வரலாற்று நாயகர்கள் – ஹஸன் அல் பன்னா

0

 – ரியாஸ்

வரலாற்று நாயகர்கள் குறித்து எழுதும் போது இந்த பெயரை நிச்சயம் விட்டு விட முடியாது. இன்று உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் பெரும்பான்மை இஸ்லாமிய இயக்கங்களின் முன்னோடி இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் நிறுவனர். சமகால இஸ்லாமிய ஆளுமைகளை எடுத்துக் கொண்டால் நிச்சயம் அவர்களிடம் ஹஸன் அல் பன்னாவின் தாக்கம் இருப்பதை காண முடியும். சில வருடங்களுக்கு முன்னர் நமது விடியல் இதழின் அட்டைப்படத்தில் இவரின் புகைப்படத்தை கண்ட அரபு மக்கள் புத்தகத்தை வாங்கி சென்றனர். இதுதான் ஹஸன் அல் பன்னா ஏற்படுத்திய தாக்கம். இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் உலகின் 80 நாடுகளில் செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர். 43 ஆண்டுகால இவ்வுலக வாழ்வில் இவர் புரிந்த சாதனைகள் ஏராளம்.

எகிப்தின் மஹ்மூதியா என்னுமிடத்தில் அக்டோபர் 14, 1906ல் ஹஸன் அல் பன்னா பிறந்தார். இவரின் தந்தை அப்துல் ரஹ்மான் கடிகாரங்களை பழுது பார்க்கும் தொழிலை செய்து வந்தார். அதுமட்டுமல்ல, அவர் சிறந்த ஒரு மார்க்க அறிஞரும் ஆவார். ஹதீஸ் கிரந்தமான முஸ்னத் அகமதிற்கு இவர் விளக்கவுரை எழுதியுள்ளார். இதனால் வீட்டிலேயே இஸ்லாத்தை கற்கும் வாய்ப்பு ஹஸன் அல் பன்னாவிற்கு கிடைத்தது. வீட்டில் இருந்த நூலகம் ஹஸன் அல் பன்னாவின் அறிவு பசிக்கு தேவையான இரையை கொடுத்தது. பதினான்கு வயதை பூர்த்தி செய்வதற்கு முன்னரே முழு குர்ஆனையும் மனனம் செய்தார்.

அப்போது எகிப்து ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இஸ்லாமிய கலாசாரத்தை விட்டுவிட்டு ஆங்கிலேய கலாசாரத்தை பின்பற்றுவதை எகிப்தியர்கள் பெருமையாகவும் பெருபேறாகவும் கண்டனர். கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்கள் கூட இந்த அந்நிய கலாசாரத்தில் கட்டுண்டு கிடந்தனர். சிறுவனான ஹஸன் அல் பன்னாவை இது வெகுவாக பாதித்தது. பள்ளி நாட்களிலேயே தனது சீர்திருத்த பணிகளை ஆரம்பித்து விட்டார் ஹஸன் அல் பன்னா.

ஆரம்ப பள்ளி படிக்கும் போது மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதற்கு ஜம்மியத்து அஹ்லாக் அல் அதபியா என்ற அமைப்பை தோற்றுவித்தார். வழிதவறி செல்பவர்களுக்கு கடிதம் மூலம் சத்தியத்தை நோக்கி அழைப்பு விடுப்பது இந்த அமைப்பின் பணிகளில் ஒன்று.

பதினாறு வயதில் தலைநகர் கெய்ரோவில் உள்ள தாருல் உலூமில் கல்வி கற்பதற்காக சென்றார். கெய்ரோ வீதிகளில் நிரம்பி வழிந்த சீர்கேடுகளை கண்ட ஹஸன் அல் பன்னா அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் முழுமையாக உணர்ந்து கொண்டார். 21 வயதில் ஆசிரியர் எனும் தகுதியை பெற்று இஸ்மாயீலியாவில் தனது ஆசிரியர் பணியை தொடங்கினார். ஹஸன் அல் பன்னா இந்த பணியை விரும்பி மேற்கொண்டார். சமுதாயத்தை சீர்திருத்துவதற்கு நல்லதொரு வாய்ப்பாக இந்த பணி அமைந்தது.

சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் மேற்கொண்டது இந்த ஆசிரியர் பணி என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்திய மக்களிடம் ஏற்பட்ட கலாசார சீர்கேட்டையும் அவர்களிடையே சிதைந்துபோன சகோதரத்துவத்தையும் கண்டு ஹஸன் அல் பன்னா வருந்தினார். மற்றொருபுறம் துருக்கியில் வீழ்த்தப்பட்ட கிலாஃபத் ஹஸன் அல் பன்னாவிற்கு வருத்தத்தை அதிகரித்தது.

மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் உரையாற்றினார். பெரும்பாலும் சமுதாய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் போன்ற சிந்தனைகளை முன்வைத்தே தனது உரைகளை அமைத்தார்.

ஆரம்பம் முதலே தனி மனிதர்களை உருவாக்குவதில் ஹஸன் அல் பன்னா கவனம் செலுத்தினார். தனிமனித உருவாக்கம்தான் சமூக மாற்றத்தின் அடித்தளம் என்று கூறினார். தனி மனித உருவாக்கம் குடும்ப உருவாக்கத்திற்கு வழிவகுக்க வேண்டும். இந்த பண்பட்ட குடும்பங்கள் இணைந்து ஒரு முன்மாதிரி சமூகமாக உருப்பெறும். இதுதான் ஹஸன் அல் பன்னாவின் வழிமுறை. இந்த பணி தனியொருவராக செய்யக்கூடிய பணி அல்ல என்பதை உணர்ந்தார் ஹஸன் அல் பன்னா. அதே சமயம் இவரை போன்று சிந்தனை கொண்ட உள்ளங்கள் எகிப்தின் நிலையை கண்டு வருந்தின. முஸ்லிம்கள் அடைந்துள்ள கலாசார தோல்வியை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கியது.

1928 மார்ச் மாதம் ஹஸன் அல் பன்னா உள்ளிட்ட ஏழு நபர்கள் எகிப்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இஹ்வானுல் முஸ்லிமூன் எனும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை ஆரம்பித்தனர். 22 வயதில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இயக்க பிரச்சாரத்தை மஸ்ஜித்களில் மேற்கொள்ளாமல் தேநீர் கடைகளில் மேற்கொண்டார் ஹஸன் அல் பன்னா.

அப்போது எகிப்திய பள்ளிவாசல்களில் கருத்து மோதல்கள் உச்சகட்டத்தில் இருந்தன. பள்ளிவாசலுக்கு ஒருவர் வந்துவிட்டால் அவர் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை அறிவதில்தான் மக்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்களின் கேள்விகளும் இஸ்லாத்தின் சில கிளை விஷயங்கள் குறித்தே இருந்தன. இதனால் தனக்கான களம் பள்ளி வாசல்கள் அல்ல என்பதை கண்டுகொண்டார் ஹஸன் அல் பன்னா.

சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை யாரும் குறைகாண முடியாது. ஆனால் கருத்து முரண்பாடுகள் அடிதடிக்கும் ‘வழிகேடர்’ பட்டம் சுமத்துவதற்கும் இட்டு செல்லக்கூடாது என்பது ஹஸன் அல் பன்னாவின் கருத்து. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கண்ணியம் குலைக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இதையே அந்த மக்களுக்கும் எடுத்துரைத்தார். வாய்ப்புகள் இருக்கும் போது மஸ்ஜித்களையும் பயன்படுத்தினார். பெரும்பாலும் தேநீர் கடைகளும் அவர் நடத்திய குர்ஆன் வகுப்புகளுமே பிரச்சார களங்களாக இருந்தன. அருட்கொடையாக அமைந்த அவரின் பேச்சு மக்களை அப்படியே கட்டிப்போட்டது.

