வாசகர் கடிதம்

0

வாசகர் கடிதம்

நமது பெண் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள்? தலையங்கம் பெண்மைக்காக எழுப்பப்பட்ட அறைகூவல். பாசிச பயங்கரவாதிகளிடம் இந்திய மனிதகுலம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எல்லாம் பாசிச காமுகர்களின் கண்களில் படாமல் பச்சிளம் பெண் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். கோயில்களின் தூய்மைக்கு சவால் விட்டிருக்கும் பாசிச வெறியர்களிடமிருந்து கோயில்களை எப்படி காப்பது என்று ஆன்மீக சான்றோர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான இறை விசுவாசம் இறையச்சம் இவர்களிடம் உள்ளதா என்று சான்றோர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். ராமருக்கு கோயில் கட்டப் போகிறோம் என்ற கோஷம் எல்லாம் வெறும் வேஷம்தான் என்று நமது இந்து சகோதரர்கள் விழிப்படைந்து வருகிறார்கள்.

நமது பிரதமர் எல்லா வகையிலும் வாய்ச்சொல் வீரராக மட்டும் இருந்து கொண்டு, உலக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கு பயங்கரவாத செயல்களும் தீவிரவாத செயல்களும் பாலியல் வன்கொடுமைகளும் என்கௌண்டர்களும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. மதசார்பற்ற ஜனநாயக நாடான இந்த நாட்டின் அரசியல் சாசனம்  மீறப்பட்டு, மதசார்பான செயல்பாடுகள் அரங்கேறி வருகின்றன. நமது பிரதமரின் மௌனமான செயல்பாடுகள் பாசிச சக்திகளுக்கு உந்து சக்தியைக் கொடுத்துள்ளதுடன் நாட்டின் அமைதியை கெடுத்து, எங்கும் வன்முறை, அமைதியின்மை என்ற நிலைமையை உருவாக்கி வருகிறது. நமது நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு தாரைவார்த்து விட்டார்களோ என்ற அச்சம் பரவி வருகிறது.
-எம்.ஏ. ஹாஜி முஹம்மது,
நிரவி


ஹாதியாவின் பதில்கள் மிக துல்லியமாக இருந்தது. உலகின் பல்வேறு மதங்களில் இருந்து அதிகமானவர்கள் இஸ்லாத்தை தழுவிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கேரளாவில் இஸ்லாத்தை தழுவுபவர்களுக்கு அங்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஏன் என்றால் அங்கு படித்தவர்கள் அதிகம். இப்படி இருக்க ஹாதியா இஸ்லாத்தை மட்டும் தழுவி இருந்தால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்காது. இதனை உலகம் முழுவதும் கொண்டு சென்றது சங்கபரிவார் கூட்டம்தான். இதற்கு என்ன காரணம்? ஹாதியா தேர்ந்தெடுத்த கணவர் ஒரு பிரபலமான இயக்கத்தைச் சேர்ந்தவர். அந்த இயக்கம் மிக அசுரமான வளர்ச்சியில் இருக்கிறது. அதை பாழ்படுத்த வேண்டும். அந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும். ஹாதியா விவகாரத்தை கையில் எடுத்து லவ் ஜிஹாத் என்று ஆரம்பித்து நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் சங்கபரிவார் திட்டங்களை தவிடு பொடியாக்கி விட்டார் ஹாதியா. ஹாதியாவின் மனதை மாற்றுவதற்கு ஒவ்வொரு குழுக்களாக மிரட்டும் தொனியில் அவரை சந்தித்து பயமுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஹாதியா மனதை தளரவிடாமல் இறைவனுடைய வசனங்களை மிக கெட்டியாகப் பிடித்து கொண்டார் என்பதை அவருடைய பதில்கள் மூலமாக அறிய முடிந்தது.
-உ.முஹம்மது அபுதாஹிர்,
கம்பம்.


பிரச்சனைகளை சற்று குறைக்க, முக்காடை நீக்கலாம் என்று நினைத்த ஹாதியாவின் மனதில் ஹிஜாபின்றி இருப்பது உடலில் ஒரு உறுப்பின்றி இருப்பதாக உணரவைத்த வல்ல அல்லாஹ்விற்கு புகழ் அனைத்தும்.

இஸ்லாத்தின் நெறியைப் பின்பற்றி வாழ்ந்துகாட்டிய அவரது அறை தோழிகளும் இஸ்லாத்தை இறுகப் பற்றிக்கொண்ட ஹாதியாவும் நம் பெண்களுக்கு ஒர் முன்னுதாரணம். நன்றி புதிய விடியலுக்கு!

