வரலாற்று நாயகர்கள்: அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்)

1

 – ரியாஸ்

‘மார்க்கத்தின் பழைய ஏடுகளில் கவனம் செலுத்தும் நவீன கால சிந்தனை கொண்டவர்’  – அலீ மியான் குறித்து யூசுஃப் அல் கர்ளாவி

சென்ற நூற்றாண்டில் இந்திய முஸ்லிம்களில் பல அறிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், அரபி மொழி புலமை பெற்றவர்கள், குர்ஆன் விளக்கவுரையாளர்கள், ஹதீஸ் கலை வல்லுனர்கள், வரலாற்று ஆசிரியர்கள், ஃபிக்ஹூ கலையில் புலமை பெற்றவர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், மார்க்கத்தை எத்திவைப்பவர்கள் என பலர் தோன்றியுள்ளார்கள். ஆனால் இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற ஒரு நபர்? இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கும் போது அதில் அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்) அவர்களை தவிர்த்து வேறு யாரையும் நம்மால் நினைவில் கொண்டு வர முடியாது.

தன்னுடைய அறிவாலும் திறமையாலும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அறியப்பட்டார்கள். இவர்களின் வாழ்க்கை வரலாறு முதலில் அரபி மொழியில்தான் எழுதப்பட்டது என்பதில் இருந்தே இவர்களின் சிறப்பை அறிந்து கொள்ளலாம். அலீ மியான் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அபுல் ஹசன் அலீ நத்வி 1914ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள தாகிய குலான் என்ற இடத்தில் பிறந்தார்கள். இவர்கள் அலீ (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்தவர் என்று கூறப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர் செய்யது அகமது ஷஹீதீன் பரம்பரையை சேர்ந்தவர்.

இவர்களின் தந்தை செய்யது அப்துல் ஹை ஒரு தலைசிறந்த சிந்தனையாளர். ‘நுஸாதுல் கவாதிர்’ என்ற எட்டு பாகங்களை கொண்ட மிகப்பெரும் பொக்கிஷத்தை எழுதியவர். அதில் ஏறத்தாழ ஐந்தாயிரம் முஸ்லிம் பிரபலங்கள் குறித்த குறிப்புகள் அடங்கியுள்ளன. ஆனால் அலீ மியான் அவர்களுக்கு ஒன்பது வயது இருக்கும் போதே தந்தை மரணித்து விட்டார். அதன் பின்னர் தாய் மற்றும் சகோதரன் மௌலானா ஹக்கீம் செய்யது அபுல் அலீ ஹஸனி ஆகியோரின் அரவணைப்பிலும் கண்காணிப்பிலும் வளர்ந்தார்கள். ஆரம்ப கால குர்ஆன் கல்வியை தாயாரிடமே கற்றார்.

இந்தியாவின் தலைசிறந்த மார்க்க பீடங்களுள் ஒன்றான நத்வதுல் உலமாவில் அரபி மொழியை கற்றார்கள். இவர் பிறப்பால் அரபியரோ என்று அரபியர்களே நினைக்கும் அளவிற்கு அந்த மொழியில் வல்லமை பெற்றார்கள். இவர்களின் அரபி மொழி புலமையை அரபு அறிஞர்களே மெச்சியதுண்டு. அக்காலத்தின் முக்கிய அறிஞர்களிடம் தங்களின் கல்வியை கற்றார்கள்.

குர்ஆன் தப்சீரை லாகூரை சேர்ந்த மௌலான அகமது அலீ, ஹதீஸ் கலையை தேவ்பந்தின் ஹூஸைன் அகமது மதனி, அரபி மொழியை யமன் தேசத்தின் கலீல் முஹம்மது மற்றும் மொராக்கோவின் தகியுதீன் அல் ஹிலாலி ஆகியோரிடம் கற்றார்கள்.

அத்துடன் தொழுகையை ஜமாத்துடன் தொழுவது, தஹஜ்ஜத் தொழுவது, குர்ஆன் ஓதுவது ஆகியவற்றையும் தனது சிறு வயதிலேயே கற்றுக் கொண்டார்கள். இந்த பழக்கங்களை அவர்களின் இறுதி காலம் வரை தொடரவும் செய்தார்கள்.

