வங்கி கணக்குடனான ஆதார் இணைப்பு: குழம்(ப்)பும் ரிசர்வ் வங்கி

0

ஒவ்வொருவரும் தங்கள் வங்கி கணக்குடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வரும் வேலையில் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த RBI அப்படியான எந்த ஒரு உத்தரவையும் தாங்கள் பிரப்பிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

யோகேஷ் சகாலே என்பவர் RTI மூலம் ரிசர்வ் வங்கியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, இத்தகைய உத்தரவை அரசு தான் வெளியிட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்த ஒரு உத்தரவை இதுவரை வெளியிடவில்லை என்றும் பதிலளித்துள்ளது. மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற எந்த ஒரு உத்தரவையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்று அது தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

இத்துடன் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைக்க அனுமது கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்றும் RTI கேள்விக்கான பதிலில் அது தெரிவித்துள்ளது.

கடந்த 2015 அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில் ஆதார் முழுக்க முழுக்க விருப்பத் தேர்வு என்றும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை அது கட்டாயமாக்கப்பட முடியாது என்றும் கூறியிருந்தது குறிப்பித்தக்கது.

ஆனால் தற்போது RTI கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலுக்கு முற்றிலும் மாறாக வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம் என்று அது தெரிவித்துள்ளது. மேலும் வங்கிகள் எந்த தாமதமும் இன்றி இதனை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆதார் விஷயத்தில் ரிசர்வ் வங்கியே இத்தனை குழப்பத்தில் உள்ளது மக்களை ஆச்சர்யத்தை ஆழ்த்தியிருக்கிறது.

Comments are closed.