ஹஸீனா அரசு.

மீர் காஸிம் அலிக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பும் என்பதால் நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஜமாஅத்தே இஸ்லாமி திங்கள் கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Comments are closed.