நத்வதுல்   உலமாவில் தனது ஆசிரியர் பணியை தொடங்கினார்கள். அப்போது அவர்களின் வயது 20. நத்வதுல் உலமாவில் பத்து ஆண்டுகள் அரபி மொழி மற்றும் குர்ஆன் தப்சீர் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தார்கள். சிறு வயதில் இருந்தே வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். வரலாறு குறித்தும் வரலாற்று கதாநாயகர்கள் குறித்தும் இவர்கள் அதிக அளவில் புத்தகம் எழுதியதற்கு இவர்களின் இந்த ஆரம்பகால ஆர்வம் முக்கிய காரணமாக இருக்கலாம்.

எழுத்து துறையில் கால்பதிக்க வேண்டும் என்றால் வாசிப்பிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. சிறு வயது முதலே அதிகமான புத்தகங்களை வாசிப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டவர்களாக அலீ மியான் திகழ்ந்தார்கள். அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக எழுதப்பட்ட அனைத்து தப்சீர்களையும் இவர்கள் படித்ததாக இவர்களை குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் புதைந்து கிடந்த வரலாறுகளை வெளியே கொண்டு வரும் முகமாகவும் ஏராளமான புத்தகங்களை எழுதினார்கள். இஸ்லாத்தின் அடிப்படை குறித்தும் சட்டங்கள் குறித்தும் புத்தகங்களை எழுதினார்கள். அரபி, ஆங்கிலம், உருது என இவர்கள் எழுதிய மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை 150யை தாண்டும்.

இவர்களின்  புத்தகங்கள்  ஏராளமான மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளன. அரபு நாடுகளில் தற்போதும் அரபி மொழியை பயில்பவர்களுக்கு ஆரம்ப கட்டமாக ‘நபிமார்கள் சரிதை’ என்ற புத்தக தொகுப்பை கொடுப்பார்கள். எளிய அரபி நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் அரபி மொழியை இலகுவாக படிக்க உதவும். இந்த புத்தகத்தை எழுதியவர் அலீ மியான்!

ஆசிரியர் பணியை இருபது வயதில் ஆரம்பித்தவர் அதற்கு முன்னரே எழுத்துப் பணியை தொடங்கி விட்டார். சுதந்திர போராட்ட வீரர் செய்யது அகமது ஷஹீத் குறித்த ஒரு கட்டுரையை தனது பதினேழாவது வயதில் உருது மொழியில் எழுதினார்கள்.  அக்கட்டுரை ‘அத் தவ்ஹீத்’ என்ற இதழில் இடம்பெற்றது. இந்த கட்டுரை பெற்ற வரவேற்பை அறிந்த எகிப்தின் அல் மனார் பத்திரிகை அதனை அரபி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது. இப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் எகிப்திய சிந்தனையாளர் செய்யது ராஷித் ரிழா. பதினேழு வயது சிறுவனின் கட்டுரை அரபு உலகில் புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் இடம் பெறுவது சாதாரண விஷயமா?

இக்கட்டுரையின் வரவேற்பு செய்யது அகமது ஷஹீத் குறித்த புத்தகம் எழுதுவதற்கு உந்துதலை கொடுத்தது. 1937ல் புத்தகத்தை எழுத ஆரம்பித்தவர் 1939ல் அதனை வெளியிட்டார். இதுதான அலீ மியான் அவர்களின் முதல் புத்தகம்.

அரபி மொழியில் இவர்கள் எழுதிய முதல் புத்தகம் ‘மாதா கசிரா அல் ஆலம் பி இன்ஹிதாத் அல் முஸ்லிமீன்’. (இதன் பொருள்: இஸ்லாத்தின் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன? ஆங்கிலத்தில் இப்புத்தகம் Islam and the world என்ற பெயரில் வெளிவந்துள்ளது). ஏற்கெனவே தனது முதல் கட்டுரை மூலம் அரபுலகில் அறியப்பட்ட அலீ மியானை இப்புத்தகம் பிரபலப்படுத்தியது. 1951ல் இப்புத்தகம் வெளிவந்து மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஏராளமான மொழிகளிலும் இப்புத்தகம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அரபி மொழியில் பல பிரதிகள் விற்பனையானது. இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பிற்கு முன்னுரை எழுதியவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் தலைசிறந்த சிந்தனையாளருமான செய்யத் குதுப்.

இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் கருத்தே போதுமானது. “எகிப்தில் நாங்கள் மாணவர்களாக இருந்த போது, இந்த புத்தகத்தை படிக்காதவர்கள் கல்வியறிவு பெற்றவர் கிடையாது என்றே கேள்விப்பட்டு வந்தோம்” என்று கர்ளாவி கூறுகிறார்.

1944ல் குழந்தைகளுக்கான நபிமார்களின் சரிதையை எழுதினார். இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரையையும் செய்யத் குதுப் வழங்கினார்.

இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நபர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகம் Saviours of Islamic spirit. 1954ல் இப்புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டவர் 1980ல் இதன் நான்காவது பாகத்தை வெளியிட்டார். இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்க்கும் காதியாணிகள் ஊடுருவிய போது அவர்களின் போலி கொள்கைகளை தகர்க்கும் விதமாக 1958ல் ஒரு புத்தகத்தை எழுதினார்கள். அலீ மியானின் அனைத்து புத்கங்களையும் குறித்து எழுத வேண்டுமென்றால் தனியாக ஒரு புத்தகத்தை எழுத வேண்டும்.

புத்தகங்களை தவிர்த்து சில பத்திரிகைகளின் ஆசிரியராகவும்   அலீ   மியான்  பணியாற்றியுள்ளார். அல் பாஸ், அல் ராயித், நிதா இ மில்லத் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. பல பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதினார்கள். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து வெளிவரும் அல் முஸ்லிமூன் என்ற பத்திரிகைக்கு அலீ மியான் எழுதிய தலையங்கம் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக அரபுலகை சேர்ந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

அந்த கட்டுரையின் தலைப்பு ‘எதிர்ப்பதற்கு ஒரு அபூபக்கர் இல்லாத நிலை’. இந்த கட்டுரையில் கல்வியின் ஊடாக மேற்கத்திய கலாச்சாரம் எவ்வாறு ஊடுருவுகிறது என்பதை அழகாக விளக்கியிருந்தார்கள். இதனை எதிர்கொள்ள தற்போது ஒரு அபூபக்கர் (ரலி) இல்லையே என்ற தங்களின் ஆதங்கத்தையும் பதிவு செய்தார்கள். அலீ மியானின் இந்த கட்டுரை பல பிரதிகள் அச்சிடப்பட்டு ஹஜ் காலத்தில் ஹாஜிகள் ஒன்றுகூடும் மினாவிலும் அரஃபாவிலும் விநியோகம் செய்யப்பட்டது.

வெறும் எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் மட்டும் இல்லாமல் சமுதாய சீர்திருத்தத்திலும் அலீ மியான் செயலாற்றினார்கள். கருத்துகளை எழுத்துகளாக வடிப்பவராக மட்டும் இல்லாமல் அவற்றை களத்திலும் நடைமுறைப்படுத்தினார். அலீ மியானின் அறிவை கண்டு வியந்த உலக நாடுகள் அவரை தங்கள் நாட்டிற்கு அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றன.

சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, மலேசியா, பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பிரான்ஸ், பர்மா, அமெரிக்கா, பிரிட்டன் என பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு மக்கள் மன்றத்தில் உரையாற்றினார்.