ஹஸன் அல் பன்னாவின் நேர்த்தியான பிரச்சாரத்தால் இயக்கம் வேகமாக வளர்ந்தது. இயக்கத்தில் இணைந்த மக்களை அப்படியே விட்டுவிடாமல் அவர்களை செதுக்கினார் ஹஸன் அல் பன்னா. ஒரு மாலை நேர பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்து அதில் மக்களுக்கு கல்வி வழங்கினார். தனது மாணவர்களின் பெற்றோர்களுக்கு இரவில் வகுப்புகளை நடத்தினார். சாதாரண தச்சரையும் பால் வியாபாரம் செய்பவரையும் கற்றறிந்த கல்விமான்களின் தரத்திற்கு உயர்த்தினார். எகிப்தின் தலைசிறந்த மார்க்க பீடங்களும் பல்கலைக் கழகங்களும் கொடுக்காத கல்வியை ஹஸன் அல் பன்னாவின் பாசறை கொடுத்தது.

ஹஸன் அல் பன்னாவை வெறும் சூஃபித்துவ சிந்தனைகளுடன் இணைக்கும் வழக்கத்தை சிலர் கொண்டுள்ளனர். ஹஸஃபியா எனப்படும் சூஃபி சிந்தனைகள் ஹசன் அல் பன்னாவிடம் இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் நாம் நினைக்கும் இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனையாக அது இருக்கவில்லை. வெறும் சூஃபி தத்துவங்களுடன் அவரின் அறிவு சுருங்கிவிடவில்லை. காலனித்துவம் குறித்து ஜமாலுதீன் ஆப்கானியும் முஸ்தபா காமிலும் கொண்டிருந்த சிந்தனையை ஹஸன் அல் பன்னா கொண்டிருந்தார். ஒழுக்க வீழ்சிக்கும் அதற்கான தீர்வுக்கும் முகம்மது அப்துஹூ மற்றும் ராஷித் ரிழா ஆகியோரின் சிந்தனைகளை ஹஸன் அல் பன்னா ஒத்திருந்தார். சில இடங்களில் மற்றொரு இஸ்லாமிய அறிஞரான சாகிப் அர்ஸலானின் கருத்துகளை ஹஸன் அல் பன்னா பின்பற்றினார். இவ்வாறு பல இடங்களில் இருந்து அறிவையும் ஞானத்தையும் பெற்றுதான் அவர் மக்களை வழிநடத்தினார், இயக்கத்தை கட்டமைத்தõர். அனைத்திற்கும் மேலாக குர்ஆனிலும் சுன்னாவிலும் தேர்ந்த ஞானத்தை பெற்றிருந்தார்.

ஆங்கிலேயர்களுக்கு இஹ்வான்களை கண்டால் பிடிக்காது. ஆனால் அவர்களை விட நேர்மையானவர்கள் எகிப்தில் யாரும் கிடைக்கமாட்டார்கள் என்பதால் இஹ்வான்களையே வேலையில் அமர்த்தினர். ஹஸன் அல் பன்னாவின் தனி மனித உருவாக்கத்தின் வெளிப்பாடு இது. ஒவ்வொரு இயக்க உறுப்பினரும் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியல் போட்டு சொல்லிக் கொடுத்தார் ஹஸன் அல் பன்னா.

1932ல் எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு சென்றார் ஹசன் அல் பன்னா. தனக்கு கிடைத்த அரசாங்க பணியை வேண்டாம் என்று ஒதுக்கி முழு மூச்சாக இயக்க பணிகளில் இறங்கினார். கெய்ரோவில் தலைமையகம் அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள், சமூக நல கூடங்கள் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டன. குர்ஆன் கற்றுக் கொடுப்பது, கல்வியறிவற்ற மக்களுக்கு இலவச கல்வி வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது என்றிருந்த இயக்க பணிகள் வேகமாக வளர்ந்தன. தொழிற்சாலைகளை அமைத்தல், மருத்துவமனைகளை அமைத்தல், இவற்றின் மூலம் மக்களுக்கு சேவையாற்றல் என்ற அளவில் இயக்கம் வளர்ந்தது. மக்கள் மத்தியில் உள்ள இடைவெளியை குறைப்பதில் இயக்கம் கவனம் செலுத்தியது. நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் இயக்கத்தின் பணிகளால் கவரப்பட்டனர். மேல்தட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இயக்கம் தவறவில்லை.

வயோதிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களுக்கு உகந்த நேரத்தில் கல்வி கொடுக்கப்பட்டது. பாமர மக்களுக்கு அவர்களின் இடம் தேடிச் சென்று அவர்களுக்கு புரியும் பேச்சு வழக்கிலேயே தேவையான கல்வியை வழங்கினார்கள் இஹ்வான்கள். இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் எகிப்தின் சிந்தனை முன்னேற்றத்திற்கும் ஹஸன் அல் பன்னாவின் ஆளுமையும் அவர் கொள்கைகளை விளக்கிய விதமும் பெரும் பங்காற்றின.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு தேவையான ஆயுத பயிற்சியும் இயக்க உறுப்பினர்களில் ஒரு பிரிவினருக்கு கொடுக்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஆயுத போராட்டமும் ஓர் அங்கம்தான் என்பதை ஹஸன் அல் பன்னா உணர்ந்திருந்தார். இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்குவதில் யூதர்கள் முனைப்பு காட்டிய போது அவர்களுக்கு எதிராகவும் ஆயுத போராட்டத்தை இஹ்வான்கள் மேற்கொண்டனர்.

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பாடத்திட்டத்தில் ஜிஹாதிக்கு முக்கிய பங்கு இருந்தது. போர் களத்திற்கு சென்று ஆயுதம் தாங்கி போராடுவதை ஊக்கப்படுத்திய அதேசமயம் மக்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்கி அவர்களிடம் நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டுவதிலும் அவர் கவனம் செலுத்தினார்.

முஸ்லிம்கள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதில் அதிக முனைப்பு காட்டினார். அதனால்தான் இயக்கத்திற்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்று பெயர் சூட்டினார். அப்போதைய சூழ்நிலையில் எகிப்திய முஸ்லிம்களுக்கு இந்த சகோதரத்துவம்தான் அவசியம் தேவைப்பட்டது. ஆழமான அறிவு, அழுத்தமான நம்பிக்கை, உண்மையான அன்பு ஆகியவற்றையே தனது செயற்திட்டமாக முன்வைத்தார். சகோதரத்துவம் இல்லையென்றால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள முடியாது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். ஹஸன் அல் பன்னாவின் ஒற்றுமை குறித்த செய்தி எகிப்திற்கு மட்டுமல்லாமல் முழு முஸ்லிம் சமுதாயத்திற்குமான செய்தியõக இருந்தது.

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சகோதரத்துவம் குறித்து தனது உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறுவதை ஹஸன் அல் பன்னா வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் இஹ்வான்கள் அன்றைய தினத்தை ‘அன்பு கூறும் செவ்வாய்’ என்றே அழைத்தனர். சந்திக்கும் அனைத்து நபர்களுக்கும் ஸலாம் கூறி, செய்தியை எத்தி வைத்து அவர்களின் பொறுப்புகளை உணரச் செய்ய வேண்டும் என்று தனது உறுப்பினர்களுக்கு கூறினார். வெறும் வார்த்தையில் மட்டுமல்லாமல் தங்களின் வாழ்க்கையில் சகோதரத்துவத்தை பேணிக்காட்டினர் இஹ்வான்கள். சிறை சித்திரவதைகளின் போதும் இவர்கள் விட்டுக் கொடுக்காத சகோதரத்துவத்தை வரலாறு வைர வரிகளில் பதிவு செய்துள்ளது.

இஸ்லாமிய சட்டங்களில் தங்களின் புரிதலை அடுத்தவர்களின் மீது திணிக்கக் கூடாது என்று ஹஸன் அல் பன்னா கூறினார். பல்வேறு இஸ்லாமிய சிந்தனை பிரிவனர் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதில் இஹ்வானுல் முஸ்லிமூன் அதிக கவனம் செலுத்தியது. மார்க்கத்தின் கிளை விவகாரங்களில் தலையை பிய்த்துக் கொள்வதைவிட சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது ஹஸன் அல் பன்னாவின் கருத்தாக இருந்தது.

தனது காலத்தில் எகிப்து இரண்டு கூட்டத்தினரின் கையில் இருப்பதையும் அவர்கள் இருவரும் தோல்வியை சந்திப்பதையும் ஹஸன் அல் பன்னா கண்டார். அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தலைமையிலான மார்க்க தலைமை சாதாரண மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்க முடியாத நிலையில் இருந்தது.

