வழக்கில் தனது வாதத்தையும் கேட்குமாறு பல்கீஸ் பானு மனு

0

2002 குஜராத் கலவரத்தின் போது கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தண்டனை குறித்த மேற்முரையீட்டு மனு விசாரணையில் தன்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணான பல்கிஸ் பானு பாம்பே உயர்நீதி மன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு பல்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்ததற்காகவும் அவரது குடும்பத்தினர் 7 பேர்களை கொலை செய்ததற்காகவும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு கடந்த 2008 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் தற்பொழுது தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும்படி உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இம்மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் தன்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று பல்கிஸ் பானு தனது வழக்கறிஞர் விஜய் ஹைர்மத் மூலம் நீதிபதி வி.கே.தாஹில்ரமணி மற்றும் நீதிபதி மிருதுளா பத்கர் அடங்கிய பென்சிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டபப்ட்ட 11 பேர்களில் மூவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ யும் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

2002 குஜராத் கலவரத்தின் போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பல்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினர் 7 பேர்களை கொலையும் செய்தது ஒரு கும்பல். இது தொடர்பான வழக்கின் விசாரணை அஹமதாபாத்தில் துவங்கியது. ஆனால் அங்கு வழக்கு நடைபெற்றால் அது சாட்சியங்களை பாதிக்கும் என்றும் ஆதாரங்கள் அழிக்கப்படக்கூடும் என்று பல்கிஸ் பானு கவலை தெரிவித்ததால் அந்த வழக்கை உச்சநீதிமன்றம் மும்பைக்கு 2004 ஆகஸ்ட் மாதம் மாற்றியது.

இவ்வழக்கில் ஜாஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், சைலேஷ் பட், ராதேஷம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜுபாய் சோனி, மிடேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Comments are closed.