இவர்களின் பயணங்கள் மற்றும் எழுத்துகள் மூலமாக அனைவரும் பலன் அடைந்தாலும், மேற்குலக முஸ்லிம்கள் இதனால் மிகப்பெரும் பலனை அடைந்தார்கள். ஒரு புதிய கலாச்சாரத்தின் மத்தியில் வாழ்ந்த அம்மக்களுக்கு அலீ மியானின் உரைகளும் எழுத்துகளும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தன. மேற்குலக முஸ்லிம்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அலீ மியான் முஸ்லிம்களுக்கான நபராக மட்டும் திகழவில்லை. பொதுத்தளத்தில் நடைபெறும் விவகாரங்களை கண்டும் காணாதவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. இஸ்லாத்தை உண்மையாக அறிந்து கொண்ட ஒரு நபரால் பொது சமூகத்தின் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் கண்டு மௌனமாக இருக்க முடியாது என்பதற்கு அலீ மியானின் வாழ்க்கை மற்றுமொரு சான்று.

தேசப்பிரிவினைக்கு பிறகு இந்து மற்றும் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதில் சில பிரிவினைவாத சக்திகள் மும்முரமாக இருந்தன. இந்த மோசமான நிகழ்வுக்கு எதிராக களமிறங்கினார் அலீ மியான். 1951ல் ‘பயம் இ இன்ஸானியத்’ என்ற அமைப்பை நிறுவினார். பொதுமக்கள் மத்தியில் அமைதி மற்றும் ஒற்றுமையின் செய்தியை கொண்டு செல்வது இந்த அமைப்பின் முக்கிய பணியாக இருந்தது. ஆனால் அலீ மியானின் தொடர் பயணங்கள் காரணமாக அவர்களால் இதில் முழு கவனம் செலுத்த முடியாமல் போனது.

1963-64 காலக்கட்டத்தில் வட இந்தியாவின் சில பகுதிகள் வகுப்பு மோதல்களின் பிடியில் இருந்தன. கல்கத்தா, ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, ராஞ்சி ஆகிய பகுதிகள் இதனால் பாதிப்படைந்தன. இதனால் மிகவும் கவலையுற்ற அலீ மியான், வினோபா பாவே போன்ற தலைவர்களை சந்தித்து நிலைமையை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. இதன் பின்னர் முஸ்லிம் மஜ்லிஸ்-இ-முஷாவரத் அமைப்பை தொடங்கினார். சமூக நல்லிணக்கத்தை கட்டிக்காப்பதில் அலீ மியான் மேற்கொண்ட முயற்சிகளின் சில உதாரணங்கள் இவை.

முஸ்லிம்களை சீண்டுவதில் சங்பரிவார் அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்ட போது அவற்றிற்கு தக்க பதிலடியை கொடுத்தார். உத்தரபிரதேசத்தின் அரசு பள்ளிக்கூடங்களில் சரஸ்வதி வந்தனம் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து சங்பரிவார்கள் பின் வாங்கினர்.

முஸ்லிம்களின் தனியார் சட்டங்களில் கைவைக்கும் முயற்சியாக ஷாபானு வழக்கை அரசு பயன்படுத்திய போது அதனை கடுமையாக எதிர்த்தார். அலீ மியான் மீது கொண்ட பொறாமை மற்றும் அச்சத்தின் காரணமாக சங்பரிவார்களும் அதிகார வர்க்கத்தினரும் வன்முறைகளையும் மிரட்டல்களையும் விடுத்தன. நத்வதுல் உலமாவும் இவர்களின் தாக்குதல்களுக்கும் சோதனைகளுக்கும் இலக்கானது. ஆனால் இவற்றில் எதற்கும் அஞ்சாமல் அடிபணியாமல் தனது பணிகளை தொடர்ந்தார்.

மிகப்பெரும் அறிஞராக திகழந்த அலீ மியான் பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டிருந்தார். ஆனால் ஒருபோதும் அதை தங்களின் சுய லாபத்திற்கோ சமுதாயத்தை அடகு வைப்பதற்கோ அவர்கள் பயன்படுத்தவில்லை. அவசர கால பிரகடனத்தை இந்திரா காந்தி கொண்டு வந்த சமயத்தில் அவரை நேரில் சந்தித்து இந்த பிரகடனத்தை திரும்ப பெறுமாறு அறிவுறுத்தியவர் அலீ மியான். ஆனால் இந்திரா காந்தி இவர் உட்பட யாரின் கோரிக்கைக்கும் செவிசாய்க்கவில்லை. 1977 தேர்தலில் படுதோல்வியை சந்தித்த இந்திரா காந்தி நத்வதுல் உலமாவிற்கே நேரடியாக சென்று அலீ மியானை சந்தித்தார்.