-ஜித்தா ரியாஜ்,
புத்தாநத்தம்


சகோதரி ஹாதியா தன்னம்பிக்கை, துணிவு மூலம் இன்று சுதந்திரமாக தன் வாழ்க்கையை சரியானதாக அமைத்துக் கொண்டதற்கு எல்லாம் வல்ல இறைவன் மிகப் பெரிய துணை புரிந்துள்ளான். ஹாதியாவிற்கு துணை புரிந்து உதவி செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி பேட்டி அளித்து இருப்பது அவரின் விசாலமான அறிவுக்கு சான்று. இனக்கவர்ச்சி ஏற்பட்டு தடுமாறும் பெண்களுக்கு மத்தியில், இஸ்லாம் மீது மட்டும் ஆசை கொண்டு வந்த இம்மங்கையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க வளமுடன்.

பெண் குழந்தைகளை பேனுவோம். அவர்களுடன் புகைப்படம் எடுத்து பகிர்வோம் என்று பிரதமர் மோடி பல மாதங்களுக்கு முன் கூறியது அன்று பிரபலமானது. பல தந்தைமார்கள் பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். ஆனால் இன்று பெண் குழந்தைகளையும்,  மைனர் பெண்களையும் வன்புணர்ச்சி செய்வது பாஜக ஆளும் மாநிலங்களில் கொடூரமாக நடந்தேறி வருகிறது. தடுத்து, நீதி தர வேண்டிய பாஜக அரசோ, குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி தர மறுக்கிறது. நீதிமன்றங்களும், எதிர்க்கட்சிகளும் அழுத்தம் தந்தால்தான் வழக்கு என்று பாஜக மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்துவது சமுதாய சீர்கேடுகளுக்கு வழி வகுக்கும். பேசுவது பரிதாபம் செய்வது பச்சை துரோகம் என்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவினர் செய்து வருவது கடைந்தெடுத்த அயோக்கியதனம். பாஜகவினர் மதவெறியர்கள் என்றுதான் நினைத்து கொண்டு இருந்தோம். தற்போது நடந்து வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது, காம வெறியர்களை நினைத்து.

-எஸ்.கே. வாலி,
த.முருங்கப்பட்டி,
திருச்சி.


பாஜக அரசின் நான்கு ஆண்டுகால சாதனையை பறைசாற்றுகிறது பெண்களுக்கு எதிரான குற்றங்கள். அதிகார திமிரும், சதிகார திட்டமும், கத்துவா சிறுமியின் கொடூர மரணம் மூலம் வெளியே வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது வெட்கக் கேடானது. பெண்களின் பாதுகாப்பு மட்டுமின்றி நாட்டின் ஒட்டு மொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி விலக வேண்டும்.

-எம்.முஹம்மது கடாஃபி,
கொடிக்கால் பாளையம்.


கண்ணே ஆசிஃபா!

அழகு மிகுந்த கஷ்மீரின்

வண்ண மலர்களை பறிக்கவே

கைகள் மறுக்கும் போது

தளிராகிய உன்னை

கசக்கி சிதைத்திட கயவர்களுக்கு

எப்படி தோன்றியதோ?

உன்னை நினைக்கையில்

நெஞ்சம் பதறுகிறது

மாசற்ற உன் உள்ளத்தின்

ஆசைகளை நிர்மூலமாக்கிய

 

பாவிகளின் இருத்தல் இப்பிரபஞ்சத்துக்கு எத்தனை பெரிய பாதிப்பு ?

எப்படி உன் வதனத்தில்

காமம் தென்பட்டது ?

நீ இல்லை என்பது

பெருந்துயரம் என்றால்

உன்னை சிதைத்த அந்த

மாபாதகளுக்கு ஆதரவளிப்பதை

எங்ஙனம் ஜீரணிக்க இயலும் ?

முதிர்ச்சியற்ற வெறியர்களுக்கு

உன் வயது தெரியவில்லையென்றால்

உன் பால் மணம் மாறா

புன்னகையுமா தெரியவில்லை ?

செய்யாத குற்றத்துக்கு

நீ துயரை அனுபவித்து விட்டாய்

செய்த குற்றத்துக்கு

அக்கயவர்களுக்கு விரைவில்

தண்டனை கிடைக்கட்டும்

கண்ணே ஆசிஃபா!

உன் மரணத்தின் மூலமேனும்

இம்மானிடர்களின் உணர்வுகள்

புத்துணர்வு பெறட்டுமாக !

-வலிகளுடன்,
கவியாசகன்…


Comments are closed.