அவர்களிடம் ஒருவித எதேச்சதிகார போக்கு இருப்பதை ஹஸன் அல் பன்னா கண்டார். மறுபுறம் திறந்துவிடப்பட்ட பொருளாதார கொள்கையின் கீழ் உள்நாட்டு மக்கள் நசுக்கப்பட்டு பொருளாதாரம் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டது.

இதனை கண்ட ஹஸன் அல் பன்னா, இஸ்லாத்தை வெறும் தனிப்பட்ட வாழ்க்கையோடு சுருக்கிவிடக்கூடாது என்று கூறினார். அரசியல் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்க இஸ்லாத்தை கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். அதற்காக மேற்கில் இருந்து வந்தது எதுவாக இருந்தாலும் அதனை நிரõகரிக்கும் போக்கை ஹஸன் அல் பன்னா மேற்கொள்ளவில்லை.

கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பு படிப்பதற்காக தனது இயக்கத்தின் பத்திரிகையாளர்களை ஹசன் அல் பன்னா அனுப்பி வைத்தார். நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் அதனை எடுத்துக் கொள்ள ஹஸன் அல் பன்னா தயங்கவில்லை. ஆனால் மேற்கின் அனைத்து விஷயங்களையும் உச்சி முகர்ந்து ஏற்றுக் கொண்டு தங்களின் சொந்த கலாசாரத்தையும் வரலாற்றையும் ஒதுக்கி தள்ளுவதைதான் ஹஸன் அல் பன்னா நிராகரித்தார்.

இஸ்லாமிய சிந்தனையாளர் ராஷித் ரிழாவின் சிந்தனைகளால் ஹஸன் அல் பன்னா பெரிதும் கவரப்பட்டார். முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு அவர்கள் மேற்கத்திய சிந்தனையை பின்பற்றுவதுதான் காரணம் என்றும் இஸ்லாத்திற்கு திரும்புவதனால் மட்டுமே முஸ்லிம்கள் இழந்த பெருமையை பெற முடியும் என்றும் இருவரும் நம்பினர்.

ஹஸன் அல் பன்னா தனது பிரச்சாரத்தை தொடங்கிய காலத்தில் எகிப்திய முஸ்லிம்கள் பொது இடங்களில் தொழுவதை சங்கடமாக கருதினர். இஸ்லாம் என்று உச்சரிக்கப்பட்டாலே குழந்தைகள் அதனை கேட்க வெறுத்தனர். ஹஸன் அல் பன்னா இந்த நிலைகளை மாற்றினார். சிறுவனாக இருக்கும் போது பள்ளிவாசலில் அதõன் சொல்லும் முஅத்தினை எழுப்பிவிடும் வழக்கம் ஹஸன் அல் பன்னாவிடம் இருந்தது. முஅத்தினை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டவர் தற்போது சமுதாயத்தை துயிலில் இருந்து எழுப்பினார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் எகிப்தை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்தது. ஹஸன் அல் பன்னா இருமுறை கைது செய்யப்பட்டார். இயக்க செயல்பாடுகள் முடக்கப்பட்டன. இஹ்வான்களின் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. 1942ல் ஆங்கிலேயர்கள் வஃப்த் கட்சி ஆட்சியில் அமர ஆதரவு தெரிவித்தனர். ஆட்சியை கைப்பற்றிய வஃப்த் கட்சி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தது. ஹஸன் அல் பன்னா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு செய்தார். இதனால் கலக்கமுற்ற பிரதமர் நஹ்ஹாஸ் பாஷா போட்டியில் இருந்து பின்வாங்குமாறு பன்னாவிடம் கேட்டுக்கொண்டார்.

