வன்முறையை கட்டவிழ்க்க ஆட்களை சேர்க்கும் இந்துத்துவம்

0
வன்முறையை கட்டவிழ்க்க ஆட்களை சேர்க்கும் இந்துத்துவம்
கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் கொலைகளை நடத்துவதற்கும் இந்துத்துவ அமைப்பொன்று 60 நபர்களை தேர்வு செய்துள்ளதை கர்நாடகா காவல்துறை கண்டுபிடித்துள்ளது. பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் இந்த அதிர்ச்சியுட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இதில் ஏற்தாழ பாதி நபர்கள் கண்டறியப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அவர்கள் குறித்த தகவல் கர்நாடகா காவல்துறையின் உள்துறை பாதுகாப்பு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
சனாதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி, இந்து யுவ சேனா மற்றும் ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த ஆறு பேர் இதுவரை கௌரி லங்கேஷ் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கௌரி லங்கேஷ் தவிர்த்து சிந்தனையாளர் பகவான் உள்ளிட்ட நபர்களையும் இந்துத்துவ கும்பல் கொலை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலை வழக்குகளில் மகாராஷ்டிரா மாநில சிறப்பு புலனாய்வு துறை மற்றும் சிபிஐ சமர்ப்பித்த அறிக்கைகளில் திருப்தியடையாத பம்பாய் உயர்நீதி மன்றம் உள்துறை கூடுதல் சிறப்பு செயலாளர் மற்றும் சிபிஐ உதவி இயக்குநரை ஜூலை 12 அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் பாரதி ஹெச்.தாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு, அறிக்கையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறியதுடன் கௌரி லங்கேஷ் கொலையை விசாரித்து வரும் கர்நாடகா காவல்துறையுடன் இணைந்து செயல்படுகிறோம் என்ற கூற்றில் உறுதியாக உள்ளீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடகா காவல்துறை காட்டி வரும் அக்கறையை இந்த வழக்குகளில் மகாராஷ்டிரா காவல்துறையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments are closed.