இந்திய விவகாரங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச விவகாரங்களிலும் தங்களின் கருத்துகளை தவறாமல் பதிவு செய்தார். 1967ல் இஸ்ரேலுடன் நடைபெற்ற ஆறு நாட்கள் போரில் முஸ்லிம் நாடுகள் தோல்வியை சந்தித்தன. முஸ்லிம் நாடுகளின் அதீத குருட்டு நம்பிக்கைதான் இந்த தோல்விக்கு காரணம் என்பதை எடுத்துரைத்த அலீ மியான் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு திரும்பாத வரை தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது சாத்தியமில்லை என்பதையும் அந்நாட்டின் தலைவர்களுக்கு எடுத்துரைத்தார்.

சவூதி அரேபியாவின் கல்வி நிறுவனங்களில் பல பொறுப்புகளை வகித்தார் அலீ மியான். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் நெருக்கமானவராக இருந்தார். இருந்தபோதும் தனது கருத்துகளை முன்வைப்பதில் அவர்கள் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. 1963ல் மக்கா மற்றும் மதினாவில் விரிவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனை கண்ட அலீ மியான், சவூதி மன்னர் ஃபைஸலை சந்தித்து, இந்த விரிவாக்கப் பணிகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மக்கா மற்றும் மதினாவின் இஸ்லாமிய சூழலை மாற்றி விடுமோ என்று தான் அஞ்சுவதாக தெரிவித்தார்.

அலீ மியானின் அச்சம் எந்தளவிற்கு நியாயமானது என்பதை நாம் தற்போது கண்கூடாக பார்க்கிறோம். முஸ்லிம் மற்றும் சர்வதேச விவகாரங்களில் சவூதியின் போக்கை கண்டும் காணாமல் இருக்கும் தற்போதைய மதனிகள் அலீ மியானை சற்று நினைத்துப் பார்க்கட்டும்.

சத்தியத்திற்காக குரல் கொடுப்பவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் அலீ மியான் என்றும் தயக்கம் காட்டியதில்லை. 1951ல் எகிப்திற்கு பயணம் மேற்கொண்டார் அலீ மியான். அவரின் பயணத்திற்கு முன்பே அவரின் எழுத்துகள் அம்மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தன. அலீ மியான் பயணம் செய்த காலக்கட்டத்தில்தான் எகிப்தின் ஆட்சியாளர்கள் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை தடை செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். தனி நபர்கள் மத்தியில் ஹஸன் அல் பன்னா ஏற்படுத்திய சீர்திருத்தங்களால் அலீ மியான் பெரிதும் கவரப்பட்டார். பன்னாவின் ஆளுமையை அறிந்து வியந்து போனார்.

தனது எகிப்திய பயணத்தின் போது இஹ்வானுல் முஸ்லிமீன் தலைவர்களான செய்யத் குதுப், முஹம்மது கஸ்ஸாலி, ஸயீது ரமழான், அப்பாஸ் முஹம்மது அக்காத் ஆகியோரை சந்தித்து உரையாடினார். இஹ்வானுல் முஸ்லிமீனின் தலைமையகத்திற்கு சென்று இஹ்வான்கள் மத்தியில் உரையாற்றினார். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர் கொண்டிருந்த இஹ்வான்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இந்தியாவில் இருந்து வந்த அறிஞரின் உரை இஹ்வான்களுக்கு ஊக்கத்தையும் ஆறுதலையும் கொடுத்தது.

ஹஸன் அல் பன்னா ஷஹீதாக்கப்பட்டதை தொடர்ந்து இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அலீ மியானிடம் இஹ்வான்கள் கோரிக்கை வைத்தனர். ஹஜ் பயணத்தின் போது இக்கோரிக்கை அலீ மியானிடம் வைக்கப்பட்டது. ஆனால், நியாயமான காரணங்களால் இந்த கோரிக்கையை அலீ மியான் ஏற்கவில்லை. இந்திய முஸ்லிம்களின் அப்போதைய நிலை இதற்கு முக்கிய காரணம்.