சில நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் தான் போட்டியில் இருந்து விலகுவாக ஹஸன் அல் பன்னா அறிவித்தார். விபச்சாரத்தை தடுக்க வேண்டும், மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், இயக்கம் தனது பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஹஸன் அல் பன்னா முன்வைத்தார். அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டது. விபச்சாரம் தடை செய்யப்பட்டது. மது விற்பனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, இஹ்வான்களின் செயல்பாடுகளுக்கான தடைகள் நீக்கப்பட்டன. இதனால் இயக்கம் இன்னும் வளர்ந்தது. 1948ல் இயக்கத்திற்கு ஏறத்தாழ இரண்டாயிரம் கிளைகள் செயல்பட்டன. விரைவிலேயே அண்டை நாடுகளான சிரியா, சூடான் மற்றும் ஜோர்டானிலும் இயக்கம் தனது கிளைகளை பரப்பியது.

ஹஸன் அல் பன்னா பன்முகதன்மை கொண்ட சிந்தனையாளராக இருந்தார். ஆன்மீகத்தை குறித்து பேசிய அவரிடம் அரசியல் அறிவும் இருந்தது. அடுப்பங்கரை முதல் அரசியல் பீடம் வரை இஸ்லாம் வழிகாட்டுகிறது என்பதற்கு சமகால உதாரணமாக திகழ்ந்தார். எகிப்தின் விடுதலைக்காக போராடிய அதே காலகட்டத்தில் தனி மனிதர்களின் உருவாக்கத்திலும் அவர் கவனம் செலுத்தினார். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அதே நேரத்தில் மக்களின் ஒழுக்க வீழ்ச்சிகளுக்கு எதிராகவும் போராடினார். எகிப்தில் போராடி கொண்டிருக்கும் போதே ஃபலஸ்தீனில் செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் எதிர்த்தார். 1948ல் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில் இஹ்வான்கள் பங்கு பெற்றனர். அரபு இராணுவங்களை கண்டு அஞ்சாத இஸ்ரேலியர்கள் இஹ்வான்களின் படையை கண்டு அஞ்சி நடுங்கினர்.

“நாங்கள் வாழ்வதற்காக இங்கு வந்தோம். ஆனால் இவர்களோ மரணிப்பதற்காகவே போர் களத்திற்கு வந்துள்ளார்கள். மரணத்தை கண்டு அஞ்சாத இவர்களை கண்டுதான் எங்களுக்கு அச்சமாக உள்ளது” என்று ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார்கள் யூதர்கள். யூதர்கள் அடைந்து வரும் தோல்வியை கண்ட மேலைநாடுகள் எகிப்திய ஆட்சியர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து இஹ்வான்களை கைது செய்ய நிர்ப்பந்தித்தனர். ஹஸன் அல் பன்னாவும் பல இஹ்வான்களும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இஸ்ரேல் என்ற பெயர் உலக வரைபடத்தில் எழுதப்பட்டது.

மக்கள் கலாசார சீர்கேட்டில் மூழ்கிக் கிடந்த போதும் ஹஸன் அல் பன்னா அந்த மக்களை வெறுக்கவில்லை, அவர்களை சபிக்கவில்லை. “சமுதாயம் தடம் பிறழ்ந்து விட்டது என்பது உண்மைதான். ஆனால் காட்டிக் கொடுக்கும் கூட்டமாகவும் இறைவனை மறுக்கும் கூட்டமாகவும் அது மாறவில்லை. எனவே மக்களை சுடுசொற்களால் ஏசாதீர்கள்” என்று தனது இயக்கத்தினரிடம் கூறுவார் ஹஸன் அல் பன்னா.

ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவராக இருந்தபோதும் ஹஸன் அல் பன்னா எந்த அகம்பாவமும் இல்லாதவராகவே இருந்தார். குறைகளை யாரும் சுட்டிக்காட்ட போதிய அனுமதி வழங்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டு தன்னை நோக்கியதாக இருந்தாலும் பன்னா அதனை தடுக்கவில்லை. 1940களில் இஹ்வான்களிடம் ஏற்பட்ட அறிவு வீழ்ச்சி குறித்து ஹஸன் அல் பன்னாவிடம் முறையிடப்பட்டது. தனது இயக்கம் மீதான குற்றச்சாட்டு என்றபோதும் அதனை அப்படியே ஒதுக்கிவிடாமல் இந்த குறையை போக்குவதற்கு உடனே வழிமுறைகளை கண்டறிந்தார்.

