வனப்பகுதி மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்த சத்தீஸ்கர் பாஜக அமைச்சரின் மனைவி

0

சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வாலின் மனைவி சரிதா அகர்வால் 4.12 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்த செய்தி கடந்த புதன் கிழமை வெளியானது. இந்நிலையில் இவர் ஏற்கனவே ஆக்கிரமித்த வனப்பகுதியுடன் 13.9 ஹெக்டேர் அரசு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதை அதிகாரிகள் தற்போது கண்டரிந்துள்ளனர்.

மகாசமுந்த் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த ஆக்கிரமிப்பு குறித்து நான்கு மாததிற்கு முன்னதாகவே சரிதா அகர்வால் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இயக்குனர்களாக உள்ள ஆதித்யா ஸ்ரீஜன் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நோட்டீசிற்கு தங்களின் பிரதிநிதிகள் மூலம் பதில் அளித்த ஆதித்யா நிறுவனம் தாங்கள் அந்த நிலத்தை தங்கள் வசம் வைத்துக்கொள்ள தாங்கள் முடிவு செய்திடுப்பதாகவும் அது தங்களது நிலவரம்பிற்குள் தான் இருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாதாக வெளியான செய்திகளின் படி 1994 ஆம் ஆண்டு விஷ்ணு சாஹு என்கிற விவசாயி 4.12 ஹெக்டேர் நிலத்தை நீர்வளத்துறைக்கு தானமாக வழங்கியதாகவும் இது பின்னர் வனத்துறைக்கு மாற்றப்பட்டு இந்த நிலத்தில் மரங்களை வளர்க்க 22.90 லட்சம் ரூபாய்களை அரசு செலவளித்ததாகவும் இந்த நிலப்பகுதி தான் அமைச்சரின் மனைவியால் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுகிறது. இந்த நிலப்பகுதியில் அவர் விடுதி கட்டப் போவதாகவும் செய்திகள் வெளியானது.

கடந்த மார்ச் மாதம் 15 தேதி மகாசமுந்த் மாவட்ட தாசில்தார்  ஆதித்யா ஸ்ரீஜான் நிறுவனத்திற்கு அவர்களின் இந்த நில ஆக்கிரமிப்பை சுட்டிக்காட்டி நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், ஜல்கி கிராமத்தில் 13.90 ஹெக்டேர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நிலம் அரசின் பல துறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனால் ஆதியா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மார்ச் 20 தேதி அன்று தாசில்தார் முன்னர் ஆஜராகி அவர்கள் ஏன் இந்த ஆக்கிரமிப்பிற்காக 1959 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் நில வருவாய் சட்டத்தின் படி தண்டிக்கப்படக் கூடாது என்பதை விளக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 20 ஆம் தேதி ஆதித்யா நிறுவனத்தின் பிரதிநிதிகளான ரஞ்சித் சிங் மற்றும் மகேந்திர குமார் என்ற இருவர் தாசில்தார் முன் ஆஜராகி மொத்தம் 13.90 ஹெக்டேர் நிலப்பகுதி தங்களின் நில வரம்பிற்குள் வருவதாகவும்  இந்த நிலத்தில் எந்த வேலைகளும் செய்யப்படவில்லை என்றும் இந்த நிலத்திற்கு பதிலாக தாங்கள் வேறு நிலத்தை தருவதாகவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதித்யா நிறுவனத்திற்கு அவர்கள் பல அரசு துறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று கூறி கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி இந்த நிலங்கள் பல நீதிமன்ற உத்தரவுகளின்படி வனப்பகுதியாக கருதப்பட வேண்டும் என்றும் மேலும் இந்த நிலங்கள் மத்திய அரசின் அனுமதியின்றி விர்க்கப்படவோ கைமாற்றம் செய்யப்படவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.