வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜக தோல்விக்கு நான் உத்திரவாதம்: மாயாவதி

0

தேசம் முழுவதிலும் நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்குகளை அளிக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது (பார்க்க செய்தி). இந்நிலையில், பஹுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 2019 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றால் பாஜக அதிகாரத்திற்கு வர இயலாது என்றும் அதற்கு தான் உத்திரவாதம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாயாவதி கூறுகையில், “பாஜக நேர்மையாக இருந்தால், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கட்சியாக இருந்தால் மின்னணு வாக்கு எந்திரங்களை தவிர்த்து வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்தட்டும். 2019 ஆண்டு பொதுத் தேர்தல் வர உள்ளது. மக்கள் தங்கள் பக்கம் உள்ளதாக பாஜக எண்ணினால் இதனை பாஜக செயல்படுத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றால் பாஜக அதிகாரத்திற்கு வர முடியாது என்பதற்கு நான் உத்திரவாதம்.” என்று கூறியுள்ளார்.

உத்திர பிரதேச தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதில் இருந்து மின்னணு வாக்கு எந்திர பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று மாயாவதி கூறி வருகிறார். இதே போன்ற கருத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜிரிவாலும்  கூறி வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பஹுஜன் சமாஜ் கட்சி வெறும் 19 தொகுதிகளை வென்றது. மீரட் மற்றும் அலிகார் மேயர் பதவிகளை கடந்த வெள்ளிக்கிழமை பஹுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் முந்தைய ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி ஒரு மேயர் பதவியை கூட வெற்றிபெற முடியவில்லை.

Comments are closed.