அதன் ஓர் அங்கமாக ‘அல் ஷிபாப்’ எனும் பத்திரிகையை ஆரம்பித்தார். அதில் குர்ஆனுக்கான விளக்கவுரையை ஹஸன் அல் பன்னா எழுதினார். நபி (ஸல்) வாழ்க்கையில் இருந்து பெறவேண்டிய படிப்பினைகள் குறித்து எழுதும் பணி அன்னாரின் தந்தை அகமது அல் பன்னாவிடம் கொடுக்கப்பட்டது. இயக்க உறுப்பினர்களின் குறைபாடுகள் இதில் வெளிப்படையாகவே விவரிக்கப்பட்டு அவற்றை சரி செய்தவற்கான வழிமுறைகளும் கூறப்பட்டன.

ஒரு முறை ஹஸன் அல் பன்னாவின் மீதே ஒரு உறுப்பினர் கணக்குகள் சம்பந்தமாக ஒரு குற்றச்சாட்டை வைத்து இயக்கத்தில் இருந்து வெளியேறினார். அதனை பிரசுரமாக்கி மஸ்ஜித்களில் பார்வைக்கும் வைத்தார். இந்த பிரச்சனையை அறிந்த ஹஸன் அல் பன்னா, அனைத்திற்கும் தேவையான பதில்களை வழங்கினார். சம்பந்தப்பட்ட நபர் தனது தவறை உணர்ந்து மீண்டும் இயக்கத்தில் இணைந்தார். இந்த சம்பவத்தை ஹஸன் அல் பன்னா தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

இஹ்வான்களின் தியாகம் குறித்தும் சகோதரத்துவம் குறித்தும் தனது டைரியில் எழுதும் போது அவர்களின் பெயரை எல்லாம் குறிப்பிட்ட ஹஸன் அல் பன்னா, இந்த உறுப்பினரின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. இதை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, “அவர் தனது தவறை உணர்ந்து தற்போது மீண்டும் பணியாற்றி கொண்டிருக்கிறார். நான் ஏன் அவரை அடையாளப்படுத்த வேண்டும்?” என்று கூறினார். இதுதான் ஹஸன் அல் பன்னாவின் தன்மை. தவறுகளை செய்தவர்களின் கண்ணியத்தை கூட காப்பாற்றுவதில் எத்தகைய முனைப்பை காட்டினார் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஹஸன் அல் பன்னாவிடம் ஒருமுறை ‘நீங்கள் ஏன் புத்தகங்களை எழுதுவதில்லை?’ என்று கேட்கப்பட்ட போது ‘நான் மனிதர்களை உருவாக்குகிறேன்’ என்று பதில் அளித்தார். இதனை வைத்துக் கொண்டு ஹஸன் அல் பன்னா புத்தகங்களையே எழுதவில்லை என்ற எண்ணம் நம்மில் சிலருக்கு இருக்கிறது. ஹஸன் அல் பன்னா ஏறத்தாழ பத்து புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர ஏராளமான கட்டுரைகளையும் ஹஸன் அல் பன்னா எழுதியுள்ளார். இஹ்வான்கள் மாத இதழ், வார இதழ், தினசரி ஆகியவற்றை நடத்தி வந்தனர். ஹஸன் அல் பன்னா அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஆக, எழுதுவதை தான் முழுநேர தொழிலாக கொள்ளவில்லை என்பதுதான் இமாம் அவர்களின் கருத்தேயன்றி, முற்றிலுமாக எழுதுவதை அவர்கள் விட்டுவிடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஸன் அல் பன்னா சமுதாயத்தை பயிற்றுவிக்கும் முறை ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் அடிவருடிகளான எகிப்திய ஆட்சியாளர்களுக்கும் அச்சத்தை கொடுத்தது. 1931ல் மூன்று கிளைகளை கொண்டிருந்த இயக்கம் 1938ல் 300 கிளைகளாக பரவியது. 1948ல் எகிப்தில் மட்டும் இரண்டாயிரம் கிளைகள் வியாபித்திருந்தன. இயக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது.