தனது அழைப்பு பணியில் நடுநிலைமையையும் நிதானமான கருத்துகளையும் கையாண்டார் அலீ மியான். இதுதான் அவரின் செய்தி மக்களை எட்டுவதற்கு மிகப்பெரும் காரணமாக இருந்தது. உலக அளவில் அவரின் கருத்துகளுக்கு மக்கள் செவிசாய்க்கவும் செய்தனர்.

அழைப்பு பணியின் ஆரம்ப காலக்கட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்துடன் இணைந்து செயலாற்றினார். ஆனால் சில நாட்களிலேயே அதிலிருந்து விலகி விட்டார். பின்னர் தப்லீக் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

எங்கு இருந்த போதும் தனது பேச்சுகளுக்கும் எழுத்துகளுக்கும் சமூக பணிகளுக்கும் அலீ மியான் ஓய்வு கொடுக்கவில்லை. ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்த இவர் பல நாடுகளிலும் பல பொறுப்புகளை வகித்தார். எதை விடுவது எதை குறிப்பிடுவது என்று முடிவு செய்ய முடியாத அளவிற்கு பல பொறுப்புகளை நிர்வகித்தார்.

நத்வதுல் உலமாவின் அரபி மொழி மற்றும் தப்சீர் வகுப்புகளை பத்து ஆண்டுகள் கற்றுக் கொடுத்தவர் பின்னர் அதன் செயலாளராகவும் காப்பாளராகவும் பணியாற்றினார். தாருல் உலூம் தேவ்பந்தின் ஆலோசனை குழு உறுப்பினர், ஆஸம்கார்கின் தாருல் முஸன்ஃபீனின் நிர்வாக குழு உறுப்பினர், மக்கா ராபிதா ஆலமி அல் இஸ்லாமியை தொடங்கியவர்களுள் ஒருவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்றல்களுக்கான பிரிவின் தலைவர், மதினா பல்கலைக்கழகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் ஆகியவை இவர் வகித்த முக்கிய பொறுப்புகள். 1962ல் மக்காவில் தொடங்கப்பட்ட முஸ்லிம் வேர்ல்ட் லீகின் முதல் கூட்டத்தில் உரையாற்றிய பெருமையும் அலீ மியானை சாரும். இந்தியாவில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தை நிறுவியவரும் இவரே.

உலக அளவில் அலீ மியானுக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. சவூதியின் உயரிய விருதுகளுள் ஒன்றான மன்னர் ஃபைஸல் விருது 1980ல் அலீ மியானுக்கு வழங்கப்பட்டது. அந்த பரிசு தொகையின் ஐம்பது சதவிகிதத்தை ஆப்கானிஸ்தானில்  ரஷ்யாவை எதிர்த்து போராடிய முஜாஹிதீன்களுக்கும் மீதமுள்ளதை சவூதியில் உள்ள இரண்டு குர்ஆன் மதரஸாகளுக்கும் வழங்கினார். அதே ஆண்டு அவருக்கு புருனை விருதும் வழங்கப்பட்டது. 1999ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான விருதை அலீ மியானுக்கு வழங்கியது.

அறிவும் சிந்தனையும் செயலும் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அலீ மியானின் வாழ்க்கை உணர்த்துகிறது.

இத்தகைய சிறப்புகளை கொண்ட அலீ மியான் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மரணித்தார். அது ரமலான் மாதத்தின் ஜூம்ஆ தினம். அல்லாஹ் அவர்களின் பணிகளை அங்கீகரித்து மறுமையில் உயரிய பதவிகளை அவர்களுக்கு வழங்குவானாக.

Discussion1 Comment

  1. முஹம்மது ஆதில்

    பொதுதளத்தில் பணியாற்றிய முஸ்லிம் ஆளுமைகளை முஸ்லிம்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் இந்த கட்டுரை வெளிவந்திருக்கிறது.இதைப்போன்று தொடர்ந்து வரலாறுகளை இச்சமூகத்திற்கு வழங்கும் பொறுப்பு விடியலுக்கு உண்டு