தங்கள் திட்டங்கள் அனைத்தையும் சீர்குலைக்கும் இந்த நபரை விட்டுவைப்பது ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்தனர். இமாம் அவர்களை தீர்த்துக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. கொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு, “உங்களை பற்றியும் உங்களுக்கு ஏற்படவிருக்கும் அபாயம் பற்றியும் ஏராளமான வதந்திகள் அடிபடுகின்றதே?” என்று ஒருவர் இமாமிடம் கேள்வி எழுப்பினார்.

“என்ன கொலையா நடந்துவிடும்? அவ்வாறு நடந்தால் அது ஷஹாதத் என்பதை நாமறிவோம். இதுதான் நமது ஆசையும்கூட” என்று ஹஸன் அல் பன்னா பதிலளித்தார். அப்படியென்றால் இந்த பணிகள் என்னவாகும் என்று சந்தேகத்தை கேட்ட அந்த நபரிடம் “எனது பணியை நான் நிறைவேற்றி விட்டேன். திடமான மனிதர்களின் சிலரை நான் விட்டு செல்லப்போகிறேன். அவர்கள் திடமானவர்கள்தான் என்பதை எனது கண்களால் பார்த்துவிட்டேன். இப்போது என்னால் நிம்மதியுடன் மரணிக்க முடியும். ஷஹீதாக மரணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்று கூறினார்.

அவரின் ஆசை நிறைவேறியது. 1949 பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி.. பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி ஹஸன் அல் பன்னாவை அரசு அழைத்தது. அலுவலகம் ஒன்றில் காத்திருந்த ஹசன் அல் பன்னா, குறிப்பிட்ட நேரம் கழிந்தும் அழைத்துச் செல்ல அரசு தரப்பில் இருந்து யாரும் வராததால் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். வீதிகளின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. வேகமாக வந்த காரில் இருந்து வெளியே வந்த நபர், ஹஸன் அல் பன்னாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அதே வேகத்தில் மறைந்தார். அந்த வாகனம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹஸன் அல் பன்னா அங்கே மரணமடைந்தார்.

ஹஸன் அல் பன்னாவை கொலை செய்த போதும் அவர் மீதான அச்சம் ஆட்சியாளர்களுக்கு போகவில்லை. இமாமின் ஜனாஸாவில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று நெருக்கடி கொடுக்கப்பட்டது. இஹ்வான்கள் கைது செய்யப்பட்டனர், பெண்களே இமாமின் ஜனாஸாவை சுமந்து

சென்றனர். அவரின் தந்தை ஜனாஸா தொழுகையை நடத்தினார். இறப்பதற்கு முன்னர் ஹஸன் அல் பன்னா வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. அதன் பின்னர் வந்த நாட்கள் இஹ்வான்களுக்கு கடுமையான நாட்களாக இருந்தன. இஹ்வான் என்று கடிதத்தில் எழுதினால் கூட கைது செய்யப்படும் நிலை. தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இயக்கத்தை அழிப்பதற்கான முழுமுயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இயக்கம் எகிப்தையும் தாண்டி தூர தேசங்களுக்கும் பரவியது. எகிப்தில் கூட காட்சி மாறியது.

2012ல் இஹ்வான்கள் ஆட்சியை பிடித்தனர். ஆட்சிக்கு வந்தாலும் கூட எதிரிகளின் சூழ்ச்சிகள் நின்றுவிடாது என்பதற்கேற்ப ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்டு எகிப்தில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடும் மக்கள் மீது எகிப்திய இராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. கொலை செய்யப்பட்டவர்களில் ஹஸன் அல் பன்னாவின் பேரனும் ஒருவர். அதிபர், இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்க தலைவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஹ்வான்கள் எவ்வித தடங்கலுமின்றி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வளவு சோதனைகளை சந்தித்த பின்னரும் இந்த மக்கள் எவ்வாறு வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள் என்று உலகம் அதிசயமாக இவர்களை பார்க்கிறது. ஹஸன் அல் பன்னா இவர்களை வளர்த்த விதம் அப்படி.

(நவம்பர் 2015 விடியலில் வெளியான கட்டுரை)

Comments are closed.